ஜெனீவா நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி


இறுதிக்கட்ட சண்டையின் போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையம் சமீபத்தில் தனது விசாரணை வரைவு அறிக்கையை வெளியிட்டது.

அதில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த யோசனையை ஏற்க மறுக்கும் இலங்கை, தங்கள் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசு மேற்கொண்ட தீவிர நல்லிணக்க நடவடிக்கைகள் காரணமாக நிலைமை பெருமளவில் மாறி இருப்பதாகவும், எனவே சர்வதேச நீதிபதிகள் குழு விசாரணை தேவை இல்லை என்றும், இந்த நிலைப்பாட்டுக்கு மற்ற நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறது.

தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 30-வது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக அமெரிக்க வரைவு தீர்மானம் ஒன்றை தயாரித்து உள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அமெரிக்காவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த வரைவு தீர்மானம், இலங்கைக்கு ஆதரவான அம்சங்களை கொண்டு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த தீர்மானம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பிறகு தீர்மானத்தில் மீது விவாதம் நடைபெறும். இந்த தீர்மானத்தில் நகல் ஏற்கனவே இலங்கையிடம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த வரைவு தீர்மானம் மீது கருத்து அறியும் சாதாரண கூட்டம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறை ஒன்றில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பான விவாதத்தில் பல்வேறு நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இலங்கையில் இருந்து முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் மற்றும் புலம் பெயர்ந்த மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அரசின் தூதர் ரவிநாத ஆர்யசின்கா, வரைவு தீர்மானத்தில் உள்ள அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதுபோன்ற செயல்பாடுகள் இலங்கையின் இறையாண்மையை பாதிப்பதாக கூறினார். கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக கடுமையான கருத்தை கொண்டிருந்த பல நாடுகள் இந்த முறை அத்தகைய கருத்தை வெளியிட தயக்கம் காட்டின.

இதற்கிடையே, ஜெனீவா நகரில் நேற்று பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும், இன அழிப்புக்கு நீதி கேட்டும் நடைபெற்ற இந்த மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியில் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்திருந்த தமிழர்கள் கலந்து கொண்டனர். ஜெனீவாவில் உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை சென்று அடைந்தது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *