வெளிநாட்டு நீதிபதிகள் மனித உரிமை மீறல் விசாரணையில் பங்கேற்க முடியாது


இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்த விசாரணையில், வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்க முடியாது என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகக் தெரிவித்தார்.
இதுகுறித்து கொழும்பில் அவர், ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:
இலங்கை அரசின் அரசியலமைப்பு சாசனத்துக்கு உட்பட்டே எனது தலைமையிலான அரசு செயல்படும். எங்கள் அரசியலமைப்பு சாசனப்படி, வெளிநாட்டு நீதிபதிகள் எங்கள் நாட்டை இயக்க முடியாது.
எனினும், சர்வதேச சட்ட நிபுணர்களை வரவேற்போம். ஆனால், அவர்களின் தலையீட்டின் எல்லையைப் பொறுத்து, எங்கள் நாட்டு அரசியலமைப்பு சாசனம் அவர்களுக்கு அனுமதி அளிக்கும்.
இதுதொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா விளக்கம் அளிப்பார்.
இந்த விவகாரத்தை சரியாக கையாண்டதால், கடந்த ஜனவரி முதல் முன்னாள் அதிபர் ராஜபட்ச, அவரது சகோதரர் கோத்தபய ராஜபட்ச ஆகிய இருவரையும் காப்பாற்றி வந்தேன்.
இலங்கையை சர்வதேச விசாரணை நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது ராஜபட்ச செய்த மிகப்பெரிய தவறு என்றார் அவர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே, கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இந்தப் போரில், அப்பாவித் தமிழர்கள் 40,000 பேரை இலங்கை ராணுவத்தினர் கொன்றதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் ஆகியவை குறித்து சர்வதேச நாடுகளின் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், விசாரணை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஜைய்த் ராத் அல் உசேன், கடந்த சில நாள்களுக்கு முன் கூறினார்.
ஆனால், அதற்கு மாறாக, பன்னாட்டு நீதிபதிகளுடன் கூடிய உள்நாட்டு விசாரணை அமைப்பே, விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
எனினும், இந்த விவகாரத்தை உள்நாட்டு அமைப்பே விசாரணை நடத்தும் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *