மொசூலில் 6 மாவட்டங்களை உக்கிரமான சண்டை நடத்தி ஈராக் படை மீட்டது


ஈராக் நாட்டில் ஐ.எஸ். அமைப்பினர் தங்கள் ஆதிக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டனர். இந்த நிலையில், அவர்கள் வசம் இருந்து வருகிற இரண்டாவது முக்கிய நகரமான மொசூல் நகரத்தையும் முழுமையாக மீட்டெடுத்து, அவர்களது ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட ஈராக் படைகள் கடந்த 20 நாட்களாக உக்கிரமான சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.

மொசூல் நகரில் நுழைந்து விட்ட ஈராக்கின் சி.டி.எஸ். என்னும் பயங்கரவாத தடுப்பு படையினர், ஐ.எஸ். அமைப்பினரின் கொட்டத்தை அடக்கி வருகின்றனர். அவர்களின் ஆக்ரோஷமான அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஐ.எஸ். அமைப்பினர் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 6 மாவட்டங்களை ஐ.எஸ். அமைப்பினரின் பிடியில் இருந்து ஈராக் பயங்கரவாத தடுப்பு படையினர் மீட்டு விட்டனர்.

அந்த மாவட்டங்கள் மலயீன், சமா, காத்ரா, கர்குக்லி, குத்ஸ், கரமா ஆகும். அந்த மாவட்டங்களில் ஈராக் கொடிகள் ஏற்றப்பட்டு உள்ளன.

இந்த சண்டையில் ஐ.எஸ். அமைப்பினருக்கு பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக ஈராக் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *