டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார் | ஹிலாரி தோல்வியை தழுவினார்


உலகிலேயே சக்திவாய்ந்த பதவியாக கருதப்படுவது அமெரிக்க ஜனாதிபதி பதவி. தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து வரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் (வயது 69), குடியரசு கட்சியின் சார்பில் தொழில் அதிபரான டொனால்டு டிரம்பும் (70) போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பிரசாரத்தின் போது ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

அமெரிக்காவில் மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றவர் ஆவார். மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாகாணத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஒரு மாகாணத்தில் ‘பாப்புலர் ஓட்டுகள்’ என்று சொல்லப்படும் மக்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கிறதோ, அவருக்கு அந்த மாகாணத்தின் தேர்தல் சபை வாக்குகள் அனைத்தும் கிடைத்துவிடும்.

தேர்தல் பிரசாரத்தின் போது குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் சில இடங்களில் பேசிய பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. குடியரசு கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பும் காணப்பட்டது. மேலும் கருத்துக்கணிப்புகளும் அவருக்கு எதிராகவே அமைந்தன.

ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பல மாகாணங்களில் முன்னணியில் இருந்த டிரம்ப், அதிக மாகாணங்களை கைப்பற்றினார். அதன்மூலம் அந்த மாகாணங்களின் மொத்த தேர்தல் சபை வாக்குகளையும் அவர் பெற்றார்.

கடைசியாக வெளியான முடிவுகளின்படி, மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் டிரம்புக்கு 276 தேர்தல் சபை வாக்குகளும், ஹிலாரிக்கு 218 தேர்தல் சபை வாக்குகளும் கிடைத்தன. மாகாணங்களைப் பொறுத்தமட்டில் டிரம்ப் 29 மாகாணங்களில் வெற்றி பெற்றார். ஹிலாரி 18 மாகாணங்களில் வெற்றி பெற்றார்.

பென்சில்வேனியா (20), புளோரிடா (29), அலாஸ்கா (3), உதா (6), அயோவா (6), அரிசோனா (11), விஸ்கான்சின் (10), ஜார்ஜியா (16), ஓஹியோ (18), வடக்கு கரோலினா (15), வடக்கு டகோடா (3), தெற்கு டகோடா (3), நெப்ராஸ்கா (5), கன்சாஸ் (6), ஓக்லஹாமா (7), டெக்சாஸ் (38), வியோமிங் (3), இண்டியானா (11), கெண்டக்கி (8), டென்னஸ்சி (11), மிசிசிபி (6), அர்கன்சாஸ் (6), லுசியானா (8), மேற்கு வெர்ஜீனியா (5), அலபாமா (9), தெற்கு கரோலினா (9), மான்டனா (3), இதாஹோ (4), மிசவுரி (10) ஆகிய 29 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

கலிபோர்னியா (55), நெவடா (6), ஹவாய் (4), இல்லினாய்ஸ் (20), நியூயார்க் (29), நியூஜெர்சி (14), மேரிலாண்ட் (10), கொலம்பியா (3), வெர்மாண்ட் (3), மசாசூசெட்ஸ் (11), கனெக்டிகட் (7), டெலவார் (3), கொலராடோ (9), நியூ மெக்சிகோ (5), வெர்ஜீனியா (13), ஓரேகான் (7), வாஷிங்டன் (12), ரோடு தீவு (4) ஆகிய 18 மாகாணங்களில் ஹிலாரி வெற்றி பெற்றார்.

அதிக மாகாணங்களை கைப்பற்றி கூடுதல் தேர்தல் சபை வாக்குகளை பெற்றதால் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

டிரம்பின் வெற்றியை அவரது ஆதரவாளர்களும், குடியரசு கட்சியினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

டிரம்பை, ஹிலாரி கிளிண்டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது:–

இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் மக்களுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் நான் ஜனாதிபதியாக இருந்து சிறந்த முறையில் பணியாற்றுவேன். தேர்தலின் போது நாம் மேற்கொண்டது பிரசாரம் அல்ல, அது ஒரு இயக்கம். அது அனைத்து தரப்பு மக்களுக்குமான இயக்கமாக அமைந்தது.

தேர்தல் முடிந்துவிட்டது. இனி நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நாடு முழுவதும் தேர்ந்து எடுக்கப்பட்ட குடியரசு கட்சியினர், ஜனநாயக கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் அனைவரும் இணைந்து செயல்பட்டு அமெரிக்காவை சீரமைத்து மேம்படுத்த வேண்டும்.

ஹிலாரி எனக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு எனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேசத்துக்காக பாடுபட்ட அவருக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

தேர்தல் பிரசாரத்தின் போது எனக்கு மிகவும் ஆதரவாக இருந்த எனது மனைவி மெலனியா, பெற்றோர், சகோதரர்கள், மகன்கள், மகள்கள் ஆகியோருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

அவர் பேசியபோது கூடி இருந்த ஆதரவாளர்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அரசியல் பின்னணி இல்லாதவர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பெரும் கோடீசுவரரான இவர் அரசியல் பின்னணி எதுவும் இல்லாதவர். என்றாலும் குறுகிய காலத்தில் குடியரசு கட்சியின் வேட்பாளராகி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.

ஆனால் இவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி அரசியல் அனுபவம் மிக்கவர். ஒபாமா அரசில் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். ஹிலாரியின் கணவர் கிளிண்டன், இருமுறை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்து உள்ளார். ஹிலாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியை தழுவியது ஜனநாயக கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹிலாரி தோல்வி அடைந்ததை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 6–ந் தேதி நடைபெறும் அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் முறைப்படி அறிவிக்கப்படுவார். அப்போது துணை ஜனாதிபதியும் அறிவிக்கப்படுவார். அதன்பிறகு ஜனவரி 20–ந் தேதி டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்வார். பாராளுமன்ற வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும். அதுவரை தற்போதைய ஜனாதிபதி ஒபாமா பதவியில் தொடருவார்.

டிரம்ப் அமெரிக்காவின் 45–வது ஜனாதிபதி ஆவார். 70 வயதாகும் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *