‘அணு ஒப்பந்தத்தை மீறிய செயல்’ | அமெரிக்காவின் பொருளாதார தடை நீட்டிப்பு ஈரான் கடும் கண்டனம்


ஈரான் அணு ஆயுதங்கள் உற்பத்திக்காக, அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. அதன்பேரில், ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

ஆனால் அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய 6 நாடுகளுடன் ஈரான் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தி வரலாற்றுச்சிறப்புமிக்க அணுசக்தி உடன்பாட்டை செய்து கொண்டது.

இந்த உடன்பாடு, ஈரான் அணு உலைகளை ஐ.நா. பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கிறது. ஈரான் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் எனவும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

ஆனால் ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பாஹ்ரம் காசெமி கூறியதாவது:–

2015–ம் ஆண்டு ஈரானுக்கும், அதிகாரம் மிகுந்த 6 நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை மீறுகிற வகையில் ஈரான் மீதான பொருளாதார தடையை மேலும் 10 ஆண்டுகளுக்கு அமெரிக்க செனட் சபை நீட்டித்துள்ளது. இது ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகும். அணுசக்தி ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் விதத்தை கண்காணித்து வருகிற, ஈரான் குழுவிடம் இதுபற்றி புகார் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *