மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம் | லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தியை அறிந்ததும் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது. அ.தி.மு.க.வினர் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதாவின் உடல் ஆம்புலன்ஸ் வேனில் இரவு 2.15 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று அதிகாலை ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் அவரது இல்லத்தில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்துக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு காலை 6 மணி முதல் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

ஜெயலலிதா உடலுக்கு பச்சை நிற பட்டுச் சேலை கட்டப்பட்டு இருந்தது. கைக்கெடிகாரம், கழுத்தில் தங்க சங்கிலி, காதில் வைர கம்மல், கைகளில் வளையல்கள், கை விரல்களில் மோதிரம் ஆகியவை அணிவிக்கப்பட்டு இருந்தன.

ஜெயலலிதாவின் உடல் மீது முதலில் அ.தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு இருந்தது. பின்னர் அரசு மரியாதை செலுத்தும் வகையில், கட்சி கொடி அகற்றப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் அருகே தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் இறுகிய முகத்தோடும், கண்ணீரோடும் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதார். அமைச்சர்கள் உடல் அருகே நின்றிருந்தனர்.

காலை 6 மணி முதல் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அஞ்சலி செலுத்துவதற்காக காலையில் இருந்தே பொதுமக்கள் சாரை, சாரையாக ராஜாஜி மண்டபத்தை நோக்கி வரத்தொடங்கினார்கள். கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவின் முகத்தை பார்க்காத அ.தி.மு.க.வினர் அவரை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் கண்ணீரும், கம்பலையுமாக வந்தனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். லட்சக்கணக்கானோர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தவும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தவும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், கார்த்தி, சத்யராஜ், உதயநிதி மற்றும் சரோஜாதேவி, நயன்தாரா, குஷ்பு, சிம்ரன், கவுதமி உள்ளிட்ட ஏராளமான நடிகர்-நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நேரம் செல்லச் செல்ல அஞ்சலி செலுத்துவதற்காக வந்த கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். பொதுமக்களும், தொண்டர்களும் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பலர் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.

அஞ்சலி செலுத்தி முடிந்ததும் மாலை 4.17 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டி மூடப்பட்டு முப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை முப்படை வீரர்கள் சுமந்து சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றினர். அந்த வாகனம் ராணுவ வாகனத்துடன் இணைக்கப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் முப்படை வீரர்கள் ஏறினார்கள்.

ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் மாலை 5.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நினைவிடம் முன்பு வந்து நின்றது. பின்னர், வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவின் உடல் இறக்கப்பட்டு, உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. முப்படை வீரர்கள் அவரது உடல் இருந்த பெட்டியை சுமந்து சென்றனர்.

அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் சுமார் 40 அடி தூரத்தில், ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. குழிக்கு வெளியே ஜெயலலிதாவின் உடலை வைப்பதற்காக சந்தன பேழை தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது.

பின்னர், இந்து முறைப்படி ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதில் சசிகலா, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் ஆகியோர் கலந்துகொண்டு பால் ஊற்றி, உப்பு, பூக்கள் தூவி இறுதிச் சடங்குகளை செய்தனர். அதன் பின்னர், மாலை 6 மணிக்கு சந்தன பேழைக்குள் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. அவரது உடலில் அணியப்பட்டு இருந்த எந்த ஆபரணமும் அகற்றப்படவில்லை. பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கின. அதனைத் தொடர்ந்து, மாலை 6.05 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்ட பெட்டி, குழிக்குள் கயிறு மூலம் மெதுவாக இறக்கப்பட்டது.

சசிகலா உள்ளிட்டோர் குழியை சுற்றி வந்து ரூபாய் நோட்டு, சந்தன மரத்துண்டு ஆகியவற்றை குழிக்குள் போட்டு சில சடங்குகளை செய்தனர். அதன்பின்னர், குழி மூடப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்கள் தூவப்பட்டன. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெற்றது.

பின்னர், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் விரைவில் நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *