சூடான் அரசு அந்நாட்டின் ஒன்பது செய்தித்தாள்களை முடக்கியது


சூடான் அரசு, அந்நாட்டின் ஒன்பது செய்தித்தாள்களை முடக்கி, அதில் நான்கு செய்தித்தாள்களின் வெளியீட்டு உரிமையை ரத்து செய்துள்ளது. சூடானின் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள், இந்த செய்தித்தாள்களில் வெளியிடப்படும் கட்டுரைகள், அவதுாறாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

முடக்கப்பட்டவைகளில், அல்-சுடானி, அல்-ஜரிதா, அகிர் லாசா, அல்-இண்டிபாஹா, அல்-ராய் அல்-ஆம், அல்-தாயர், அல்-கார்தோம், அல் -யோம் அல்- தாலி போன்ற செய்தி தாள்கள் அடக்கம். இவற்றில், அல்-ஜரிதா, அகிர் லாசா, அல்-இண்டிபாஹா, அல்- கார்தோம் செய்தித்தாள்களின் ஆசிரியர்களை, தேசிய பாதுகாப்பு துறை அழைத்து, அதன் வெளியீட்டு உரிமை ரத்து செய்யப்பட்ட விஷயத்தை தெரிவித்தது. இது போன்ற நடவடிக்கைகள் சூடானில் சகஜம்தான் என்றாலும், ஒரே நேரத்தில் இத்தனை செய்தித்தாள்கள் முடக்கப்பட்டிருப்பது இதுதான் முதன்முறை என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

இது பற்றி, அல்-கார்தோமின் முதன்மை ஆசிரியர் அல்-பகிர் அகமது அப்துல்லா கூறியதாவது: நுகர்வோர் உரிமைக்கான கூட்டம் ஒன்றில், பள்ளிகள், நர்சரிகள், பேருந்துகளில் சிறுவர்கள், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது குறித்து ஒருவர் பேசியதை முன்வைத்து, எழுதிய கட்டுரைக்காக என்னுடைய செய்தித்தாள் தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.செய்தித்தாள்கள் தடைசெய்யப்பட்டதற்காக, பத்திரிகையாளர்களும், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உரிமைகள் குழுக்களும், சூடான் அரசு, பத்திரிகைகளின் சுதந்திரத்தை முடக்க முயற்சிக்கிறது என, குற்றம்சாட்டி உள்ளன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *