சுனாமி நினைவு தினம் | இந்தோனேசியாவில் கண்ணீர் அஞ்சலி


பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய நாடுகளைத் தாக்கிய சுனாமியில் பலியான 2.2 லட்சம் பேருக்கு, அதன் நினைவு நாளான வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி 9.3 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக உருவான சுனாமி, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, சோமாலியா உள்ளிட்ட 14 நாடுகளின் கடற்கரைகளில் கோரத் தாண்டவமாடியது.

அந்த மாபெரும் சோகத்தின் 10-ஆவது நினைவு தினத்தையொட்டி, நிலநடுக்க மையப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்தோனேசியாவின் பண்டா ஆசே நகரில் வெள்ளிக்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நகரில் 20 ஏக்கர் பரப்பளவிலான பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுனாமியின் துயர அனுபவங்களை அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

சுனாமிக்குப் பிறகு கடலிலிருந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அடையாள அட்டைகள், வங்கி அட்டைகளை செஞ்சிலுவைச் சங்கம் காட்சிக்கு வைத்திருந்தது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

தெற்கு தாய்லாந்தில் உயிரிழந்த 5,300 பேரில், ஏறத்தாழ பாதி பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.

கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தாய்லாந்து கடற்கரை வாசஸ்தலங்களுக்கு வந்திருந்தபோது அவர்கள் சுனாமி தாக்கி உயிரிழந்தனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *