ஆளும் கூட்டணியிலிருந்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகல்


ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் வரும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்கப் போவதாகவும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும் சட்டத் துறை அமைச்சருமான ரவூஃப் ஹகீம் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்த விவரம்:

ஒரு நபர், 2 முறைக்கு மேல் இலங்கை அதிபர் பதவி வகிக்க முடியாது என்கிற விதிமுறையை அகற்ற சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த கருத்து வேறுபாட்டினால் ஆளும் கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.

எனது சட்டத் துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்ரி ஸ்ரீசேனாவுக்கு ஆதரவளிக்க இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினருடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளோம் என்றார் அவர்.

முந்தைய அதிபர் தேர்தலின்போது இக்கட்சி ராஜபட்சவுக்கு எதிராகப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இலங்கை அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *