பெண்ணுரிமைக்கு ஆணின் பங்கும் அவசியம்


ஹாலிவுட் மாயாஜாலப் படமான ஹாரி பாட்டர் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதாபாத்திரங்களில் ஒன்று ஹாரி பாட்டரின் அன்புத் தோழி ஹெர்மியான். ஒன்பது வயதில் ஹெர்மியானாக நடிக்க ஆரம்பித்த சிறுமி, எம்மா வாட்சன் இன்று இளம் பெண்ணாக வளர்ந்து நிற்கிறார். உருவத்தில் மட்டுமல்ல சிந்தனையிலும் மிக அழகாக வளர்ந்து காட்சி அளிக்கிறார்.

 

அவளுக்காக அவன்

இன்று எம்மா வாட்சன் ஒரு பிரபல நடிகை மட்டுமல்ல; ஐ.நா. சபையின் பெண்கள் நல்லெண்ணத் தூதராகவும் உருவெடுத்திருக்கிறார். ஐ.நா. சபையில் சமீபத்தில் பேசிய எம்மா வாட்சன், பெண்ணியம் குறித்த தன் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது ‘அவளுக்காக அவன்’ என்னும் பரப்புரையை முன்வைத்துப் பேசினார். உலகம் முழுவதும் இருக்கும் ஆண்களும் சிறுவர்களும் பாலினச் சமத்துவ இயக்கத்தில் ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும் என ஆணித்தரமாகவும் உருக்கமாகவும் அழைப்பு விடுத்தார். இது மீண்டும் அனைவரையும் எம்மா வாட்சன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

 

நீங்கள் யார்?

“பாலினம் என்பதை இரண்டு எதிர் எதிர் இனம் குறித்த சித்தாந்தமாகப் பார்க்காமல் அதன் மூழு வீச்சையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆணும் பெண்ணும் ‘இது நான் அல்ல, அது நான் அல்ல’என எதுவாக நாம் இல்லையோ அதைப் பற்றிப் பேசுவதை விடுத்து, நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பற்றி விவரிக்கத் தொடங்க வேண்டும்” என ‘அவளுக்காக அவன்’ கூட்டத்தில் பேசியிருக்கிறார் எம்மா வாட்சன்.

பெண்ணியம் என்பது ஆண்களை வெறுப்பதல்ல, ஆண்களும் பெண்களும் இணைந்து ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் போராடுவதேயாகும். குறிப்பாக ஆணும் பெண்ணும் ஒரே விதமான வேலை பார்க்கும்போதும் பல இடங்களில் பெண்களுக்கு மட்டும் குறைந்த ஊதியம் அளிக்கப்படுகிறது. பெண் என்பதால் கல்வி மறுக்கப்படுகிறது.

குழந்தைத் திருமணம் என்னும் சமூகக் கொடுமை இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட பாகுபாடுகளைத் தகர்க்கப் பாலின வேற்றுமை கடந்த ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தொடங்க வேண்டும்” என்று தன் கருத்துக்களை முன்வைத்தார் எம்மா.

 

“பெண்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்னும் சிந்தனை ஜோதியை ஒவ்வொரு ஆணும் தன் மனதில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் அந்த ஆணின் மகள்கள், தங்கைகள், தாய்மார்கள் ஆண்–பெண் ஏற்றத்தாழ்வில் இருந்து விடுதலை பெற முடியும். ஆண்களும் தங்கள் பலவீனங்களை உணர வேண்டும். அந்தத் தருணத்தில் ஆண், பெண் இருவரும் முழுமை பெறுவார்கள்” என தன் உரையை முடித்த வாட்சனுக்கு ஐ.நா சபையில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி ஆதரவு தெரிவித்தார்கள்.

 

 

 

 

நன்றி : இணையம் |  ம. சுசித்ராLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *