கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 1 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

கனவுகள் சில பலிக்கும். இன்னும் சில நிறைவேறாது. இது இயல்பு. எல்லோரையும் போல எனக்கும் பல கனவுகள் இருந்தன. சில நிறைவேறின. பல நிறைவேறாது கடந்து போயின. கடல் கடந்து வந்து கற்க ஆசை கொண்டேன். பலிக்கவில்லை. க.பொ.த.(உயர் தரம்)முடித்தாயிற்று. இனியென்ன? உத்தியோக வேட்டை தான். பலப் பல விண்ணப்பங்கள், பல சோதனைகள். நண்பர்கள் ஒவ்வொருவராக வங்கியிலும் தொழில் நுட்பத்துறையிலும் உத்தியோகம் பெற்று விலகிச் சென்றனர்.

கடல் கடந்து சென்று கற்கவும் சிலர் சென்றனர். நண்பர்கள் வட்டம் நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வந்தது. அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற  Radiographer பரீட்சையில் சித்தியெய்தியும் அரசியற் காரணங்களால் கிடைக்க இருந்த வேலையும் நழுவிப் போயிற்று. அந்தவருடம் சித்தியடைந்தவர்கள் 52 பேர் மட்டுமே. தற்காலிக வேலை ஒன்றைச் செய்து சில காலம் போயிற்று. ஐயாவின் உத்தியோகத்திற்கு உதவுவதாலும், நெற்செய்கையில் உதவுவதாலும் நேரம் போவதும் காலம் போவதும் தெரியவில்லை. இரவுகள் கனதியாக மாறின. கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. நெஞ்சில் விரக்தி குடி கொள்ளலாமா? என்று விசாரித்தது.

இந்த நேரத்தில் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த அண்ணனுக்கு, இறுதியாண்டு நடந்து கொண்டிருக்கும் போது அஞ்சலதிபர் வேலை கிடைத்தது. 10ஆம் திகதி-மார்ச் மாதம் -1972 வந்து கடமையேற்று பயிற்சிக்கும் போகும்படி கடிதம். இரவில் கடமையைச் செய்து கொண்டு பகலில் படிப்பது என்ற தீர்மானம்.

9ஆம் திகதி கொழும்புக்கு செல்வதற்காக ஐயா லீவும் எடுத்து புகையிரத்த்திற்கு வாறன்டும் எடுத்துவிட்டார். அண்ணன் பல்கலைக்கழகத்தில் படித்தபடி உத்தியோகமும் பெறப்போகின்றார். தங்கை தனக்கு பிடித்தவரையே திருமணம் செய்து நிம்மதியாக வாழ்கின்றார்கள். ஆக, என்னை நினைத்துத்தான் ஐயாவிற்கும் அம்மாவிற்கும் கவலை.

இந்த நிலையில் தான் எதிர் பாராத விதமாக அந்த தந்தி வந்தது. 8ஆம் திகதி-மார்ச் மாதம்-1972 அன்று மன்னார் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்று ஆசிரியராக இணையும் படி அந்த தந்தி கூறியது. ஐயாவிற்கும் அம்மாவிற்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

மகிழ்ச்சியில் திழைத்த அம்மாவிற்கு, இவன் ஆசிரியர் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டுமே என்ற பயம் ஏற்பட்டுவிட்டது. தான் ஜே.எஸ்.ஸி மட்டும், மீசாலையிலிருந்து சங்கத்தானைக்கு நடந்து சென்று, ஆசிரியையாக வேண்டும் என்ற கனவுடன் படித்ததையும் சோதனை  எடுக்க முன்னர் ஐயாவிற்கு திருமணம் செய்து கொடுத்து விட்ட தன் பெற்றோரைப் பற்றியும் சொன்னார்.

பெரிய பரந்தன் பாடசாலை வைத்தீஸ்வரக்குருக்கள் பென்சன் எடுத்த பின்னர் படும் பாட்டைப்பற்றியும் கூறினார். கடைசியில் “தம்பி,மன்னார் எங்கள் ஊரை விட பின் தங்கிய பகுதி. ஒரு நாளும் அந்தப்பிள்ளைகளுக்கு கல்வி கிடைப்பதில் கடமை தவறிவிடாதே” என்று கூறினார். அவர் கூறிய படியே நான் எனது ஆசிரியர் வாழ்வில் என்றும் பிள்ளைகளுக்கு கற்பிப்பதில் வஞ்சனை செய்ததில்லை.

image0232

மார்ச் மாதம் 8ஆம் திகதி 1972 ஆண்டு அதிகாலையில், ஐயா ஒழுங்குபடுத்தியிருந்த வாடகைக்காரில் ஐயாவும் நானும் பூனகரி ஊடாக மன்னார் நோக்கிப்புறப்பட்டோம். பொழுது புலரும்போது தேவாரம் பாடப்பட்ட பாலாவியில் குளித்து திருக்கேதீஸ்வரப்பெருமானின் காலைப்பூஜை பார்த்தோம்.

thumbnail_IMG_1134 மன்னார் நகரம் விழிக்க முன்னர், நாங்கள் மன்னார் மாவட்ட கல்வி அலுவலகத்தின் வாசலில் நின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக அலுவலர்கள் வந்தார்கள். பிரதம லிகிதர், சான்றிதழ்களை சரிபார்த்து, நியமனக் கடிதத்தை தயாரித்து வைத்துக்கொண்டார். பிரதம கல்வி அதிகாரி வந்ததும் யாவற்றையும் சரி பார்த்து,  ஒப்பமிட்டு, மன்/இலகடிப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தராதரப்பத்திரமற்ற விஞ்ஞான/கணித ஆசிரியராக நியமனக்கடிதத்தை வழங்கினார்.

அங்கிருந்து ஐயா நேரே மன்னார் கச்சேரிக்கு கூட்டிச் சென்றார். கிளிநொச்சியில் கடமை புரிந்து மன்னாருக்கு மாற்றலாகி வந்த அலுவலர்களெல்லாம் மகாலிங்கம் விதானையார் வந்துள்ளார் என்று அறிந்து ஓடி வந்து விட்டனர். கச்சேரி கன்ரீனிலேயே எனக்கு சாப்பாட்டுக்கு ஒழுங்கு படுத்தினர். எனக்கு தங்குவதற்கு ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும் வரை தங்களுடன் குவாட்டர்ஸில தங்கலாம் என்று ஆலோசனை வழங்கினர். தங்களுக்குள் கதைத்து மூன்று பேர் எங்களுடன் பாடசாலைக்கு வருவதற்காக காரில் ஏறிவிட்டனர்.

பாடசாலை உயிலங்குளம்—நாநாட்டான் வீதியில் மணற்குளம் கிராமத்திற்கு அடுத்த பாலைக்குளிகிராமத்தில் அமைந்திருந்தது. எங்கள் கார் போய் நின்று, எங்களுடன் கச்சேரி அலுவலகத்தினரும் தொடர்ந்து இறங்க பாடசாலையில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எனது வருகை அவ்வளவு முக்கியமானதா? என்று ஒரு கணம் திகைத்து விட்டேன். பாடசாலையைத் தரிசிக்க திடீர் அலுவலர்கள் குழு வந்துவிட்டது? என்று கருதியே அந்த பரபரப்பு என்று பின்னர் ஆசிரியர்கள் கூறி சிரித்தார்கள்.

என்னை கையொப்பமிட்டு கடமையை ஏற்கும்படி கூறிவிட்டு ஐயா, நண்பர்களுடன் பாடசாலைக்கு அண்மையில் எனக்கு தங்குவதற்கு இடம் கிடைக்குமா? என்று விசாரிக்க சென்றுவிட்டார். கடமை ஏற்கும் கடிதங்களை மூன்று பிரதிகளில் கொடுத்து, வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட்டுவிட்டு, சம்பவத்திரட்டுப்புத்தகத்தில் அதிபர் காட்டிய இடத்திலும் ஒப்பமிட்டு  நிமிர்ந்த எனக்கு முதல் அதிர்ச்சி அதிபரிடமிருந்து கிடைத்தது. தற்காலிக நேர சூசியைத் தந்த அதிபர் சொன்னார் “யாழ்ப்பாணத்திலிருந்து யாருக்கு ஆக்கினை செய்ய வந்திருக்கிறீரோ? தெரியவில்லை.”

பாடசாலையின் முதல் நாள் இவ்வாறு ஆரம்பித்தது. ஆனால் நான் பயந்து விடவும் இலலை.  ஊக்கம் இழந்து விடவும் இல்லை. இதே பாடசாலையில் கடமை புரிந்து, இதே அதிபருக்கு எனது விசுவாசமான சேவையைப்பற்றி புரிய வைப்பது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

தொடரும்….

naban மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *