கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 11 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

தேசிய கட்சிகள், தமிழ் மக்களையும் தலைவர்களையும் ஏமாற்றி விட்ட காலமது. அதனால் தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்த சூழ்நிலை. மன்னாரிலும் அந்த அலை வீசியது.

வங்காலையைச் சேர்ந்த திரு. சூசைதாஸன் புதிதாக அரசியலுக்கு வந்திருந்தார். நன்கு கற்றவர். அதிர்ந்து பேசாதவர். திருக்குறளையும் பழமொழிகளையும் பொருத்தமாக பயன்படுத்தி மேடைப் பேச்சில் ஒரு புதிய பாணியை உருவாக்கியவர். அவரது வெற்றிக்கு, வங்காலையைச் சேர்ந்த இன்னொருவரே தடையாக இருந்தார்.

வைத்தியர் திரு.ஜோன் மார்க் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றவர். சிறந்த பரம்பரை வைத்தியர். கிராமங்களுக்கு நேரிலேயே சென்று, மக்களுடன் நன்கு பழகி, வைத்தியமும் செய்வார். கைராசி மிக்க வைத்தியர் என்று பெயர் பெற்றவர். வங்காலையில் அவரது உறவினரும், நண்பர்களும், வைத்திய உதவி பெற்றவர்களும் அவருக்குத் தான் வாக்களிக்கப்  போகின்றார்கள்.

sri_lanka

கிராமத்தில் பல பிள்ளைகளுக்கு அவர் தொட்டப்பா. எங்கள் கிராமத்திற்கு, அவர் தேடி வந்து வைத்தியம் செய்வதை நான் நேரில் கண்டிருக்கின்றேன். கிராம மக்கள் அவர் மீது அளவில்லா அன்பு கொண்டிருந்தனர். கிராம மக்களும் அவருக்குத் தான் வாக்களிக்கப் போகின்றார்கள். ஆனாலும் அவருக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அவர் வாக்குகளைப் பிரிப்பதனால் தானும் தோற்று, திரு.சூசைதாஸனின் வெற்றி வாய்ப்பையும் தடுக்கப் போகின்றார் என்பதே நிதர்சனம்.

ஜனாப் றகீம் மன்னார் நகரைச் சேர்ந்தவர். சிறந்த சமூக சேவகர். அனுபவப்பட்ட அரசியல்வாதி. ஐக்கிய தேசிய கட்சி என்ற தேசிய கட்சியைச் சேர்ந்தவர். முஸ்லீம், தமிழர் என்ற வேறுபாடு பார்க்காதவர். அதனால் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அவருடன் நின்றனர். ஐ.தே.கட்சியில் இருந்ததனால் இரண்டு சமூகத்திலும் சிலருக்கு அரசாங்க வேலை வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

மக்களுடன் அன்பாக பேசி பழகுபவர். ஜனாப் றகீம் நல்ல மனிதர் என்ற போதும், அவர் சார்ந்த கட்சி தமிழருக்கு நன்மை செய்யாத கட்சி என்பது அவருக்கு பாதகமாக இருந்தது. அன்று உண்மையான போட்டி திரு.சூசைதாஸனுக்கும் ஜனாப் றகீம் அவர்களுக்கும் தான்.

எங்கள் அதிபராக இருந்த திரு.அலெக்சிஸ் பெர்னாண்டோ வங்காலையைச் சேர்ந்தவர். அவர் திரு.சூசைதாஸனை ஆதரித்தார். திரு.சம்சுதீன் ஆசிரியர் வெளிப்படையாக ஜனாப் றகீம் அவர்களை ஆதரித்தார். நான் கிளிநொச்சியில் இருந்து வந்தவன். மன்னாரைப் பற்றி எனக்கென்ன என்று என்னால் இருக்க முடியவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு தர மனம் விரும்பியது. ஏனைய ஆசிரியர்கள் தமது விருப்பு, வெறுப்பை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

நானும் சற்று அரசியலில் ஈடுபட்டேன். திரு.சூசைதாஸனின் வெற்றியில், இராமருக்கு அணைக்கட்ட அணில் உதவியது போல,எனக்கும் ஒரு மிகச்சிறிய பங்கு உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் திரு.சூசைதாஸனுக்கு அன்றும் என்னைத் தெரியாது. இன்றும் தெரியாது. எந்த சுய நலனுமற்று, தமிழர் நலனை மட்டும் எண்ணி கடமையைச் செய்தேன். ஆனால் ஜனாப் றகீம் அவர்கள் என்னைப்பற்றி அறிந்திருந்தார்.

மன்னாருக்கு கடமை நிமித்தம் வருபவர்கள், குடும்பத்தை ஊரில் விட்டு விட்டு தனியே திங்கள் வந்து, வெள்ளி திரும்பிச் செல்பவர்களாக இருந்தார்கள். குடும்பமாக வந்தவர்களும் மன்னார் நகரில் வீடெடுத்து தங்கி, அங்கிருந்து வேலைத்தலங்களுக்கு செல்பவர்களாக இருந்தார்கள்.

குடும்பமாக கிராமத்தில் வந்து தங்கி, சேவை செய்த முன்னோடிகளாக நாங்கள் இருந்தோம். இதற்கு என் மனைவிக்கு தான் நன்றி கூற வேண்டும். அவர் கிராமத்திற்கு வருவதற்கு மறுத்திருந்தால், எனது முழு கவனத்தையும் பாடசாலையின் வளர்ச்சியிலும் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் செலுத்தியிருக்க முடியாது.

தங்கள் பாடசாலைக்கும் பிள்ளைகளுக்கும் நான் செய்த சேவை காரணமாக கிராம மக்கள் எதற்கும் என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். நான் கூறும் ஆலோசனைகளையும் முழு நம்பிக்கையுடன் ஏற்றார்கள்.

முதலில் இளைஞர்களுடன் கதைத்தேன். திரு.ஜோன் மார்க் உயர்ந்தவர் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன். அவருக்கு வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவு என்பதை தெளிவு படுத்தினேன். வாக்கு பிரிவதனால் திரு.சூசைதாஸனின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட, தமிழர் மீது அக்கறையற்ற கட்சி வெற்றி வாய்ப்பைப் பெறும் என்பதை உணர்த்தினேன். அவர்களில் பலர் என் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். பெரியவர்கள் இரண்டு மனத்தில் இருந்தார்கள். உண்மையை உணர்ந்தாலும் திரு.ஜோன் மார்க் இற்கு கொடுத்த வாக்கை மீற தயங்கினார்கள்.

இப்படி இருக்கும் போது, திரு.சூசைதாஸனின் பொதுக்கூட்டம் சூரியகட்டைக்காடு என்ற அயல் கிராமத்தில் நடைபெற இருந்தது. கிராம மக்கள் யாவரும் ரக்டர் பெட்டியில் ஏறி கூட்டத்திற்கு சென்றனர். நானும் மனைவியும் தொம்மை மாஸ்டரின் குடும்பத்தினருடன் அவரது ரக்டரில் ஏறி, அந்த கூட்டத்திற்கு சென்றோம்.

hqdefault

அங்கு திரு.சூசைதாஸனின் அன்றைய பேச்சு கிராம மக்களின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. எங்கள் கிராமத்து பெரியோர்கள் என்னிடம்”மாஸ்டர் நீங்கள் சொன்னது சரி தான்” என்று கதைக்கத் தொடங்கினார்கள். மணற்குளம், பாலைக்குளி, காத்தான்குளம் என்ற மூன்று கிராமங்களிலும்  நிலமை மாறிவிட்டது.

இப்படி இருக்கும் போது ஜனாப் றகீம் அவர்கள் தம்மை வந்து ஒரு முறை சந்திக்கும் படி செய்தி அனுப்பியிருந்தார். திரு.சம்சுதீன் ஆசிரியர் என்னுடன் கூட வர, ஜனாப் றகீம் அவர்களின் அலுவலகம் சென்றேன். அங்கு, நான் வருவேன் என்று எதிர்பார்த்து, எனக்கு ஏதாவது கரைச்சல் ஏற்படுமோ? என்று எண்ணி அணிஸ் மாஸ்டரும் வந்து வெளியே காத்திருந்தார்.

presidential_election_2010_l

ஜனாப் றகீம் அவர்கள் என்னை எதிர் கொண்டு அழைத்தார். தான் மன்னார் மக்களுக்காக செய்தவற்றையும் செய்ய இருப்பதையும் கூறினார். தேசிய கட்சி தமிழ் மக்களுக்கெதிராக ஏதாவது செய்தால், தான் கட்சிக்குள்ளே இருந்து போராடுவேன் என்றும் கூறினார். “நீங்கள், இன வேறுபாடு பார்க்காதவர் என்றும் சிறந்த ஆசிரியர் என்றும் நான் அறிவேன். இது வரை செய்தது பற்றி பிரச்சினையில்லை. இனி எனக்கு எதிராக கதைக்காமல் இருப்பீர்களா?” என்று வினயமாக கேட்டார்.

கிராம மக்களுடன் கதைக்க வேண்டியதையெல்லாம் கதைத்தாயிற்று. அந்த நல்ல மனிதரை ஏன் வருத்த வேண்டும் என்று கருதி நான் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன். அவரது கோரிக்கைகளில் என்னை அச்சுறுத்தும் தன்மை எதுவும் இல்லை. அணிஸ் நினைத்த அளவிற்கு, ஜனாப் றகீம் இல்லை. அவர் உண்மையிலேயே ஒரு கனவான் தான். நான் தனிப்பட்ட உதவி எதனையும் பெற மாட்டேன் என்பதை புரிந்து கொண்ட அவர், எனது பாடசாலைக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால், கேளுங்கள் என்றும் கேட்டார். பஸ் நிலையம் வரை, அணிஸ்ஸும் சம்சுதீனும் வந்து அனுப்பி வைத்தனர்.

திரு.சூசைதாஸன் அவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மை  பெற்று வெற்றி பெற்றார். யார் வென்றும் என்ன? தமிழ் நாட்டின் காவேரி பிரச்சினை போல, எங்களின் இனப்பிரச்சினையும் எங்கள் காலத்தில் தீரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *