கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 12 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

மன்னார் மாவட்டத்தில் மலைவளம் இல்லை தான். மழை வீழ்ச்சியும் குறைவு தான். மழை வீழ்ச்சி குறைவை, கட்டுக்கரைக்குளம் நிவர்த்தி செய்கின்றது. ஆனால் கடல்வளமும் காட்டு வளமும் கொட்டி கிடக்கின்றன. நில வளமும் நிறைந்திருக்கின்றது. முருங்கன், நாநாட்டான். செம்மண்தீவு, ஊற்றுவாயன்குளம், பரப்பாங்கண்டல், உயிலங்குளம், மணற்குளம், பாலைக்குளி, முதலைகுத்தி, காத்தான்குளம், சூரியகட்டைக்காடு, அடம்பன் எல்லாம் பொன் விளையும் பூமிகள்.

நானும் பெரியபரந்தன் கிராமத்தில் வயல்களுக்கு நடுவே வாழ்ந்தவன் தான். உழவு, வரம்பு கட்டல், வரம்பு செருக்கல், தைப்பு, பலகையடிப்பு, அறுவடை, சூட்டிப்பு எல்லாம் தெரிந்தவன் தான். ஆனால் மன்னாரில் வேளாண்மை செய்யும் முறையே வேறு.

thumbnail_IMG_1592

கட்டுக்கரைக்குளம் நிறைந்த பின்னரே வேளாண்மையை ஆரம்பித்தனர். வயல்களில் புற்கள், முதற்போக நெல்லின் அடிக்கட்டைகள், செடிகள் குவிந்து போய், ஒரே குப்பை போல காணப்படும். அந்த வயல்களுக்கு நீர் பாய்ச்சுவார்கள். பின்னர் வீல்(wheel) பூட்டிய உழவு இயந்திரம் கொண்டு உழுவார்கள். செடி, புல், நெல்லின் கட்டைகள் எல்லாம் குமைந்து வரும்.

மூன்று, நான்கு நாட்கள் அவற்றை நீரில் ஊற விடுவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை வீல் பூட்டிய உழவு மிசினால் உழுவார்கள். இதனை சேத்தடி என்று சொல்வார்கள். புல், பூண்டுகள் அழுகி மணக்கும். பெரும்பாலனவை மண்ணுடன் கலந்து விடும். உக்காது நீட்டிக்கொண்டிருப்பவற்றை அள்ளி வரம்பில் வைப்பார்கள். வரம்பை கட்டிக் கொள்வார்கள். வயலை சமன்படுத்திக் கொள்வார்கள். வேறொரு, சிறந்த இடத்தில் முளைக்கப் போட்ட நாற்றுக்களை கட்டுக் கட்டாக ஏற்றி வருவார்கள்.

8cafca9df7da8b2479fd40ad7c3734b1

ஆண்களும் பெண்களும் வரிசையாக நின்று நாற்று நடும் அழகை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆதிகாலத்தில் நாற்று நடும் போது கிராமியப் பாடல்களைப் பாடுவார்களாம். இப்போது றான்ஸ்சிஸ்டர் (Transister radio) வந்து விட்ட காலமல்லவா? வயலின் நடுவே ஒரு தடியை நட்டு அதில் றான்ஸ்சிஸ்டரை தொங்கவிட்டிருப்பார்கள். பாட்டைக் கேட்டபடி நாற்று நடுகை இடம் பெறும்.

சேற்றடி அடித்த படியால் மண் நன்கு இளகி இதமாக இருக்கும். பாவித்த உழவு மிஷினை வாங்குபவர்கள் மட்டக்களப்பு பக்கம் உழுத மிஷின்களை பயமின்றி வாங்குவார்கள். மன்னாரில் சேத்தடி அடித்த மிஷின்கள், உள் பாகங்களெல்லாம், தேய்ந்து போய் வாங்குபவர்களை ஒரு கை பார்த்துவிடும்.

அப்போது கூடுதலாக பி.ஜி.11(B.G.11) நெல்லையே மன்னாரில் சாகுபடி செய்தனர். விளைந்த பின் நெல் மணிகளின் பாரம் தாங்காது, நாணமடைந்த புது மணப்பெண்கள் போல, பயிர்கள் தலை சாய்த்து நிற்கும் அழகே அழகு. ஏக்கருக்கு ஐம்பது மூட்டை விளைவித்த விவசாய மன்னர் பலர் மன்னாரில் இருந்தார்கள்.

நாற்று நடுகை ஓரிரு கிழமைக்குள், உரிய பருவத்தில் முடிக்க வேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் நட வேண்டி இருப்பதால், ஆட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இந்த தட்டுப்பாட்டை எமது மாணவர்களும் மாணவிகளும் நன்கு பயன் படுத்திக் கொள்வார்கள்.

rjp_200716_nittur6

அதி காலை எழுந்து நாற்று நடப்போவார்கள். ஏழரை மணியளவில் வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு பாடசாலைக்கு வருவார்கள். பாடசாலை விட்டதும் வீடு சென்று, சாப்பிட்டு விட்டு, வெயில் தாள, நான்கு மணியளவில் நாற்று நட இறங்கும் அவர்கள், ஆறு மணிக்கு வீடு திரும்பி, தூய்மைப்படுத்திக் கொண்டு, சற்று ஆறிய பின், பாடசாலை வேலைகளைச் செய்து, படிப்பார்கள்.

நாற்று நட வகுப்பு ரீதியாக, நண்பர்கள், தோழியர்களுடன் செல்லும் இவர்கள், வசதியானவர்கள், ஏழைகள் என்று வேறுபாடு காட்டுவதில்லை. நாற்று நடுவதால் வரும் பணத்தை, பாடசாலை உபகரணங்களை வாங்கவும், வேறு சிறு தேவைகளுக்கும் பயன் படுத்திக்கொள்வார்கள்.

பாடசாலை அபிவிருத்திக்கு நிதி தேவைப்பட்டது. திரு. தொம்மை மாஸ்டர் ஒரு வாய்ப்பை வழங்கினார். தான் பாடசாலைக்கு அருகே ஒரு ஏக்கர் வயலை செய்து இலாபத்தை, பாடசாலையின் அபிவிருத்திக்கு வழங்குவதாகவும், வரம்பு கட்டல், நாற்று நடுகை, அறுவடை முதலிய உடல் உழைப்பை, மாணவர்களும் பழைய மாணவர்களும் நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரு வார இறுதியின் போது இரண்டு நாளும் நானும் கொஞ்ச கொஞ்ச நேரம் அவர்களுடன் இணைந்து நாற்று நட்டேன். நான் பிள்ளைகளுடன் சேர்ந்து நாற்று நடும் காட்சியை, பழைய மாணவன் ஒருவன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டான். அதன் பிரதிகளை பல மாணவர்கள் வைத்திருந்தார்கள். எனக்கும் ஒரு பிரதி தந்தார்கள். நாட்டின் பிரச்சினையின் போது தொலைந்த பொக்கிஷங்களில் அந்த படமும் ஒன்று. நாற்று நடும் போது, என்னுடன், தொம்மை மாஸ்டரும், மடுத்தீன் என்ற அயல் வீட்டு இளைஞனும் சேர்ந்து நின்றார்கள். விதை நெல், உழவு, பசளை, மருந்து செலவு போக, வருமானத்தின் ஏனைய பகுதியை தொம்மை மாஸ்டர் அதிபரிடம் ஒப்படைத்தார்.

பாடசாலைக்கு அண்மையாக ஒரு இரண்டு ஏக்கர் காணி இருந்தது. முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஆசிரியர் ஒருவர் அதனை, குத்தகைக்கு விதைத்திருந்தார். இப்போது ஊரவர்கள், என்னை அந்த காணியைக் குத்தகைக்கு எடுத்து செய்யும்படியும், தாங்கள் எல்லா உதவிகளையும் செய்வதாகவும் கேட்டார்கள். அவர்களுக்கு “மன்னித்து விடுங்கள், நான் கற்பிக்க தான் இங்கு வந்திருக்கிறேன். வயல் செய்ய அல்ல. வயல் செய்ய தொடங்கினால் கவனம் அதில போகும். என்னாலும் ஒழுங்காக கற்பிக்க முடியாமல், கவனம் திரும்பிவிடும்” என்று கூறி மறுத்துவிட்டேன்.

1024px-Sri_Lankan_train,Northern_Line,Sri_Lanka

குடும்பமாக இருக்கத் தொடங்கிய பின்னர், நாங்கள் விடுமுறையின் பொழுது மட்டும் தான் பரந்தனுக்கு போவோம். மணற்குளம் நிலையத்தில் ரெயினில் ஏறி யாழ்ப்பாணம் பெட்டியில் இருந்து விடுவோம். ரெயின் மதவாச்சி நிலையத்தில் யாழ்ப்பாணப்பெட்டியை கழற்றி விடும். கொழும்பிலிருந்து வரும் மெயில் ரெயின், அதனைக் கொழுவிக் கொண்டு செல்லும். ரெயின் மாறாமல் நாங்கள் தொடர்ந்து பயணம் செய்து பரந்தனை அடைவோம். திரும்பி வரும்போது பெரும்பாலும் காரில் தான் வருவோம். அதுவும் ஓசி சவாரி தான். ஐயா தன் காரில் ஒரு விடுமுறை முடிய ஏற்றினால், மறு தவணைக்கு மாமா தன் காரில் ஏற்றி வந்து விட்டு விடுவார்.

வரும் போது அரிசி, அரிசி மா, தூள் எல்லாம் கொண்டு வருவோம். நெல் கொழிக்கும் மன்னாரிலும், நாங்கள் எங்கள் வயலில் விளைந்த அரிசியை தான் சாப்பிட்டோம். மன்னாரில் விருந்துகளின் போதும், அவர்கள் அரைப்பதமாக அவிக்கும் அந்த அரிசிச்சோற்றின் ருசிக்காகவும் மட்டுமே இடைக்கிடை சாப்பிடுவோம்.

கிராமத்தில் எங்களின்மீது அன்பும் பற்றும் ஏற்பட்ட பின்னரும், “மாஸ்டர், நீங்கள் பரந்தன் தானே. பரந்தனும் வன்னி தானே. அதனால் தான் எங்களுடன் எல்லா விடயத்திலும் சேர்ந்து, உறவினர் போல பழகுகின்றீர்கள்” என்று கூறும், யாழ் எதிர்ப்பு வாதிகளும், இன்னும் இருக்கத்தான் செய்தனர். நான் புன்னகையுடன் நிறுத்திக்கொள்வேன்.

யாழ் எதிர்ப்பு என்பது அந்தக் காலத்தில் கிராமத்தில் மட்டுமல்ல, மன்னார் நகரிலும் இருந்தது. அன்று ஆசிரியர்கள் பலரும், அதிகாரிகள் பெரும் தொகையினரும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்தனர். சிலர் மட்டுமே இங்கு தங்கி வேலை பார்த்தனர். ஏனையோர், திங்கள் வந்து, வெள்ளி திரும்பினர்.

திங்கள் பிரயாணக் களைப்பினாலும் வெள்ளி பஸ் பிடிக்கும் ஆர்வத்தினாலும் அரை நேர வேலைகள் பாதிக்கப் பட்டது உண்மை. கிராமத்திலிருந்து பஸ் பிடித்துப் போனவர்கள், உரிய அலுவலர் வராத போது கோபம் கொண்டது இயல்பு. மேலும் சில ஆசிரியர்கள் வயல் செய்ய வெளிக்கிட்ட படியால் சேவையில் தளர்வு ஏற்பட்டதும் உண்மை.

மன்னாரில் இருந்த மொழிப்பற்று, இனப்பற்று உள்ள மக்களுக்கு, யாழில் இருந்து வந்த சிலர் துணை போயினர். இதனால் தேசிய கட்சியைச் சேர்ந்த சிலர் உணர்ச்சி வசப்பட்டனர். இதுவும் யாழ் எதிர்ப்பிற்கு  காரணமாயிருந்தது. இன்று மன்னார் மக்கள் கல்வியால் உயர்ந்து, உயர் பதவிகளில் உள்ளனர். ஆசிரியர்களில் பெரும்பான்மையும் அவர்களே. அலுவலர்களும் அவர்களே. அதிபர்களும்  அவர்களே. எனவே, இன்று அந்த எதிர்ப்பு உணர்வு அறவே இல்லாது போயிற்று.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *