கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 17 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

IMG-20161104-WA0007

மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க. பாடசாலையில் எனது 5 வருடங்கள் 9 மாதங்கள் சேவை முடிவுக்கு வந்தது. ஆசிரியர் கலாசாலைக்கு செல்வது மகிழ்ச்சியே, ஆயினும் எதையோ இழக்கப் போவது  போன்ற ஏக்கம் ஒன்று மனதை அடைத்தது உண்மை தான். இப்போது நினைத்து பார்க்கின்றேன். ஏனைய பாடசாலைகளை விட்டு இடம் மாறி சென்ற போது, இந்த அளவுக்கு தாக்கம் ஏற்படவில்லை.

சில பெற்றோர்கள், என்னையும் மனைவியையும் அழைத்து விருந்து வைத்தார்கள். எனது பிரியாவிடை நிகழ்வை 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர், மாணவர் எல்லோரும் இணைந்து செய்ய இருப்பதாகவும், தாங்கள் கடிதம் அனுப்பும் போது கட்டாயமாக வர வேண்டும் என்றும் கூறி, அதிபரும் ஆசிரியர்களும் எங்களை அனுப்பி வைத்தார்கள்.

தொம்மை மாஸ்டர், எமது பைகளையும் பொதிகளையும் தமது வண்டியில் ஏற்றி வர, நாங்கள் மணற்குளம் ஸ்ரேஷனை அடைந்தோம். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தைக் கூற வேண்டும். மணற்குளத்தில், ஸ்ரேஷனுக்கு மிக அருகே , ஊரிலேயே பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டினர் அனைவரும் மன்னார் சென்று கற்றவர்களாகவும், பெரும்பாலும் அரச உத்தியோகம் பார்ப்பவர்களாகவும் இருந்தனர்.

திரு.மரியாம்பிள்ளை எமது பாடசாலையில் ஆசிரியராக இருந்து, சூரியகட்டைக்காடு பாடசாலைக்கு இடம் மாறி சென்றிருந்தார். அவரது சகோதரி, அப்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்தார். அவர் தான் இக் கிராமத்தின் முதல் பட்டதாரியாகும். இவர் பிற்காலத்தில் மன்னார் மாவட்டத்தில் பிரதி கல்வி பணிப்பாளராக சேவை புரிந்தவர். இவரது மகள், எதிர்காலத்தில் பேராதனைப் பல்கலைக்லைக்கழகத்தில், எனது மகளுடன் ஒரே பற்ச்(batch) இல் பல் மருத்துவம் கற்க போகின்றார் என்பதை, அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. இவர்களிருவரின் சகோதரன் தான், அப்போது மணற்குளம் ஸ்ரேஷனின்  புகையிரத நிலைய அதிபராக இருந்தார்.

TMP-station

ஸ்ரேஷனில் ஊரே கூடி நின்றது. எம்மை வழியனுப்பி வைக்க எல்லோரும் வருவார்கள், என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை. புகையிரதமும் வந்தது. நாங்கள் ஏறி இருக்க, மாணவர்கள் பொதிகளைக் கொண்டு வந்து வைக்க, ஒரு இளைஞன் ஓடி வந்து எனது கையைப் பற்றி ஓ……. என்று அழுதான். நான் திகைத்துப் போய் இருக்க “சேர், நான் தான் நீங்கள் முதன் முதல் வந்த போது, யாழ் ஒழிப்பு நோட்டீஸ் தந்தவன்” என்று மேலும் அழுதான். நான் அவனை அணைத்து, “அழாதே, நான் அதை அப்பொழுதே மறந்துவிட்டேன்” என்று கூறினேன். அவனைச் சமாதானப் படுத்துவது பெரும்பாடாக போய் விட்டது. பாவம் அப்பாவி இளைஞன். எனக்கு யாழ் ஒழிப்பு நோட்டீஸ் தந்த விடயத்தையே நான் மறந்து விட்டேன்.

அந்த இளைஞன் அடிக்கடி என் கண்ணில் பட்டு மறைவான். அவன் தான் நோட்டீஸ் தந்தவன் என்பதையும் நான் மறந்து விட்டேன். ஆனால் அவன் தான் செய்த தவறை எண்ணி இவ்வளவு நாட்களும் வருந்தியிருக்கிறான், என்பதை நினைத்து மிகவும் வருந்தினேன். எனக்கு தெரிந்திருந்தால், சில வருடங்களுக்கு முன்னரே, அந்த இளைஞனைக்  கூப்பிட்டு, இதெல்லாம் சாதாரண விடயம் சகோதரனே, என்று கூறி, அவன் மனக்கிலேசத்தை அப்போதே நீக்கியிருப்பேன்.

பிரியாவிடையை ஒரு சனிக்கிழமை ஒழுங்கு படுத்தியிருந்தார்கள். அதிபர் அன்றைய தினம் எனக்கு வசதியா? என்று கேட்டு கடிதம் போட்டிருந்தார். எனக்கு வசதியென்றும், கட்டாயம் வருவேன் என்றும் பதில் அனுப்பியிருந்தேன்.

பிரியாவிடை நிகழ்ச்சிக்கு மனைவி, மகளுடன் போவதாக திட்டமிட்டிருந்தேன். ஆனால் முதல் நாள் மகளுக்கு சுகயீனம் ஏற்பட்டு விட்டது. அதனால் முதல் நாளே யாழ்ப்பாணம் சென்று, ஆனைப்பந்தியில் டாக்டர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் மகளுக்கு  மருந்தெடுத்தேன். டாக்டர் பயப்பட ஒன்றுமில்லை என்று கூறினார்.

அதனால் மகளையும் மனைவியையும் யாழ்ப்பாணத்தில் விட்டு விட்டு, அதிகாலை சங்குப்பிட்டி ஊடாக மன்னார் செல்லும் பஸ்ஸில் சென்று மன்னாரை அடைந்தேன். அங்கிருந்து  நாநாட்டான் பஸ்ஸில் ஏறிச் சென்று, பாடசாலைக்கு அருகே பாலைக்குளியில் இறங்கிக் கொண்டேன்.

பாடசாலை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிள்ளைகளும் பெற்றோரும் வந்து கொண்டிருந்தனர். மு.ப 11 மணியளவில் பிரியாவிடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு, எல்லோரும் வந்து விட்டனர். பெற்றோருக்கு எனது மனைவி வராமை கவலையளித்தது. பிள்ளைகளுக்கு, தாங்கள் தூக்கி விளையாடிய, எனது மகள் வராமல் விட்டது ஏமாற்றமாயிருந்தது.

பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. நாட்டு  கூத்து ஆடினார்கள். என்னைப் போல நடந்து காட்டினார்கள். என்னைப்போல கதைத்து காட்டினார்கள். நடனம் ஆடினார்கள். பெற்றோர், பழையமாணவர், ஆசிரியர்கள் சார்பாக பேச்சுக்கள் இடம் பெற்றன. கலை நிகழ்ச்சிகள் மிக தரமாக இருந்தன. அன்று எல்லோருக்கும் பாடசாலையிலேயே சாப்பாடு. என்னுடன் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றாக இருந்து சாப்பிட்டார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் அதுவும் ஒன்று.

நிகழ்ச்சிகள் யாவும் முடிந்து, விருந்தும் முடிந்த பின்னர், மாணவர்கள் வரிசையில் நின்றார்கள். எல்லோர் கைகளிலும் பார்சல்கள். இது என்ன வேலை என்று அதிபரிடம் கேட்டேன். அதற்கு அவர், பிள்ளைகள் தங்கள் ஆசிரியருக்கு பரிசு வழங்குகின்றார்கள், அதனை நான் எப்படி தடுக்க முடியும் என்றார். வெள்ளி றே, வெள்ளி ரம்ளர்கள், குத்துவிளக்கு, கப் அன்ட சோஷர் பெட்டி, பிஸ்கெற் பெட்டி என்று தொடங்கி நிறைய பரிசுகள்.

கடைசியாக சில பிள்ளைகள், எனக்கு மிகவும் பிடித்த கொய்யா பழங்களுடன் நின்றார்கள். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன். ஒரு சிறிய பெண் குழந்தை பக்குவமாக ஒரு பார்சலைத் தந்தார். சேர், இதற்குள் முட்டை இருக்கிறது, உடைந்து விடும் கவனம் என்றாள். அந்த ஏழை குழந்தை, அன்புடன் அளித்த அந்த முட்டைகளே, நான்  வாழ் நாளில் பெற்ற அதி உயர்ந்த பரிசாக இன்று வரை எண்ணுகின்றேன். மாலை, எல்லோரிடமும் விடை பெற்று, கொய்யாப் பழங்களையும் முட்டைகளையும் எடுத்துக் கொண்டு, மகளின் நிலையை அறிய யாழ்ப்பாணம் சென்றேன்.

பிறிதொரு தினத்தில், எனது தந்தையாருடனும் தாயாருடனும் அவரது காரில், எனது மனைவி, மகளுடன் சென்று ஏனைய பரிசுப் பொருட்களை எடுக்கும் சாட்டில், பாடசாலையையும், மனுவல் ஐயா வீட்டினரையும் பார்த்து வந்தோம். ஐயாவும் அம்மாவும் எங்களுடன் வரும் சாட்டில் திருக்கேதீஸ்வரத்தானையும் வணங்கி வந்தனர்.

ஆசிரியர் கலாசாலை, பின் வேறு, வேறு பாடசாலைகளில் ஆசிரியர் பணி, அதன் பின்னர் அதிபர் பணி, நாட்டின் இனப்பிரச்சினை, பிள்ளைகளின் கல்வி என்று, மன்னாருக்கு போக முடியவில்லை. இடையில் நாட்டின் பிரச்சனை காரணமாக, கிராம மக்கள் இடம் பெயர்ந்து, ஒரு பகுதினர் இந்தியாவிற்கும், மிகுதி மக்கள் மடுவிற்கும் போய் விட்டார்கள் என்று அறிந்தேன்.

பல கடிதங்கள் போட்டேன். பதிலில்லை. 2015 ஆம் ஆண்டு, 38 வருடங்களின் பின், நாட்டின் பிரச்சனைகள் குறைந்துள்ள, நிலமையை சாதகமாக்கி, எனது மாணவர்களையும் பெற்றோர்களையும் பார்க்க எண்ணி மணற்குளம், பாலைக்குளி, காத்தான்குளம், உயிலங்குளம் கிராமங்களுக்கு நானும் மனைவியும் சென்றோம். நான் முதல் நியமனம் பெற்று, அங்கு சென்ற போது, அங்கு என்னென்ன மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்று கனவு கண்டேனோ, அவை அங்கு நிகழ்ந்திருந்தது கண்டு பேரானந்தம் அடைந்தேன்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-16-12-29-16/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *