கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 18 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

மன்னாரை விட்டு ஊருக்கு சென்ற போது, பாலைக்குளியிலும், காத்தான்குளத்திலும் எம்முடன் பழகிய உறவுகளிடம் இடைக்கிடை வந்து பழக வேண்டும் என்று எண்ணியிருந்தோம். ஆனால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை எம்மை 38 ஆண்டுகள் மீண்டும் மன்னாருக்கு வராது தடுத்து விட்டது.

நாங்கள் பெரிய பரந்தன், பூனகரி, மல்லாவி, ஸ்கந்தபுரம் என்று இடம் பெயர்ந்து அலைந்தோம். பின் கொழும்பு, லண்டன் என்று போய் வந்தோம். பாலைக்குளி, மணற்குளம், காத்தான்குளம் மக்களில் ஒரு பகுதியினர் மடுவில் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர்.

இன்னொரு பிரிவினர் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு அகதிகளாக சென்று விட்டனர். சில இளைஞர்கள் இராணுவத்தின் பிடியில் சிக்கினர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

தற்போது நாங்கள் பரந்தனில் மீளக் குடியேறி விட்டோம். அவர்களும் மீளக் குடியேறி இருப்பார்கள் என்று கருதினோம். யார் இருக்கின்றார்கள். யார் யார் எல்லாம் இந்தியாவிலிருந்து திரும்பியிருப்பார்கள் என்று எமக்கு தெரியாது. மனுவல் ஐயா, அம்மா, தொம்மை மாஸ்டர் முதலியோர் இறந்து விட்டனர் என்று கேள்விப்பட்டிருந்தோம்.

2015 ஆம் ஆண்டு ஒரு நாள் அதிகாலை, நான், சுசி, தங்கை, மைத்துனர் ஆகியோர் கஜன் என்ற உறவுமுறை இளைஞனையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு, மைத்துனரின் வாகனத்தில் மன்னார் நோக்கி பயணம் செய்தோம். முன் ஜாக்கிரதையாக, காலை உணவாக பாணும்  சம்பலும், மதிய உணவும் தங்கை சமைத்துக் கொண்டு வந்திருந்தார்.

unnamed

காலை 8.30 மணியளவில் திருக்கேதீஸ்வரம்  கோவிலை அடைந்தோம். கோவில் வளாகத்தில் வழமை போல காணும் இடம் எல்லாம் கூட்டம் கூட்டமாக மயில்கள் திரிந்தன. மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்தது. முன்னர் மன்னார் மாவட்டத்திற்கு மாற்றலாகி, அல்லது புதிய நியமனம் பெற்று வரும் பெண் ஆசிரியைகளுக்கு, திருக்கேதீஸ்வரத்தை சூழவுள்ள அடம்பன், ஆண்டான்குளம், திருக்கேதீஸ்வரம் முதலிய பாடசாலைகளுக்கு கல்வி அதிகாரிகள் நியமனத்தை வழங்கினர். அதனால் அவர்களின் தங்குமிடப் பிரச்சினை தீர்ந்தது. அனைவரும் கோவில் வளாகத்தில் தங்கினர். அதனால் இப்போது மயில்கள் சுற்றித் திரிவது போன்று அன்று ஆசிரியைகள் சுற்றித் திரிந்தனர்.

அது மட்டுமின்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் பலர், தமது ஓய்வூதியத்தை மடங்களில் கொடுத்து விட்டு, அங்கு தங்கி, சாப்பிட்டு தமது இறுதிக் காலத்தை கோவில் வளாகத்தில் கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது நிறைய பக்தர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர்.

கோவில் வளாகம் எப்போதும் மக்களால் நிரம்பிக் காணப்படும். இப்போது மனிதர்கள் குறைந்து ஒருவித அமைதி நிலவியது. கோவில் புனரமைப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தன. விக்கிரகங்கள் யாவும் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தன.

Thiru

நாங்கள் இறைவனை வழிபட்ட பின்னர், கோவில் வளாகத்திலேயே பாணும் சம்பலும் சாப்பிட்டு காலை உணவை முடித்துக் கொண்டோம். பின்னர் வெளிக்கிட்டு 9.30 மணியளவில் உயிலங்குளத்தை அடைந்தோம். அங்கே நாநாட்டான் செல்லும் வீதியால் திரும்பினோம். முதலில் மணற்குளம் வந்தது.

அங்கு கந்தசாமி, உடைந்த தனது கடையை நவீனமாக கட்டியுள்ளார். கம்பளை முஸ்லீம் முதலாளியின் கடை உடைந்து போய் காணப்பட்டது. நாங்கள் முதலில் மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க.பாடசாலையை (நான் முதல் நியமனம் பெற்ற பாடசாலை) அடைந்தோம். அங்கு ஒரு பெண் அதிபர் புதிதாக வந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு,  அனுமதி பெற்று பாடசாலையை சுற்றிப் பார்க்க சென்றோம்.

பழைய கட்டிடங்கள் சில உடைந்து விட்டன. புதிதாக சில கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. அப்போது மூன்று பெண் ஆசிரியைகள் “சேர், நாங்கள் உங்களிடம் படித்தவர்கள். முன்பு நீங்கள் மெல்லிசு. இப்போ உடம்பு வைத்து விட்டது. என்றாலும் நாங்கள் உங்களை அடையாளம் கண்டு கொண்டோம். உங்கள் குரலைக் கேட்டதும், நீங்கள் தான் என்று உறுதியாக தெரிந்து விட்டது” என்றார்கள். அவர்களில் ஒருவரின் பெயர் எனக்கு ஞாபகமாக இருந்தது. “நீர், சகாயமலர் தானே” என்றேன். தனது பெயரை சேர் மறக்கவில்லை என்று மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினார். இன்னொருவரின் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை. அவரது தந்தையாரின் பெயர் ஞாபகத்திற்கு வந்தது. “நீர், கிறகொரி ஐயாவின் மகள் தானே”  என்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் “அப்பாவை தெரியுமா சேர்” என்றார். மூன்றாவது பிள்ளை சகாயமலருடன் படித்தவரென்று நல்ல ஞாபகம். பெயர் மட்டும் ஞாபகம் வரவில்லை. அவரிற்கு தனது பெயரை சேர் மறந்து விட்டாரேயென்று கொஞ்சம் கவலை.

கிறகொரி ஐயாவின் மகள் உடனே போனில் தனது தமையனான குணசேகரனை அழைத்து நான் வந்திருக்கும் செய்தியைக் கூறி, என்னிடம் போனை தந்தார். நான் குணசேகரனிடம் “என்னை ஞாபகம் இருக்கிறதா” என்று கேட்டேன். “என்ன சேர், எங்களால் உங்களை மறக்க முடியுமா? நான் இப்போதே, லீவு போட்டு விட்டு ஓடி வந்து விடுவேன். இன்று ஒரு மிக முக்கியமான கூட்டம் இருக்கின்றது. அதற்கு போகத்தான் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் கட்டாயம் பரந்தனுக்கு வந்தென்றாலும் உங்களைச் சந்திப்பேன் சேர்” என்று குணசேகரன் கூறினார்.

அதிபரிடம் சென்று, நான் முன்பு தோட்டம் செய்த விபரத்தையும், என்னென்ன பயிர்களை, எங்கெங்கே வைத்தோம் என்பதையும், கூறினேன். அவர் எனது மாணவிகளைப் பார்த்து “நீங்கள் எனக்கு தோட்டம் செய்த விபரத்தை ஏன் கூறவில்லை” என்று வினவியவர் “நாங்கள் விரைவில் அது போன்று ஒரு தோட்டத்தை அமைப்போம் சேர்” என்று எனக்கு கூறினார். நானும் சுசியும் எனது மாணவர்களுடன் நின்று படம் எடுத்துக் கொண்டோம்.

குணசேகரன் இதே பாடசாலையிலும் முன்பு அதிபராக கடமையாற்றி, இப்போது அயல் பாடசாலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். என்னிடம் படித்த பிள்ளைகளில் பலர் ஆசிரியர்களாக கடமை புரிவதை அன்று அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.

விறிசிற்றம்மா, மன்/புனித சேவியர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியையாக உள்ளார்.  மேரி யசிந்தா செட்டிகுளத்தில் ஆசிரியை. மரிய பிலிப்பா தனது கணவரான குணசேகரன் அதிபராக உள்ள பாடசாலையிலேயே ஆசிரியை. எமிலியானுஸ்பிள்ளை ஆசிரியர்.

நாங்கள் அடுத்ததாக மனுவல் ஐயாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கே உடைந்து விட்ட பழைய வீட்டின் ஒரு பகுதியில் ஒரு நவீன வீடு கட்டப்பட்டிருந்தது. நாங்கள் இருந்த அறையும் அடுத்து ஆசிரியைகள் அறையும் மட்டும் தப்பிப் பிழைத்து இருந்தன. நாங்கள் எதிர்பார்த்தது போல அங்கு அலோசியஸ் தான் வாழ்ந்து கொண்டிருந்தான். அலோசியஸ் நாநாட்டானுக்கு போய்விட்டார். மனைவி முருங்கன் கல்லூரியில் ஆசிரியை. அவர்களின் மிஷின் றைவரும் அலோசியஸ்ஸின் மாமியாரும் மட்டுமே இருந்தனர். அவர்கள் உடனே அலோசியஸ்ஸிற்கு போன் பண்ணினார்கள். அவர் எங்களை இருக்கும்படியும் தான் உடனே திரும்பி வருவதாகவும் கூறினார்.

வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு, நாங்கள் முதன் முதலில் இருந்த சார்லி வீட்டிற்கு நடந்து சென்றோம். சார்லியின் மனைவி எனது மனைவியுடன் சகோதரி போல பழகியவர். உடனே அடையாளம் கண்டு கொண்டார். சார்லி சற்று யோசனைக்குப் பிறகு தான் எங்களை புரிந்து கொண்டார். சார்லி, முன் பக்கம் சோலையாக இருந்த மரங்களை தறித்து விட்டு, அந்த இடத்தில் மில் ஒன்றைக் கட்டியிருந்தார். அதனால் நல்ல வருமானம். ஆனால் மரங்கள் நின்ற பொழுது இருந்த அழகு இப்போ இல்லை.

அவர் தனது ஞாபகமாக இரண்டு செவ்விளநீர் கன்றுகளை எமக்கு தந்தார். அவரது குடும்பத்தவர்களுடன் படம் எடுத்துக் கொண்டோம். அப்போது மடுத்தீன் தனது சைக்கிளில் உழக்கிக் கொண்டு வேர்க்க  விறுவிறுக்க நாநாட்டானிலிருந்து வந்தார். தூரத்தில் வரும் போதே “எனது நூலகமும் புத்தகங்களும் பிரச்சினையின் போது அழிந்து விட்டன சேர்” என்று கூறிக் கொண்டு வந்தார். அவருடன் உரையாடியபடி அவரது வீட்டிற்கும் சென்றோம்.

அவரது வீட்டில் நாங்கள் கதைத்துக் கொண்டிருக்க, அலோசியஸ்ஸும் வந்து விட்டார். நாங்கள் அவரது வீட்டிற்கு சென்றோம். அவர் கோட்டலில், எங்களுக்கு சாப்பாடு வாங்க வெளிக்கிட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் மதிய உணவு கொண்டு வந்த விபரத்தைக் கூறி அவரை மறித்தோம். புதினங்களைக் கூறுமாறு கேட்டோம்.

மனுவல் ஐயா, அம்மா, சின்ன அக்கா, விறிசிற், தொம்மை மாஸ்டர் இறந்த கதையைக் கூறினார். நேசம் திருமணம் செய்து வெளி நாட்டில் வசிப்பதையும், விஜி திருமணம் செய்து உயிலங்குளத்தில் வாழ்வதையும், மனோ திருமணம் செய்து லண்டனில் வசிப்பதையும், ஜூட் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்றதையும், பின் திருமணம் முடித்து, மன்னார் நகரில் வீடு வாங்கி வாழ்வதையும், அவளது கணவர் மன்னாரில் உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பதையும், தொம்மை அக்கா மன்னார் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து விஜியின் பிள்ளைகளை அங்கே படிப்பிப்பதையும் கூறினார்.

அடுத்து நாங்கள் பாலானந்தம் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டோம். அப்போது அலோசியஸ், தான் முருங்கனுக்கு போய் தனது மனைவியை குறுகிய கால லீவு எடுத்து கூட்டி வருவதாகவும், எங்கே போனாலும் திரும்பி தன் வீட்டிற்கு வரவேண்டும் என்றும் கூறி புறப்பட்டான். பாலானந்தம் வீட்டில் அவர் இல்லை. மனைவியும் பிள்ளைகளும் அன்போடு வரவேற்றார்கள்.

அடுத்து நாங்கள் சகாயம்மா வீட்டிற்கு சென்றோம். மன்னார் செல்ல புறப்பட்டவர், நாங்கள் வருவதை அறிந்து அந்த பயணத்தை நிறுத்திக் கொண்டார். அவரது வீட்டில் அழகான குறோட்டன்களும் பூக்கன்றுகளும் நிறைந்திருந்தன. சுசி கேட்ட கன்றுகளையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார். தனது பெயர் ஆசிரியர் நியமனப் பட்டியலில் வந்திருந்ததையும், தான் கடமையேற்காமல் இந்தியாவிற்கு சென்று விட்டதையும் கவலையோடு கூறினார். அவரது பிள்ளைகள் யாவரும் உயர்தரம் சித்தியடைந்திருந்தனர்.

அடுத்து நாங்கள் யேசுதாஸன் வீட்டிற்கு சென்றோம். மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தனக்கு விளையாட்டு உத்தியோகத்தர் (sports officer) நியமனக்கடிதம் கையில் கிடைத்தும், கடமையேற்காது தாங்கள் இந்தியா சென்ற கதையைக் கூறினார். தனது மகள் கொழும்பில் உயர் கல்வி கற்பதை மகிழ்ச்சியோடு சொன்னார்.

அங்கிருந்து நாங்கள் உயிலங்குளத்திலிருந்த விஜி வீட்டிற்கு சென்றோம். வாசலில் நின்று “விஜி” என்று கூப்பிட்டேன். விஜி 1982 இல் பரந்தனுக்கு தந்தையாருடன் வந்தவர். 33 வருடங்களில் பின் நான் கூப்பிட்ட பொழுது “எங்கள் பத்மநாபன் சேர் போல கிடக்கு” என்று எனது குரலை ஞாபகம் வைத்து ஓடி வந்தார். அவரைத் தொடர்ந்து மூத்த மகளும் வந்தார்.

மூத்த மகள் மன்னார் மாவட்டத்தில்  முதல் ராங்க் வந்து, சட்டக்கல்லூரியில் (Law College) இல் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். விஜியின் மற்ற பிள்ளைகளைத்தான் தொம்மை அக்கா மன்னார் நகரில் படிப்பித்துக் கொண்டிருந்தார்.

திரும்பிப் போகும் போது இலந்தைமோட்டைக்கு என்ன நடந்தது என்று விசாரித்தேன். ஊர் முழுமையாக அழிந்ததென்றும், இப்பொழுது சில மக்கள் மீளக்குடியேறி, தங்கள் ஆரம்பப் பாடசாலையையும், பள்ளிவாசலையும் புதிதாக அமைத்துக் கொண்டார்கள் என்றும் அறிந்து சந்தோசப்பட்டோம்.

நாங்கள் மீண்டும் சென்ற போது அலோசியஸ் மனைவியை அழைத்து வந்திருந்தார். எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மனைவியார், முதலே அறிவித்து விட்டு வந்திருந்தால் தான் சமைத்து வைத்திருப்பேனே என்று கவலைப்பட்டார். சாப்பாட்டு மேசையை ஒழுங்கு படுத்தி, பாத்திரங்கள், கோப்பைகள், தண்ணீர் முதலியவற்றையும் வைத்தார்.

நாங்கள் கொண்டு சென்ற சாப்பாட்டை சாப்பிட்டோம். அலோசியஸ், தானும் ஆசிரியராக இருந்த விபரத்தையும், தினமும் இராணுவக்காவல் அரணை தாண்டி, கட்டுப்பாடற்ற பிரதேசத்திற்கு கடமை செய்ய போவதையும், திரும்பி வரும் போது அவர்களால் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டதையும், அதனால் பயத்தில் வேலையை விட்டு விட்டதையும் கவலையுடன் கூறினான். அவர்களிடம் விடை பெற்று பரந்தன் நோக்கி புறப்பட்டோம்.

நான் நியமனம் பெற்று வந்த போது பாடசாலையில் எட்டாம் ஆண்டு வரை மட்டுமே இருந்தது. பெரும்பாலான பிள்ளைகள் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்கள். பின்னர் எங்களிடம் படித்த பிள்ளைகளில் பலர் ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் வேறு சிறிய அரச வேலைகளிலும் இருந்தார்கள்.

அவர்களின் பிள்ளைகளில் பலர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய நான்கு அதிபர்களும், மடுத்தீன் மாஸ்டரும், தொம்மை மாஸ்டரும், நானும் , சுசியும், தொம்மை அக்காவும் கண்ட கனவு இன்று நனவாயிற்று. நாங்கள் யாவரையும் சந்தித்தாலும், பிரதானமாக சந்திக்க வந்த தொம்மை அக்காவை மட்டும் சந்திக்க முடியவில்லை.

அந்தக் கவலையுடன் இனி  எங்கள் பழைய மாணவர்களை எங்கே சந்திக்கப் போகின்றோம் என்ற ஏக்கத்துடனும் பரந்தன் நோக்கி திரும்பினோம். ஆனால் இந்தத் தொடரை எழுத தொடங்கியதும் எனது மாணவர்களுடன் போன் மூலமான தொடர்பும், கட்டுரை பற்றிய விமர்சனங்களும்  வரத் தொடங்கியது.

1978 ஆம் – 1979 ஆம் ஆகிய இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியைப் பெற பலாலி ஆசிரியர் கலாசாலைக்கு சென்ற கதை இனி தொடரும்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-16-12-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-17-01-05-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *