கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 21 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

எங்கள் 1978 – 1979 batch இல் கணித பிரிவில் 40 பேரும் விஞ்ஞானப் பிரிவில் 40 பேரும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு முந்திய 1977 – 1978 batch இல் கணித பிரிவில் 250 பேர் வரையிலும், விஞ்ஞானப் பிரிவில் கிட்டத்தட்ட அதேயளவிலும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். எங்கள் batch உடன் இரண்டு வருடப் பயிற்சி திட்டம் மாற்றப்பட்டு ஒரு புதிய முறை அறிமுகப் படுத்தப்பட்டது.

ஜனவரி – ஜூன் வரை ஒரு batch உம், ஜூலை – டிசெம்பர் வரை அடுத்த  batch உம் ஆக இரு batch கள் பயிற்சி பெறும். முதல் batch பயிற்சி பெறும்போது அடுத்த batch பாடசாலையில் கற்பித்தல் செயல்முறையில் ஈடுபடும். இவ்வாறே மாறி, மாறி நடைபெறும். அவர்களின் பயிற்சி காலம் மூன்று வருடங்களாகும். ஆக, எங்களுக்கு இரண்டு யூனியர் பயிற்சியாளர்கள் வருவார்கள்.

கணித மன்றம் ஒவ்வொரு ஆண்டும், மன்றத்தின் சார்பில் “எழில்” என்ற சஞ்சிகையை வெளியிடுவது வழக்கம். 1978 ஆம் ஆண்டு எங்களின் சீனியர்களும் நாங்களுமாக கிட்டத்தட்ட 290 பேர் கணித பாடத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தோம். நிறைய பேர் பயிற்சி பெறுவதால் மிகவும் தரமாக சஞ்சிகையை வெளியிட தீர்மானித்தோம்.

சீனியர்களுக்கு பரீட்சை ஆண்டு என்பதால் எங்கள் batch இடம் சஞ்சிகைப் பொறுப்பை தந்தார்கள். எங்கள் வகுப்பிலிருந்த திரு. தனஞ்செயன் பத்திராதிபராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். சீனியர்கள் பத்திரிகை குழுவிலிருந்து ஆலோசனைகளை வழங்கினார்கள். கணித மன்ற அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் ரூபா  10.00 முற்பணமாக கொடுத்தோம்.

அங்கத்தவர்கள் அதிகம் என்பதால், விளம்பரங்களும் அதிகம் கிடைத்தன. அதனால் பணப் பிரச்சனை இல்லை. ஆக்கங்களும் அதிகம் வந்து சேர்ந்தன. பத்திரிகைக் குழுவினர் தரமான ஆக்கங்களைத் தெரிந்தெடுத்து, கணித மன்ற வரலாற்றிலேயே சிறந்த,அழகான “எழில்” சஞ்சிகையை வெளியிட்டனர்.

எங்களுக்கு இரண்டு batch  யூனியர்கள் வரும் நிலை ஏற்பட்டதால் 1979 இல் இரண்டு முறை “எழில்” சஞ்சிகையை வெளியிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. முதலாம் அரையாண்டுக்கு பத்திராதிபராக திரு. பல்குணன்லாலா தெரிவானார். அவரது பத்திரிகை குழுவிற்கும் யாழ்ப்பாணத்தில் ஓரளவு விளம்பரங்கள் கிடைத்தன. அவர் அதற்கு தகுந்தாற்போல் போல அடக்கமாக அடுத்த “எழில்” சஞ்சிகையை கொண்டு வந்தார். அவரது பத்திரிகைக் குழுவில் நானும் ஒரு அங்கத்தவராக இருந்தேன்.

எங்களின் கடைசி ஆறு மாதப் பயிற்சிக் காலம். அந்த பயிற்சியின் பின் இறுதிப் பரீட்சை. இந்த பரீட்சையில் சித்தியடைந்தால் தான், எம்மால் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் என்று கௌரவமாக, வேலை செய்ய முடியும். யூனியர்கள் ஆறு மாதம் மட்டும் பயிற்சி பெற்று செல்வதால், அடுத்த “எழில்” சஞ்சிகையையும் எங்கள் batch ஆசிரிய மாணவர்களே வெளியிட வேண்டிய நிலை. அப்போது கலாசாலை அதிபராக இருந்த உயர் திரு. கனகலிங்கம் அவர்களும் கணித பிரிவு துறைத் தலைவர் திரு. இரத்தினவேல் அவர்களும் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்று எங்களை அவதானித்த வண்ணம் இருந்தனர்.

இம்முறையும் சஞ்சிகை வெளியிட்டால், மூன்று சஞ்சிகை வெளியீட்டிலும் பங்கு பற்றிய batch என்ற கௌரவம் எங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமல்ல, நாங்கள் செய்ய வேண்டிய நான்கு ‘Project’ களுக்குப் பதிலாக மூன்று செய்தால் போதும் என்ற சலுகையை, அதிபரின் அனுமதியுடன் ‘Project’ இற்குப் பொறுப்பாக இருந்த திருமதி. அரிராஜசிங்கம் அறிவித்திருந்தார்.

ஒரு நாள் எங்கள் வகுப்பறையில் திரு. நாகேந்திரசீலன் எங்களைப் பார்த்து “பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவதும் முக்கியமானது தான். ஆனால் எங்களுக்கு ஏதோ Bridge, Chess, 304 விளையாட மட்டும் தான் தெரியும் என்று மற்றவர்கள் நினைக்கின்றார்கள். நாங்கள் இம்முறை கணித மன்றத்தை பொறுப்பெடுக்து, ‘எழிலை’யும் வெளியிட்டு காட்ட வேண்டும் என்றார். திரு. செல்வச்சந்திரனும் திரு. இரவீந்திரனும் அவர் கூறியதை வழி மொழிந்தனர். திரு. மாணிக்கவாசகர் ஒரு கையை விரித்து வைத்து மறு கையால் அதில் குத்தி “மைச்சான், நாங்கள் ஒரு முறை கணித மன்றத்தை நடத்திக் காட்டத் தான் வேண்டும்” என்றார்.

unnamed (1)கணித மன்றம் விரிவுரையாளர்கள் முன்னிலையில் முறைப்படி கூடியது. தலைவராக திரு. நாகேந்திரசீலனும், செயலாளராக திரு. மகேந்திரனும், பொருளாளராக திரு. இரவீந்திரனும், பத்திராதிபராக நானும், உப பத்திராதிபராக பேரானந்தனும், பத்திரிகைக்குழு உறுப்பினர்களாக திரு. மாணிக்கவாசகரும், திரு. கணேசமூர்த்தியும், திரு. சிறீஸ்கந்தராஜாவும்  ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டோம்.

ஏனைய பொறுப்புக்களையும் எங்கள் நண்பர்களே ஏற்றனர். பத்திராதிபர் பொறுப்பை நண்பர்கள் கேட்டதனால் ஏற்றுக்கொண்ட எனக்கு “எழில்” சஞ்சிகையை வெளியிடும் வரையில் நித்திரை இல்லாது போயிற்று. யாழ்ப்பாண வர்த்தகர்களிடம் ஏற்கனவே இரண்டு முறை, அதுவும் எங்கள் batch ஆசிரிய மாணவர்களே விளம்பரம் பெற சென்றிருந்தோம். அதனால் இம்முறை அவர்களிடம் போக முடியாத நிலமை இருந்தது.

எனது சொந்த ஊரான பரந்தனிலும், அயலூரான கிளிநொச்சியிலும் விளம்பரம் சேகரிப்பதென்று தீர்மானித்துக் கொண்டேன். ஏனைய பத்திரிகைக்குழு நண்பர்களை அவரவர் ஊரில் சேகரிக்கும் படி கேட்டுக் கொண்டோம். பத்திரிகையை வெளியிட பணம் தான் முதல் தேவை என்பதை நாங்கள் நன்கு புரிந்து கொண்டிருந்தோம். அடுத்தது ஆக்கங்கள் வேண்டும். முதல் இரண்டு சஞ்சிகைகளிலும் கூடுதலாக, கட்டுரைகளே இடம் பெற்றிருந்தன. சிறுகதைகள், கவிதைகளும் இடம் பெற்றிருந்தாலும் ஒப்பீட்டளவில் கட்டுரைகளே அதிகம். தரமான தமிழ் கட்டுரைகளும் ஆங்கில கட்டுரைகளும் அவற்றில் இடம் பெற்றிருந்தன. நான் மூன்றிற்கும் சமனான இடம் கொடுக்க தீர்மானித்துக் கொண்டேன்.

கிளிநொச்சியில் விளம்பரம் சேகரிக்க என்னுடன் நண்பர் ஜெகநாதன் வருவதற்கு சம்மதித்தார். பொருளாளர் நண்பர் இரவீந்திரன் எங்களுடன் வரமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் ஜெகநாதனை நம்பி, தனது கையொப்பம் இட்ட பற்றுச்சீட்டை அவரிடம் ஒப்படைத்தார். ஜெகநாதன் ஒரு வெள்ளிக்கிழமை பின்னேரம் என்னுடன் பரந்தனுக்கு வந்து, எங்கள் வீட்டில் தங்கினார்.

நான் இரண்டு நாட்களுக்கும் எனது தந்தையாரின் A-40 காரை இரவல் பெற்றுக் கொண்டேன். இரண்டு பேரும் கணித மன்றத்தின் அங்கத்தவர்களாக காரில் சென்று இறங்கி, விளம்பரம் சேகரிக்க தொடங்கினோம். இது வரை ஒரு கல்வி நிறுவனமும் கிளிநொச்சிப் பகுதியில் விளம்பரம் சேர்க்காதபடியால் எங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பெரும்பாலும் எல்லோரும் உடனேயே பணத்தையும் வழங்கி விட்டனர். ஜெகநாதன் எல்லோருக்கும் உடனேயே பற்றுச்சீட்டை வழங்கி விட்டார்.

ஞாயிறு பின்னேரம் பழையபடி வசாவிளான்  சென்று விட்டோம். பொருளாளரிடம் பணத்தையும் ஒப்படைத்து விட்டோம். இவ்வாறு இரண்டு வார இறுதி நாட்களில் பரந்தன், கிளிநொச்சியில் கணிசமான விளம்பரங்கள் சேர்த்து விட்டோம். நண்பர்கள் நாகேந்திரசீலனும் இரவீந்திரனும் யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா அச்சகங்களுக்கும் சென்று கோட்டேசன் பெற்றிருந்தனர்.

எல்லாம் எங்கள் கையிலிருந்த பணத்தின் தொகைக்கு ஒத்து வராத தொகைகளாகவே இருந்தன. இறுதியில் கொம்யூனிஸ்ற் கட்சியினரின் ஒரு அச்சகம் மிக குறைந்த தொகையில் கிடைத்தது. அது ஆரியகுளம் சந்தியிலிருந்து கிழக்கே செல்லும் வீதியிலிருந்தது. நண்பர் நாகேந்திரசீலன் எங்களுக்கு ஒரு விடயத்தை வலியுறுத்தியுருந்தார். அச்சகத்திற்கு போகின்ற, வருகின்ற செலவை அவரவரே பொறுத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் கணித மன்றத்தினரிடம் முற்பணம் எதுவும் பெற்றிருக்கவில்லை. விளம்பரக் காசுக்குள் சஞ்சிகையை அடித்து முடிப்பதில் உறுதியாக இருந்தோம். Proof பார்ப்பதற்கு மாறி, மாறி போய் வருவோம். நாங்கள் சஞ்சிகைக்கான டம்மியை சிறப்பாக வடிவமைத்திருந்தோம். அச்சகத்தாருக்கு அது பெரிதும் உதவியாக இருந்தது.

நான் வைத்தீஸ்வராவில் படித்த பொழுது நண்பர்களுடன் சேர்ந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கின்றேன். நண்பன் பாலச்சந்திரனின் சிவன் பண்ணை வீதியிலிருந்த வீட்டில் ஒரு அறை தான் அலுவலகம். எனது சகோதரன், மன்சூர், யோகரட்ணம் (பிற்காலத்தில் இராதேயன் என்று புகழ் பெற்ற எழுத்தாளன்), பாலச்சந்திரன், சிவபாலன், அவர்களுடன் நானும் சேர்ந்து ‘மாணவன்’ என்ற கையெழுத்து சஞ்சிகையை சில காலம் நடத்தியிருந்தோம்.

final

அந்த கையெழுத்து சஞ்சிகை வெளியிடுவதில் கிடைத்த அனுபவம் எனக்கு “எழிலை” வெளியிடுதலிலும் உதவியது. ஆக்கங்களாக நிறைய கட்டுரைகளே வந்திருந்தன. எல்லாவற்றையும் அச்சிலிட எங்கள் பட்ஜற் இடம் கொடுக்கவில்லை. சிறந்தவற்றை மட்டும் தெரிந்தெடுத்தோம். அதனால் சிலர் எம்மை குறை கூறிய நிகழ்வும் இடம்பெற்றது. நாங்கள் பரீட்சைக்கும் படித்துக் கொண்டு கிடைத்த பணத்தில் சஞ்சிகையை அடித்து முடிக்க வேண்டியிருந்தது.

திருமதி கோகிலா மகேந்திரன் என்பவர் புதிதாக பயிற்சி பெற வந்துள்ளார் என்றும், அவர் சிறுகதை எழுதுவார் என்றும், நண்பர்கள் கூறினர்கள். நான் அவரைப்பற்றி கேள்விப் பட்டிருக்கின்றேனே தவிர நேரில் பார்த்ததில்லை. ஆனால் ஒரு முறை எங்கள் batch மாணவர்களுக்கும் புதியமாணவர்களுக்கும் சினிமா மண்டபத்தின் மேடையில் நடந்த ஒரு பட்டிமன்றத்தின் போது அவரைக் கண்டேன். மிகவும் மெலிந்தவராகவும் பலவீனமானவராகவும் தோற்றமளித்தார். அவரே புதிய மாணவர்களின் அணித் தலைவர் என்றார்கள்.

எங்கள் அணித் தலைவராக மேடைக் கூச்சம் இன்றி நன்கு வாதாட வல்ல திரு. பத்மநாதனை அனுப்பியிருந்தோம். திரு.பத்மநாதனின் திறமைக்கு முன்னால் திருமதி கோகிலா மகேந்திரனின் அணி தோற்றுப் போய் விடும் என்று முழுமையாக நம்பியிருந்தோம். ஆனால் பட்டி மன்றம் ஆரம்பமாகிய பின், மெலிந்த அந்த பெண்மணியின் பேச்சு ஆற்றலையும் தமிழை அறுத்து உறுத்து பேசிய முறையையும், குரலின் வலிமையையும் கண்டு யாருக்கு வெற்றி என்று நடுவர் அறிவிக்காமலே நாம் புரிந்து கொண்டோம். அணித் தலைவர்கள் ஆரம்பத்தில் நிகழ்த்திய ஐந்து, ஐந்து நிமிடப் பேச்சிலேயே திருமதி கோகிலா மகேந்திரன் சபையோரை கட்டிப் போட்டு விட்டார்.

பிற்காலத்தில் இலக்கிய உலகில் தமக்கென தனி இடங்களை பிடித்துக்கொண்ட திருமதி கோகிலா மகேந்திரன், திரு. இராதேயன், திருமதி தாமரைச்செல்வி ஆகியோர் எங்கள் “எழில்” பத்திரிகைக்கு எவ்வாறு பங்களிப்பு செய்தார்களென்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-16-12-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-17-01-05-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-18-01-12-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-19-01-19-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-20-01-26-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *