கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 24 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

ஆசிரியர் கலாசாலை வாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமாக அமைந்ததற்கு எங்கள் அதிபர்களும், விரிவுரையாளர்களும் , ஏனைய அலுவலர்களும்,நூலகரும் சிறந்த முறையில் சேவையாற்றியது பெரிதும் உதவியது. எங்களுக்கு முதலாமாண்டு அதிபராக உயர் திரு. கந்தசாமி அவர்கள் அதிபராக இருந்தார். இவருக்கு முன்னரும் ஒருவர் அதே பெயரில், அவரைப் போலவே சிறந்த சேவையாற்றியபடியால் அவரை ‘நெடுவல்’ கந்தசாமி என்றும் இவரை ‘கட்டை’ கந்தசாமி என்றும் ஆசிரிய மாணவர்கள் தங்களுக்குள் இரகசியமாக கதைத்துக் கொள்ளுவார்கள்.

திரு. கனகலிங்கம் பிரதி அதிபராக இருந்தார். அடுத்த ஆண்டு உயர்திரு. கந்தசாமி ஓய்வு பெற, திரு. கனகலிங்கம் அவர்கள் அதிபராக பதவி உயர்வு பெற்றார். இப்போது பண்டிதர் திரு. சச்சிதானந்தன் பிரதி அதிபராக பதவி உயர்வு பெற்றார். இந்த புகழ்பெற்ற, எல்லாத் துறையிலும் வல்ல மனிதரைப் பற்றி எழுதுவது தான் எனது பிரதான நோக்கம். எனினும் நன்றி உணர்வு காரணமாக ஏனைய விரிவுரையார்களைப் பற்றியும் சில முக்கியமான விடயங்களைப் பற்றி மட்டும்  குறிப்பிட வேண்டிய தேவை எனக்கு உண்டு.

எங்கள் துறைத் தலைவர் திரு. இரட்ணவேல் ஓர் ஆசிரியர் திலகம். அவரது நேர ஒழுங்கு, சிறந்த சேவை, சிக்கனமான கதை, கடமை மனப் பார்வை என்பன எங்களுக்கு இவர் போல வர வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது. விரிவுரையாளர் திரு. சிவானந்தநாயகம் எல்லா மாணவர்களையும் சமனாக நடத்தும் உயர்ந்த பண்பாளர்.

திரு. நல்லையா உடுப்பிலும் நேர்த்தி. உள்ளத்திலும் நேர்த்தி. இவரது பாடத்தில் எல்லா மாணவர்களுமே சிறந்த பெறு பேறு பெறக்கூடிய முறையில் கற்பித்து தயார் படுத்துவது இவரது தனித் திறமை. திருமதி. அரிராச சிங்கம் கடமையே கண்ணானவர். இவரது கணவர் திரு. அரிராச சிங்கம் பல கணித நூல்களை ஆக்கியவர். விரிவுரையாளர் திரு R.S. நடராசா உளவியல் பாடத்தை கற்பித்தவர். மாணவர்களிடமிருந்து கருத்துக்களைப்  பெற்று கற்பிப்பவர். ஆசிரிய மாணவர்களுக்கிடையே விவாதங்களை நடக்கச் செய்து அவர்கள் ஆர்வத்துடன் கற்க வழி செய்து விடுவார்.

விரிவுரையாளர் திரு. அருட்பிரகாசம் தனது மாணவர்கள் யாவரும் உடற் கல்வி பாடத்தில் சித்தியடைந்து விட வேண்டும் என்று கடுமையாக உழைப்பார். பரீட்சைக் காலத்தில், விசேட வகுப்புக்களை வைத்து, வினா, விடை வகுப்புக்களையும் வைத்து ஆயத்தப் படுத்தி விடுவார். திரு. சண்முகலிங்கம் அதிகம் கதைக்க மாட்டார். ஆனால் எதற்கும் ஒரு புன்னகை. கடமையில் கரிசனை.

திரு.சோமசுந்தரம் English lecturer. English நாடக இயக்குனர். எனது தோற்றத்தைக் கண்டு பெண் பாத்திரத்தில் நடிக்க பொருத்தமானவன் என்று அழைத்துச் சென்று, எனது கடும் குரலைக் கண்டு திகைத்து, ஓடு என்று விரட்டி விட்டவர். நாடகம் தனக்கு பூரண திருப்தி தரா விட்டால் கடைசி நிமிடத்திலும் ரத்துச் செய்து விடக் கூடியவர். சிலை போல நிற்கும் காவலாளியாக நடிப்பவர் கூட ஒவ்வொரு நாளும் பயிற்சி பெற வர வேண்டும்.

ஒரு முறை நாடக விழா அன்று, நாடகம் ஆரம்பிக்க இருந்த அந்த கடைசி நேரத்தில், விருந்தினர்களும் வந்து விட்ட பின்னர் நாடகத்தில் நடிக்கும் ஒருவர் வரவில்லை என்றதும் விழாவையையே ரத்துச் செய்தவர் என்று கூறுவார்கள். தனக்கு முழுத் திருப்தி வந்தால் தான் எதனையும் முன்னின்று செய்வார். இந்த அவரது பழக்கம் என்னை அறியாமல் என்னிடமும் வந்து விட்டது. அதனால் பின்னாளில் பல கோட்ட மட்ட, மாவட்ட மட்ட, மாகாண மட்ட, தேசிய போட்டிகளில் எனது மாணவர்கள் வெற்றியடைய அந்த பழக்கம் உதவியது. பின்னாளில் திரு. சோமசுந்தரம், கிளிநொச்சி மாவட்ட பிரதம கல்விப் பணிப்பாளராக வந்து எங்கள் ஊருக்கும் சேவை புரிந்தார்.

நான் இங்கு பிரதானமாக எழுத நினைத்தது பண்டிதர் ஐயா பற்றியே. எங்கள் இனத்திற்கு பெருமை தேடித் தருவதற்காக இறைவனால் அனுப்பப்பட்டவரே சச்சிதானந்தன் என்ற அபூர்வப் பிறவி. அவரது பிரதான பாடங்கள் தமிழ், சைவசமயம். ஆனால் அவரால் English, கணிதம், விஞ்ஞானம், வரலாறு, இலக்கியம் முதலிய சகல பாடங்களையும் மிக திறமையாக கற்பிக்க முடியும்.

எங்களுடன் G.S.Q வில் கணிதம் படிப்பவர்களும் இருந்தார்கள். அவர்கள் பண்டிதரின் ஆற்றலை சோதிக்க முற்பட்டு மூக்கு உடைபட்டிருக்கின்றார்கள். மிகவும் சிக்கலான கணக்குகளை சந்தேகம் கேட்பவர்களைப் போல கொண்டு வந்து கொடுப்பார்கள். அவர்  நாங்கள் யாவரும் இலகுவில் விளங்க கூடிய முறையில் மிக இலகுவாக விளங்கப் படுத்தி விடுவார். சிறந்த எழுத்தாளர். மிகச் சிறந்த கவிஞர். ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதில் வல்லவர். வேட்டி, நாஷனல், சால்வையில் மிக கம்பீரமாக கலாசாலையைச் சுற்றி வருவார். அவரிடம் ஆங்கிலம் கற்பது மிக நல்லதொரு அனுபவமாக இருக்கும். பொது அறிவு விவரங்களை ஆசிரிய மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

சில வேளைகளில் மாணவர்கள் மிக சிக்கலான கணக்குகளை கொடுக்க, அதை வேண்டி வைத்துக் கொண்டு வேறு விடயங்களைப் பற்றி கதைப்பார். கொடுத்த மாணவர்கள் இன்று பண்டிதர் முறையாக மாட்டிக் கொண்டு விட்டார் என்று நண்பர்களுடன் சைகை செய்து மகிழ்வார்கள். பெல் அடிக்க சரியாக ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது எழுந்து அந்த கணக்கை இலகுவாக எல்லோருக்கும் விளங்கும் வண்ணம் விளக்கி செய்து விட்டு, எழுதுங்கோடா என்று சொல்லி எழுந்து நடந்து போய் விடுவார்.

thanthai-selva.-493x300

இவருக்கு அரசியலிலும் நாட்டமிருந்தது. தந்தை செல்வாவுடனும், பொட்டர் நடராசாவுடனும் பண்டிதர் சச்சிதானந்தனும் தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து, பிரிந்து வந்து தமிழரசுக் கட்சியின் முதல் கூட்டம் நடத்திய அன்று நடந்த சம்பவங்களை, நேரடி வர்ணனை செய்து காட்டுவார். மேடையில் தந்தை செல்வா, பண்டிதர், வேறும் சில பிரமுகர்கள் அமர்ந்திருந்தார்கள். பின்னாளில் மாவட்டசபைக்கு தமிழரசுக்கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டவரான பொட்டர் நடராசா புதிய கட்சியின் கொள்கை விளக்கத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றார்.

திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் விசுவாசிகளில் சிலர் திடீரென மேடையின் பின் பக்கத்தில் தோன்றினர். அநேகமாக தலைவரின் அனுமதியின்றித் தான் வந்திருப்பார்கள் என்று பண்டிதர் கூறினார். அவர்களுக்கு தலைவர் மீது அவ்வளவு பக்தி. அதிலொருவன் பொட்டருக்கு அருகே போய் நின்றவன், மெதுவாக பொட்டரின் வேட்டியைப் பிடித்து திடீரென்று  உருவி எடுத்து விட்டான். ஆனால் பொட்டர் கொள்கை விளக்கம் முழுவதையும் வாசித்து முடிப்பதிலேயே கண்ணாக இருந்தார். நல்ல காலம் பொட்டர் உள்ளுக்கு ஒரு களிசானும் மேலே நாஷனலும் போட்டிருந்த படியால் மானம் பிழைத்தது என்று சொல்லி பண்டிதர் சிரித்தார். எங்களுக்கு அந்தக் கால அரசியலும் சிறிதளவு விளங்கியது.

அன்றைய அரசியல் பற்றி எனக்கும் ஒரு அனுபவம் சிறு வயதில் ஏற்பட்டது. நாங்கள் எங்கள் இரண்டு ஆச்சிமாருடனும் அவர்களின் மகள்மாரான தவம் அன்ரி, கமலா அன்ரி ஆகியோருடனும் யாழ்ப்பாணத்தில் தங்கி படித்த காலம். தவம் அன்ரி வேம்படியில் English சில் படித்தவர். அவருக்கு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் பேசும் English பிடிக்கும். அதனால் அவர் தமிழ் காங்கிரஸ் ஆதரவாளர். கமலா அன்ரி வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் பண்டிதர்களிடமும் வித்துவான்களிடமும் தமிழ் படித்தவர். அதனால் அவர் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்.

திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றார். சைக்கிள் சின்னமும் அதற்கு முன்னுக்கு புள்ளடியும்  பொறித்த பட்ஜ் வாங்கி குத்திக் கொண்டு நாங்களும் வீடு வீடாக அந்த பெரிய தலைவருடன் சென்றோம். இடையில் அவரது பிரதி நிதியின் அலுவலகத்தில் எங்களுக்கு சோடாவும் பிஸ்கட்டும் கிடைத்தன. நாங்கள் இளைஞரான குமார் பொன்னம்பலத்திடம் சேர்ட்டில் குத்தும் பற்ஜ் இற்காக கெஞ்சியபடி பின் தொடர்ந்தோம். எல்லாக் கட்சி பட்ஜ் களையும் சேகரித்தல் தேர்தல் காலத்தில் எங்கள் பொழுது போக்குகளில் ஒன்றாகும்.

ஒவ்வொரு வீட்டினுள்ளும் நுழைய முன்னர் தலைவர், தனது அந்த வட்டார பிரதிநிதியிடம் ஏதோ கேட்டு, அவர் பதிலில் திருப்தியடைந்து தலை ஆட்டுவர். இவ்வாறு செய்து, அவர்களை நன்கு அறிந்தவர் போல நடந்து கொள்ளுவார். அதனால் அவர்களின் அன்பையும் பெற்று விடுவார். அடுத்தது எங்கள் வீடு. தலைவர் பிரதிநிதியிடம் இங்கு இருப்பவர்கள் யார்? யாரின் ஆதரவாளர்கள் என்று கேட்டார். “இரண்டு ஆச்சிமார் உள்ளனர். இவ்வளவு நாளும் இரண்டு பேரும் உங்களுக்குத் தான் வாக்களித்தார்கள். இப்போது பிள்ளைகளுக்கும் வாக்குரிமை வந்துவிட்டது. கமலா தாயாரை மாற்றி வைத்திருக்கின்றா. தொடர்ந்து தக்க வைப்பது உங்கள் கெட்டித்தனம், ஐயா” என்றார் பிரதிநிதி. நாங்கள் போன போது ஒரு ஆச்சி மாவிடிக்க, மற்றவர் அரித்துக் கொண்டு இருந்தா.

வேகமாக நடந்து மா இடித்த ஆச்சியிடம் சென்ற திரு ஜீ.ஜீ. பொன்னம்மலம்  “என்ரை அம்மா பாவம். இந்த வயதிலும் மா இடிக்கிறதைப் பார்க்க கவலையாக இருக்கிறது” என்று கூறியவர் “தாங்கோ அம்மா உலக்கையை” என்று உலக்கையை வாங்கி சில முறை மாவை இடித்தார். “நீ விடு அப்பன்.” என்று உலக்கையை மீண்டும் வாங்கிய ஆச்சி “நீ எங்கடை பிள்ளை. எங்கள் வாக்கு உனக்குத் தான். எங்களிடம் நீ அலையத் தேவையில்லை ராசா” என்றார். மாவை அரித்துக் கொண்டிருந்த ஆச்சிக்கும் கண்கள் கலங்கி விட்டன. அவர் போன பின் கமலா அன்ரியும் கதைத்து தானே பார்த்தார். “போடி, என்ரை பிள்ளை மா இடித்துத் தந்ததை நீ காணேல்லையோ? அவனுக்கு தான் நான் போடுவேன்” என்றார் ஆச்சி. ஆச்சியின் பிடிவாதம் தெரிந்த அன்ரி தொடர்ந்து ஒன்றும் கதைக்கவில்லை. கமலா அன்ரியால் போதிக்கப்பட்டு மனம் மாறியிருந்த அவரின் தாயாரும் மீண்டும் ஜீ.ஜீ இன் ஆதரவாளராக மாறிவிட்டா.

எங்கள் பயிற்சி காலத்தில், பரீட்சைப்பெறு பேறுகளில் மட்டு மட்டாக இருப்பவர்களைப் பற்றி சில வேளைகளில் பயிற்சிக் கலாசாலையைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர்களை அழைத்து, பேப்பர்களை மறு பரிசீலனை செய்வது வழக்கமாம். கூடுதலாய் கலாசாலையின் சார்பில் பண்டிதரைத் தான் அனுப்புவது வழக்கம்.     வெறும் பேப்பர்களைக் கொடுத்தவர்களுக்கு பண்டிதரால் ஒரு உதவியும் செய்ய முடியாது.

“டேய், எதையென்றாலும் எழுதி பேப்பர்களைக் கறுப்பாக்கி விடுங்கோடா. 1948, 1945, என்று ஏதாவது ஆண்டுகளை அடிக்கடி எழுதுங்கள். பரீட்சைத் திணைக்களத்தால்  வருபவர்களுடன் நான் வினாக்களுக்கு ஏற்றவாறு கதைப்பதற்கு ஏதுவாக நீங்களும் ஏதாவது எழுதி வைக்க வேண்டும். மகாத்மா காந்தி, சிக்மன் பிராயிட் என்று சில பெயரையென்றாலும் எழுதுங்கள். நான் ஒரு மாதிரி கதைத்து பாஸ் போட வைத்துவிடுவேன் என்று கூறி சிரிப்பார்.

1945 என்று எழுதினீர்களென்றால் இவனுக்கு W.W. கன்னங்கரா இலவசக் கல்வியை கொண்டு வந்த ஆண்டு தெரிந்திருக்கறதென்று சொல்வேன். 1924 என்று எழுதினால் இவனுக்கு மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் நடைமுறைப்படுத்திய கல்விக்கொள்கை பற்றி தெரிந்திருக்கின்றது என்று கதைப்பேன். புறா கழுத்தை உயர்த்தி நடந்தது என்று நீ எழுதினால், எப்படி படிப்படியாய் உணவை உயர்த்தி வைத்து புறாவை அப்படி நடக்க செய்வது என்ற பரிசோதனையைப் பற்றி நான் சொல்லுவேன் என்பார். சிக்மன்ட் புறாயிட் இன் பெயரை எழுதினால் இவனுக்கு உளவியல் பற்றி தெரிந்திருக்கிறது என்று கூறுவேன் என்பார். பெரும்பாலும் உடற்கல்வியை பாடநெறியை பிரதானமாக படிப்பவர்களுக்கு தான் தனது உதவி ஒவ்வோர் ஆண்டும் தேவைப்படுவதாக பண்டிதர் கூறுவார். அவர்கள் கல்விச் சான்றிதழ்களை விட, விளையாட்டுச் சான்றிதழ்கள் மூலம் விளையாட்டுத் துறை ஆசிரியர்களாக வந்தவர்கள். விளையாட்டில் Alrounder மாதிரி எங்கள் பண்டிதர் பாடங்களைப் பொறுத்த வரையில் ஒரு சர்வகலாவல்லவன்.

பண்டிதரின் ஆக்கங்கள் ஆசிரியர் கலாசாலையின் சகல சஞ்சிகைகளிலும் இடம் பெறும். அவரால் எழுதப்பட்ட கவிதைகள், கட்டுரைகள் பல நூல் வடிவில் வெளி வந்திருக்கின்றன. பிரதி அதிபர் கடமை, விரிவுரைகள், நூலாக்கங்கள்,பொதுத் தொண்டு, பிரயாணங்கள் முதலியவற்றுடன் பண்டிதர் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும் படித்துக் கொண்டு, ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பார். இவர் எங்கள் யாவருக்கும் ஒரு உதாரண மனிதராக திகழ்ந்தார்.

எங்களுடன், பயிற்சி பெற்ற நண்பர்களைப் பற்றிய அடுத்த அத்தியாயத்தின் பின்னர், எனது சொந்த மண்ணான கிளிநொச்சியில் நான் செய்த கடமை பற்றி எழுத எண்ணியுள்ளேன். அங்கு சேவை புரியும் பொழுது பல சவால்களை எதிர் கொண்டு, பல சாதனைகளையும் எனது மாணவர்கள் செய்திருக்கின்றார்கள்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-16-12-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-17-01-05-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-18-01-12-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-19-01-19-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-20-01-26-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-21-02-09-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-22-02-16-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-23-03-02-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *