கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 25 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

ஆசிரியர் என்பவருக்கு அது ஒரு தொழிலா? அல்லது சேவை தானா? என்ற கேள்வி என்றும் இருந்து கொண்டு தான் இருக்கும். 33 வருடங்களும் 9 மாதங்களும் ஆசிரியராக, அதிபராக இருந்த எனக்கு இந்த கேள்வி அடிக்கடி வரும். தனியே தொழில் தேடுபவர்கள் ஆசிரியராக வரக்கூடாது என்று தான் எனது மனச்சாட்சி கூறுகின்றது. சரி. சேவை என்றே எடுத்துக் கொள்வோம். ஆசிரியன் சாப்பிடுவதில்லையா? அவனுக்கு குடும்பங்கள் இருக்கக்கூடாதா? அவனுக்கு சம்பளம் வேண்டாமா? வேலை வேண்டும் என்று தானே நானும் ஆசிரியராக வந்தேன். ஆனால், வந்த பின் புரிந்து கொண்டேன். இது பணம் தேடுவதற்கான தொழில் அல்ல.

இந்த மண்ணில் நல்ல பிள்ளைகளாக வந்து பிறந்தவர்களை, மேலும் நல்லவர்களாகவும், வல்லவராகவும், நல்ல மனிதர்களாகவும் மாற்றுகின்ற சேவை தான் என்று. இந்த சேவை செய்பவர்களை மகிழ்வாக வாழ வைப்பது, அரசினதும், சமூகத்தினதும், பெற்றோரதும் கடமையாகும். ஆசிரியர்களுக்கு கலாசாலைகள் மூலம் பயிற்சி கொடுப்பது, அரசும் சமூகமும் ஆசிரியர்களுக்கு செய்யும் சிறந்த கைமாறு என்றே கருதுகின்றேன். ஆசிரியர் கலாசாலை பயிற்சியின் மூலம் எம்மை புடம் போட்டு பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்தது.

ஆசிரியர் கலாசாலை எமக்கு பயிற்சியை மட்டுமல்ல, நல்ல பல நண்பர்களையும் வழங்கியது. இவர்களை பயிற்சி முடிந்த பின்னரும் அடிக்கடி பார்க்க வேண்டும் பழக வேண்டும் என்றெல்லாம் எண்ணியிருந்தேன். பயிற்சி முடிந்து 38 ஆண்டுகளாயின. ஓய்வு பெற்று 11ஆண்டுகளாயின. எனது நண்பர்களில் எட்டுப் பேரைக் கூட நான் சந்தித்ததில்லை. யார் இருக்கிறார்கள்? யார் இந்த நாட்டிலேயே இருக்கின்றார்கள்? யார் இவ்வுலகில் இருக்கின்றார்கள்? எதுவும் தெரியாது.

இரண்டு வருடங்களும் நன்கு பழகிய மூன்று நண்பர்களை முதலில் பார்ப்போம். அன்பு நண்பன் ஜெகநாதன். இன்றும் தொடர்பில் உள்ள ஒரே ஒரு நண்பர். இவரது திருமணம் பயிற்சியின் பின்னரே நடை பெற்றது. நானும் மனைவியும் கட்டாயம் பங்கு பற்றுவதாக இருந்தோம். தவிர்க்க முடியாத காரணத்தால் மனைவி வர முடியவில்லை. நான் மட்டும் போய் பங்கு பற்றினேன். பின்னர் எனது தந்தையின் மரணத்திற்கு வந்திருந்தார். இடப்பெயர்வின் போது ஒரு முறை நானும் மனைவியும் அவரது குடும்பத்தவர்களை முரசு மோட்டையில்  போய் பார்த்து வந்தோம். பின் நான் மட்டும் அவரை ஸ்கந்தபுரத்தில் ஒரு முறை கண்டு கதைத்தேன். அவ்வளவு தான்.

நண்பர் மாணிக்கவாசகர் எதனையும் மகிழ்ச்சியாகவும் விளையாட்டாகவும் நினைப்பவர். இவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கும். இறுதிப் பரீட்சையில் English கொஞ்சம் சுமாராக எழுதியிருந்தேன். சில வேளை C வந்தாலும் வரும் என்றேன். “ஏன் மச்சான் C என்று சொல்லுறாய். A என்று சொல்லன். Result வரும் போது நாங்கள் ஒன்றாய் இருக்க மாட்டம் தானே?” என்று கலாய்த்தார். எனக்கு B கிடைத்தது. இடையில் அதிபர் நேர்முகப் பரீட்சைக்கு தோன்றிய போது மட்டும் ஒரு முறை நேரில் கண்டேன். பின்பு அண்மையில் அவரது மரணச் செய்தி மட்டும் கிடைத்தது. மிகவும் கவலை அடைந்தேன். அப்போது சென்று கலந்து கொள்ள முடியாத தூரத்திலிருந்தேன்.

நண்பன் ரவீந்திரனின் திருமணம் நாங்கள் கலாசாலையில் இருந்த போது தான் நடை பெற்றது. மாணிக்கவாசகர் தான் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார். வளலாய் கிராமத்தின் பாரம்பரிய வைத்தியரின் மகள், அவருக்கு பொருத்தமாக பட அவரது திருமணத்தில் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக பங்கு பற்றினோம்.

கலாசாலையில் கற்கும் போது, தனது மனைவியுடன் நாங்கள் வசாவிளானில் இருந்த வீட்டிற்கும் வந்திருக்கின்றார். இவர் இப்போது கனடாவில் வாழ்கின்றார். பயிற்சியின் பின்னர் இவரை நான் கண்டதில்லை. ஆனால் இவரும் எனது மைத்துனர் பேரின்பநாதனும் கனடாவில் நல்ல நண்பர்கள்.

அலெக்ஸ்ஸாண்டர் எனது தந்தையின் மரணத்தின் போது வந்திருந்தார். பின்னர் கண்டதில்லை. இவர் இப்போ எங்கே என்பது எனக்கு தெரியாது.

செல்வச்சந்திரன் எனது தந்தையின் மரண வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் இவரை யாழ்ப்பாணத்தில் ஒரு திருமண வீட்டில், நண்பன் காங்கேசபிள்ளையுடன் கண்டது தான். பின்பு சந்தித்ததில்லை. காங்கேசபிள்ளை ஆசிரியர் கலாசாலையின் அதிபராக அப்போது கடமையாற்றிக் கொண்டிருந்தார்.

அண்மையில் அருட்சோதியை என்னைப் போல ஓய்வுநிலை அதிபராக கண்டேன். அவர் எம் நண்பர்கள் பலருடன் தொடர்பிலிருந்தார். நண்பன் யோகலிங்கம் இறந்து விட்ட செய்தியைச் சொன்னார். மாணிக்கவாசகரின் மரண வீட்டிற்கு போய் வந்த கதையைக் கூறினார்.

நண்பன் நாகேந்திரசீலனை, அவர் அவசரமாக பிரயாணம் செய்து கொண்டிருந்த போது கிளிநொச்சி பஸ் நிலையத்தில் கண்டு ஐந்து நிமிடங்கள் கதைத்தேன்.

ஆக, ஆசிரியர் கலாசாலை நட்பும் புகையிரப் பயணத்தில் சந்திக்கின்ற நட்பு போன்றது தானா?

இந்த சந்தர்ப்பத்தில் என்னுடன் வைத்தீஸ்வராவில் படித்த நண்பர்களை எண்ணிப் பார்க்கின்றேன். ஒருவருடனும் இப்போது தொடர்பிலில்லை. வாழ்க்கை என்றால் இப்படி தான் போலும். ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமாக தெரிகின்ற நட்பு, உறவு என்பன வேறொரு சந்தர்ப்பத்தில் அவ்வளவு முக்கியமற்று போய்விடுகின்றது.

logo-old-green2

1979 ஆம் ஆண்டு எனது வாழ்வின் மிக முக்கியமான ஆண்டாக இருந்தது. எனது இரண்டாவது மகள் இந்த ஆண்டு, ஆவணி மாதம் 14 ஆம் திகதி மானிப்பாய் ஆஸ்பத்திரியில் பிறந்தாள். நான் எனது கலாசாலையின் இறுதிப் பரீட்சைக்கு கடுமையாக படிக்க வேண்டி ஏற்பட்டது. இவற்றுடன் ‘எழில்’ சஞ்சிகையையும் வெளியிட்டு வைத்தேன். இந்த ஆண்டுடன் இரண்டாம் முறையாகவும் மாணவனாக வாழ கிடைத்த சந்தர்ப்பம் முடிகின்றது. யா/ பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலை வளாகத்தை மீண்டும் ஒரு முறை எண்ணிப் பார்க்கின்றேன். அங்கு கற்க கிடைத்ததை ஒரு வரமாகவே இன்றும் எண்ணுகின்றேன்.

வசாவிளானில் வாழ்ந்த போது சுசி பழகிய அரசகுமாரிக்கு நாம் பயிற்சி முடிந்து வெளியேறிய பின் தான் திருமணம் நடை பெற்றது. அதற்கு நான் சுசி, பிள்ளைகளுடன் போய் வந்தேன். அதன் பின் வசாவிளான் செல்ல முடியவில்லை.

lankan-tamils_0_0_0_crop1432853392930.jpg_1718483346

நாடு பிரச்சனைகளால் குழம்பியது. நாங்களும் உயிரைத் காப்பாற்ற ஓடி ஓடி திரிந்தோம். மயிலிட்டி, பலாலி, வசாவிளான், புன்னாலைக்கட்டுவன், ஊரெழு மக்களும் இடம் பெயர்ந்தனர். இடையில் நிர்மலாவிற்கு திருமணம் நடந்ததாக அறிந்தோம். ஒருவரையும் சந்திக்க முடியவில்லை. தாமும் தமது விவசாய பூமியும் தோட்டமும் என்று வளமாக வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டம் நியாயத்திற்கு விரோதமாக அவர்களது மண்ணிலிருந்து விரட்டப்பட்டனர். இன்று வரை அவர்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. தோலைகட்டி பண்ணையில் வாழ்ந்த கிறிஸ்தவ துறவிகளின் கெதியும் அதே தான். நாங்கள் பலாலி ஆசிரியர் கலாசாலையில் கற்ற அந்த பொற்காலத்தை  நினைத்துப் பார்க்கின்றேன். கண்கள் கலங்குகின்றன.

(முதலாம் பாகம் முடிவுற்றது. எனது சொந்த மண்ணான கிளிநொச்சியில் பயிற்சியின் பின் நான் செய்த சேவை விபரம் இரண்டாம் பாகத்தில் தொடரும்)

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-16-12-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-17-01-05-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-18-01-12-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-19-01-19-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-20-01-26-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-21-02-09-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-22-02-16-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-23-03-02-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-24-17-03-17/One thought on “கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 25 | மகாலிங்கம் பத்மநாபன்

  1. மறக்கமுடியாத இனிய நினைவுகளை எம்மோடு பகிர்ந்தீர்கள் .தங்கு தடையில்லாத உங்கள் எழுத்து நடை எம்மையும் ஆர்வத்தோடு வாசிக்கத்தூண்டியது. நன்றிகள். தொடரும் உங்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *