கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 3 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

இலங்கையின் பிரதான நிலப்பரப்பிலிருந்து விலக்கியுள்ள ஒரு தீவே மன்னார் ஆகும். பிரதான நிலப்பரப்பில் தள்ளாடி என்ற இடமும் மன்னார் நகரமும் சுமார் இரண்டு மைல் தூரமான வீதியால் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வீதியில் ஒரு பெரிய பாலமும் பல சிறிய மதகுகளும் உள்ளன. மன்னார் நகரம் ஓர் அழகிய, மிகவும் சிறிய, அடக்கமான, மாவட்ட மக்களின் எல்லாத்தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய நகரம்.

காலை வேளையில் நகரம் மிக அழகாக காட்சியளிக்கும். நான் காலை முதல் யாழ்ப்பாண பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிடுவேன். ஒரு சில ஆசிரியர்களும் ஏனைய உத்தியோகத்தவர்களும் இதில் பயணம் செய்வார்கள். மன்னாரில்,ஆசிரியர்கள் பெரும்பான்மையினர் வங்காலை, எருக்கலம்பிட்டி, நகரம் முதலிய இடங்களிலிருந்து வருபவர்களுக்கு இரண்டு யாழ்ப்பாண பஸ்களும், ஒரு கொக்குப்படையான் பஸ்ஸுமே பிரயாணத்தைச் மார்க்கம்.

அப்போது, தற்போதுள்ளது போல மோட்டார் சைக்கிள் வசதிகள் இருக்கவில்லை. பஸ் பயணத்தினால், முருங்கன் நீர்ப்பாசன திணைக்களத்தில் வேலை செய்யும் திருத்தணீஸ்வரன் என்ற தொழில் நுட்ப உத்தியோகத்தரும், அணிஸ் மரைக்கார் என்ற ஆசிரியரும், ஶ்ரீ காந்தன் என்ற ஆசிரியரும் நண்பர்கள் ஆனார்கள். மாலை நேரத்தில் சகலருக்கும் உள்ள பொழுது போக்குகள் சினிமா, நூலகம், பாலத்தில் கடற்காற்று வாங்குதல் என்பவை மட்டும் தான்.

வெள்ளிக் கிழமை என்றால் மன்னார் சித்தி விநாயகர் ஆலயம் செல்லலாம். நூலகமும் பாலமுமே பிரதான பொழுது போக்கு ஆக கொண்ட எங்களுடன் கந்தசாமி ஆசிரியரும், கிறிஸ்டி, ஶ்ரீ தரன் என்ற நீர்ப்பாசன திணைக்கள ஊழியர்களும் இணைந்து கொண்டார்கள். நான் மன்னாரிலிருந்த மூன்று வருடங்களும் எங்கள் நட்பு தான் மன்னார் வாழ்கையை இனிமையானது ஆக்கியது.

இந்த நட்பின்  காரணமாக பல இனிய சம்பவங்கள் நடைபெற்றன. அணிஸ் மரைக்கார் முஸ்லீமாக இருந்தபடியால் வீட்டில் தயாரிக்கப்பட்ட வட்டிலப்பம் சாப்பிட்டிருக்கிறோம். செய்கை முறையை அவரிடமிருந்து கற்ற நான் பரந்தனில் அதனை செய்து உறவினர்களை துன்பப்படுத்தியுள்ளேன். இதை விட உண்மையான நட்பு என்றால் என்ன என்று புரியக்கூடிய சம்பவங்களும் நடைபெற்றன. பாடசாலை உபகரணங்களை நகரத்தில் வாங்குவதற்கு அதிபர் என்னை நம்பத்தொடங்கி விட்டார்.

விவசாயத்தில் ஒட்டுக் கத்திகள்  கொண்ட ஒரு தொகுதி வாங்க வேண்டி ஏற்பட்டது. அதிபர் காசை என்னிடம் தந்துவிட்டார். நண்பர்களுடன் சேர்ந்து நகரம் முழுவதும் விலைப்பட்டியல் சேகரித்தோம். கத்திகளையும் பார்வையிட்டோம். எல்லா இடமும் ஒரே விலை தான். அணிஸ் எதற்கும் பார்ப்போம் என்று, பின்பக்கம ஒழுங்கை ஒன்றிலுள்ள தமது நண்பரின் கடைக்கு அழைத்துச் சென்றார். அதே கத்திகளின் பழைய ஸ்ரொக் ஒரு தொகுதி, அரைவாசி விலைக்கு கிடைத்தது. கத்திகளை நன்கு பரிசீலித்தோம். தரமானவை என்றுணர்ந்து, உடனேயே வாங்கி விட்டோம்.

முதலாளி இல்லாத படியால், மறுநாள் வந்து, பணத்தையும் தந்து, பற்றுச் சீட்டையும் பெறுமாறு விற்பனைப் பையன் கூறினான். திரும்பிவரும் போது முஸ்லீம் ஹோட்டலில் தேனீர் அருந்தச் சென்றோம். அப்போது அணிஸ் விளையாட்டாக, கத்தியின் அரைவாசி காசு இருக்கு தானே, அந்தக்காசில் இன்றைய தேனீரைக் குடிப்போம் என்று விளையாட்டுக்கு சொன்னார். அப்படியான அற்ப எண்ணம் எனக்கோ, அணிஸுக்கோ இல்லை. ஆனால் பிழையாக விளங்கிக் கொண்ட கந்தசாமி கோபித்துக் கொண்டு போய் விட்டார்.

மறு நாள், குறிப்பிட்ட பணத்தைக் கொடுத்து, பெற்றுக் கொண்ட பற்றுச் சீட்டையும் காட்டிய பின்னர் தான் கந்தசாமி மீண்டும் எங்களுடன் நட்பானார். எங்கள் காலத்து ஆசிரியர்கள் அந்த அளவிற்கு நேர்மையானவர்களாகவும் விசுவாசமானவர்களாகவும் இருந்தார்கள். என்னுடைய சேவை முழுவதும் பணம் சம்பந்தமான சந்தர்ப்பங்களில் எல்லாம் எனக்கு கந்தசாமியின் நினைவு வரும்.

இரண்டு வருடங்களின் பின்னர், பயிற்சிக் கல்லூரி சென்ற கந்தசாமி, எனது திருமணத்திற்கும், பின்னர் எனது தந்தையின் மரண வீட்டிற்கும் வந்தவர், பின் இன்றுவரை தொடர்பில் இல்லை. அந்தக் காலத்தில் வட்டாரக்கல்வி அதிகாரிகள், வாங்கும் பொருட்களையும், பற்றுச்  சீட்டுக்களையும் பரிசீலிப்பார்கள். பல பாடசாலைகளையும் தரிசித்த அவர், எங்கள் பாடசாலையின் பற்றுச் சீட்டுக்களை பரிசோதித்த போது நான் அரைவாசி காசுக்கு வாங்கியதைப் பற்றி, பின்னர் நடத்திய ஆசிரியர் கூட்டத்தில் புகழ்ந்து பாராட்டினார். நேர்மையாக நடப்பது எப்போதும் நன்மையே விளைவிக்கும்.

Classroom (1)

நான் மன்னாரில் இருந்து பாடசாலைக்குச் சென்ற மூன்று வருடங்களில், ஒவ்வொரு நாளும் பாடசாலை செல்லும் முதல் ஆளாக இருந்தேன். இந்த விபரத்தை அறிந்த முருங்கன் வரையும் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், எருக்கலம்பிட்டி, வங்காலை, நகரம் முதலிய இடங்களிலிருந்து வரும் எல்லா ஆசிரியர்களும் முதல் பஸ்சில் வந்தால் என்ன? என்று எதிர் பார்த்தார்கள். இதனால் கோபமுற்ற சில ஆசிரியர்கள், என்னிடம் வந்து என்னை ஆசிரியர்கள் மத்தியில் ஒரு கருங்காலி என்று கூறினார்கள். அவர்களின் பாடசாலைகள் யாவும் பஸ் நிலையத்திலிருந்து முக்கால் மைல் தூரத்திற்குள் இருப்பதையும், நான் இரண்டு மைல் நடக்க வேண்டியதையும் கூறி, விளங்கப் படுத்த புரிந்து கொண்டார்கள்.

எங்கள் பாடசாலை மாணவர்கள், நான் பொறுப்பை ஏற்ற போது கணித, விஞ்ஞான பாடங்களில் மிகவும் குறைவாக இருந்தார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு இலகுவாக புரியக்கூடிய வகையில் அடிப்படையிலிருந்து கற்பித்தேன். சிலபஸ் பிந்தி விடாதிருப்பதற்காக திங்கள் முதல் வியாழன் வரை ஒன்றரை மணித்தியாலங்கள் வரை விசேஷ வகுப்புக்களையும் மாலை நேரங்களில் எடுத்தேன்.

10_c9bca9ba494e7e36e2e811c237630066

நாளாக ஆக எல்லா மாணவர்களுக்கும் கணித பாடத்திலும் விஞ்ஞான பாடத்திலும் விருப்பம் ஏற்பட்டுவிட்டது. இது வரை காலமும், திரு மடுத்தீன் ஆசிரியரின் ஆங்கில பாடத்தில் தான் அவர்களுக்கு விருப்பம். பெற்றோர்கள் தங்கள் ஊரவரான மடுத்தீன் ஆசிரியரிடம், தங்கள் பிள்ளைகள் கணித பாடத்தில் காட்டும் ஆர்வத்தைப்பற்றி கூறியிருக்கின்றார்கள்.

மடுத்தீன் ஆசிரியர் தான் இது நாள்வரை ஆங்கில பாடத்தை மிக விசுவாசமாக கற்பித்தவர். அவர் ஒரு நாள் கூறினார்” என்ன மாஸ்டர், ஊரவர்கள் எல்லாம் உங்களைத் தான் புகழ்கின்றார்கள்” என்று கூறினார். அவர் குரலில் ஏளனமோ? வஞ்சகமோ இல்லை. எனது விசுவாசமான சேவையைப் போற்றும் தன்மையே காணப்பட்டது. அதுவரை என்னைக் கண்டு விலகி விலகி போன பெற்றோர்களும் பழைய மாணவர்களும், என்னைத் தேடி வந்து கதைக்கத் தொடங்கினர்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *