கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 4 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

பாடசாலைக்கு பஸ்சில்  போகும் போது முதலில் பாலத்தில் கடற்காற்று வந்து தாலாட்டும். பின்பு தள்ளாடி. தள்ளாடி தொடக்கம், திருக்கேதீஸ்வரம் புகையிரத நிலையம் வரை பற்றைக்காடு. அங்கே ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும் மேயும்.

1-little-donkeys-in-the-new-forest-paul-cummings

ஐரோப்பியர் இலங்கைக்கு வந்த போது கொண்டு வந்து விட்ட கொவ்வேறு கழுதைகள் (pony) எவ்வாறு நெடுந்தீவில் பெருகியுள்ளனவோ, அதே போன்று அவர்களால் கொண்டு வரப்பட்ட கழுதைகள் (donkey) மன்னாரில் பெருகியுள்ளன. திருக்கேதீஸ்வரம் புகையிரத நிலையத்தை தாண்டி விட்டால் ஒரே பசுமை நிறைந்த வயல் வெளிகள். பொன் விளையும் பூமி. முருங்கனின் வளம் கொழிக்கும் களி மண்ணும், காங்கேசன்துறையின் சுண்ணாம்புக் கற்களும் தான் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சீமெந்தின் உயர்ந்த தரத்திற்கு பிரதான காரணம்.

உயிலங்குளம் சிறு நகரத்தில் பஸ்சிலிருந்து இறக்கிவிடுவேன். அங்கு சில பலசரக்குக் கடைகளும், சில தேனீர்க்கடைகளும், இரண்டு, மூன்று வாடகைக்கு ஓடும் கார்களும் இருந்தன. நானாட்டான் போகும் பாதையின் முகப்பில் ஒரு பள்ளிவாசல் இருந்தது. நான் நானாட்டான் வீதியில் இறங்கி நடக்கத் தொடங்குவேன். முதல் ஒன்றரை வருடங்கள் நடந்த நான், இறுதி ஒன்றரை வருடங்களுக்கு உயிலங்குளத்தில் ஒரு சைக்கிள் வைத்திருந்தேன்.

anuradhapura-0060

பசுமை நிறைந்த வயல்களையும், தெளிந்த நீரோடும் வாய்க்கால்களையும், இடைக்கிடை காணப்படும் சிறு குளங்களையும், குளங்களிலே படர்ந்திருக்கும் அல்லித்தாமரைகளையும், அவற்றிலே பூத்துக் கிடக்கும் வெண்ணிற அல்லி மலர்களையும், அல்லி இலைகளின் மேல் ஓடி விளையாடும் நீர்ப் பறவைகளையும் பார்த்துக்கொண்டே நடந்தால் களைப்பே தெரியாது.

பாடசாலைக்கு முதல் வரும் மணற்குளம், பாடசாலைக்கு நேர் முன்னே உள்ள பாலைக்குளி குளம், பாடசாலை தாண்டினால் வரும் காத்தான் குளம் என்று ஒரே குளங்கள் நிறைந்திருக்கும். இக்குளங்களில் நீர் வற்றி விடாதிருக்க கட்டுக்கரைக்குளம் என்றும் நீரை வழங்கிக் கொண்டே இருக்கும். காலை வேளைகளில் சிறுவர்கள் இக் குளங்களில் குதித்து, நீந்தி, குளித்து விளையாடுவார்கள். பாடசாலைக்கு நடந்து செல்லும் எனக்கு வயதையும், ஆசிரியர் என்ற திரையையும் மறந்து, அந்தச் சிறுவர்களைப் போல குளத்தில் நீந்தி விளையாட ஆசை வரும்.

thumbnail_IMG_1603

மன்னாரில் குளங்களைப் போலவே ஊருக்கு ஊர் தேவாலயங்களும் (Church) கட்டாயம் இருக்கும். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், என்ற பொன் மொழியை சரியாக கடைப் பிடிப்பவர்கள் தேவாலயங்கள் நிறைந்த மன்னார் மக்களேயாவார்.

29 ஆம் திகதி வைகாசி மாதம் 1975 ஆம் ஆண்டு சுசீலாதேவியைத் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி உடனேயே நான் வேலை செய்யும் இடத்தில் வந்து வாழ மனப்பூர்வமாக சம்மதித்தார். கிராமத்தின் வசதியீனங்களை நான் எடுத்துக்கூறினேன். நான் வாழும் இடத்தில் தன்னாலும் வாழமுடியும் என்று உறுதியாக இருந்தார்.

தனியாளாகவும், முன்பின் தெரியாதவனாகவும் நான் இருந்த பொழுது எனக்கு இருக்க இடம் தர விரும்பாத கிராம மக்கள், மின்சாரமோ, ஏனைய வசதிகளுமற்ற தங்கள் கிராமத்தில் எனது மனைவி வந்து வாழப்போகின்றா என்றதும் போட்டி போட்டுக் கொண்டு இடம் தர தயாரானார்கள். நாங்கள் முதலில் சார்ளி என்பாரின் வீட்டைத் தெரிவு செய்தோம்.

ஒரு அறையையும் மண் குடிசையான ஒரு சமையல் அறையையும் தந்தார்கள். வீட்டிற்கு முன்னால் குளம். போதாத்தற்கு, இடைப்போகமும் வேளாண்மை செய்வதற்காக பாரிய குழாய்க்கிணறும் அங்கு இருந்தது.

திருமணம் முடிந்த இரண்டாம் வாரம், சகல சமையல் பாத்திரங்களுடனும், அரிசி, மா, தூள் போன்றவற்றுடனும் மாமனார் (மனைவியின் தந்தை) மாமியுடன், எங்களை தமது காரில் ஏற்றி வந்து எமது புதுக் குடித்தனத்தை ஆரம்பித்து வைத்து விட்டு சென்றார். சார்ளியின் வீட்டில் அவருடன் அவரது மனைவியும், மாமியாரும், சிறு குழந்தையும் மட்டுமே. அந்த வீட்டின் முன்னே வரிசையாக கமுகு மரங்களும், தோடை, எலுமிச்சை மரங்களும், செவ்விளநீர் மரங்களும், பின் பக்கத்திலே தென்னம் சோலையும் அதைத் தாண்டி வயல்களும் இருந்தன.

நாம் குடியிருந்த வீடு குளிர்மையானதாக எப்போதும் இருந்தது. நாங்கள் வருகிறோம் என்றறிந்த கிராம மக்கள் பலர் எங்களைப் பார்ப்பதற்காக, வரவேற்பு அளிப்பவர்கள் போல காத்திருந்தார்கள். சார்ளியின் மனைவியும், பிரதானமாக அவரின் மாமியாரும் எனக்கும் எனது மனைவிக்கும் மிகவும் அனுசரணையாக இருந்தார்கள். மாமியார் எங்களிருவரையும் தனது பிள்ளைகள் போன்றே பார்த்துக் கொண்டார்.

வீட்டை சோலையாக மாற்றி வைத்ததில் அவரது பங்கு மிகவும் அதிகம். அவரைப் பார்த்து, அவரது செயல்களை அவதானித்து வாழ்ந்த நாங்கள், இன்று எங்கள் வீட்டை அதைப்போன்ற அழகான சோலையாக மாற்றி வைத்துள்ளோம்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *