கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 6 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

திரு. மனுவல் அவர்கள் தொம்மை மாஸ்டரின் மாமனார். அவர் அவ்வூரில் நிறைய வயல்களுக்கு உரிமையாளர். எங்கள் பாடசாலை அமைந்திருக்கும் காணி அவரது தந்தையாரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. அவருக்கு நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும். முதல் மகளை காத்தான்குளத்தைச் சேர்ந்த தொம்மை ஆசிரியர் திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது மகள் திருமணம் செய்து அந்த ஊர் வழக்கப்படி பரப்பாங்கண்டலில் கணவன் வீட்டில் வாழச் சென்று விட்டார். ஏனைய பிள்ளைகள் எங்கள் பாடசாலையில் படிப்பவர்கள். அதனால் அவர்கள் எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

திரு. மனுவல் அவர்களின் வீடு மிகவும் பெரியது. அது போதாதென்று வீட்டின் வட புறத்தில், வீட்டுடன் இணைத்து, இரு அறைகளையும் ஒரு குசினியையும் புதிதாக காட்டியிருந்தார். அதில் ஒரு அறையை எமக்கு தந்தார்கள்.

4

கிராம மக்கள் வீடு கட்டும் போது அழகாக குசினியையும் இணைத்து கட்டுவார்கள். ஆனால் வீட்டுடன் இணைந்த குசினியில் ஒருபோதும் சமைக்க மாட்டார்கள். பிறிம்பாக ஒரு மண் வீடு கட்டி அதிலேயே சமைப்பார்கள்.

மனுவல் ஐயா ஒரு பெரிய குசினியையும், அதனுடன் இணைந்த சிறு குசினி ஒன்றையும் அமைத்து வைத்திருந்தார். சிறு குசினியை எங்களுக்கு தந்தார்கள்.

தொம்மை மாஸ்டரும் அக்காவும் அருகேயுள்ள காணியில் வீடு கட்டுவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு, ஐயா வீட்டில் தான் அப்போது இருந்தார்கள். ஐயாவின் வீடு, அவரது ஒரே மகனான அலோசியஸ்சிற்கே என்பது அந்த கிராமத்தின் எழுதாத சட்டம்.

நாங்கள் சார்ளியின் வீட்டிலிருந்து, மனுவல் ஐயாவின் வீட்டிற்கு குடி வந்து விட்டோம். சாரளியும், மனைவியும், ஆச்சியும் மனவருத்தத்துடனேயே விடை தந்தார்கள். இம்முறை எனது மனைவிக்கு அனுசரணையாக மாமியும் வந்திருந்தார். மனுவல் ஐயா, அம்மா, தொம்மை மாஸ்டர், அக்கா எல்லோரும் எங்களை தங்கள் குடும்ப அங்கத்தவர்களாகவே ஏற்றுக்கொண்டு விட்டனர்.

அம்மாவும் அக்காவும் எனது மனைவிக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தனர். அக்கா நன்கு படித்தவர். பல கலைகளையும் கற்றவர். எனது மனைவிக்கு கிராமத்து தனிமை தெரியாதிருக்க, தான் போகும் இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்.

Lankem

thumbnail_IMG_1581மாமி மடுக்கோவிலுக்குப் போக ஆசைப்பட்டார். கடைசி பிள்ளைகளான நேசமும் விறிசிற்றும் அலோசியஸ்ஸும் எம்முடன் வருவதற்கு விரும்பினர். காலை எழுந்து அம்மாவும் அக்காவும் சமைத்து சாப்பாடு தர, நாங்கள் ஆறு பேரும் அதிகாலை பஸ்சிலேறி மடுக்கோவிலுக்குச் சென்றோம்.

மடுக்கோவில் பெரியதாக அழகானதாக இருந்தது. சுற்றிவர பக்தர்கள் தங்குவதற்கான வீடுகளும், பெரும் மரங்களும் நிறைந்து காணப்பட்டன. நாங்கள் வழிபாடு முடித்து, கோவில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்து, மர நிழலில் இருந்து சாப்பிட்டு, உடன் திரும்ப விரும்பாது, மாதாவின் சன்னதியில் இருந்து கதைத்து விட்டு, மாலையில் வீடு திரும்பினோம்.

thumbnail_IMG_1591

அண்மையில் மடுமாதாவைத் தரிசிக்க சென்றோம். மாதா வழமை போல அருள் பாலித்துக்கொண்டு இருக்கின்றார். கோவில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கின்றது. விருந்தினர் விடுதிகளும் ஏராளம். சாதாரண நாட்களிலேயே பக்தர்களும் நிரம்பி வழிகின்றார்கள். வளாகத்தைச் சுற்றியிருந்த அந்த பெரு விருட்சங்களில் பலவற்றைக் காண முடியவில்லை.

நாங்கள் வாழ்ந்த கிராமத்தின் அன்றைய நிலையை அங்கு நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்தலின் மூலம் அறியலாம். நிகழ்வு துன்பகரமானது தான். அதை நினைக்கும் போது இப்போது புன்முறுவல் தான் வருகின்றது. நான் எழுத அது ஒரு  ஒரு பக்க கதை போன்று இருக்கும்.

நானாட்டான் வீதியில் காத்தான்குளம் கிராமத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் சூரியகட்டைக்காடு. அங்கிருந்து இரண்டு மைல் தூரத்தில் நானாட்டான். நானாட்டான் என்பது நானாட்டான்.ம.வி,மற்றும் ஒரு சிறு பாடசாலை, அஞ்சலகம், A.G.A.கந்தோர், சிறு வைத்தியசாலை, பலசரக்குக் கடைகள், தேனீர்க்கடைகள் உள்ள ஒரு சிறு நகரம். அந்நகரை நோக்கி ஒருவர் தனது எட்டு வயதான மகளுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எமக்கு இந்த கதையினை வர்ணித்த காத்தான்குள வாசி சைக்கிளில் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்தார்.

நன்கு முற்றி விளைந்த சிறுத்தைப்புலி ஒன்று பல்வலி ஏற்ப்பட்டு, வாயே திறக்க முடியாத நிலையில், காட்டில் வேட்டையாட முடியாது, பட்டினியில் வாடி, ஊருக்குள் ஏதாவது சாப்பிட கிடைக்கும் என்று எதிர்பார்த்து, நானாட்டானுக்கு வந்தது.

அதன் கண்களில் மகளுடன் வந்த அப்பாவி ஆப்பிட்டு விட, அது அவர் மேல் பாய்ந்து தாக்கியது. நல்ல காலம் மகளுக்கு ஒரு காயமும் இல்லை. கதை சொன்னவர், தனது சைக்கிளை விட்டு விட்டு பயத்தில் பாதிக்கப் பட்டவருக்கு உதவி செய்யநினைக்காமல், பாய்ந்து பக்கத்தில் நின்ற பனை மரத்தில் ஏறிவிட்டார்.

அவர் எங்களுக்கு “நான் முந்தியொரு நாளும் மரத்தில் ஏறியறியாதவன். எப்படி ஏறினேனென்றும் தெரியாது. பனை மரத்தின் வட்டை கைகளால் பிடித்த பொழுது தான் மரத்தில் ஏறி விட்டேன் என்று உணர்ந்தேன்” என்று சொன்னார்.

மகள் சிறு பிள்ளை. பயந்து கத்தியபடி A.G.A கந்தோருக்கு ஓடியது. “அப்பாவை பூனையொன்று புரட்டி, புரட்டி கடிக்கின்றது” என்று கதறி அழுதது. A.G.A துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, பிள்ளை வழிகாட்ட , சம்பவ இடத்திற்கு ஜீப்பில் சென்றார். சிறுத்தை என்பதை உணர்ந்து கொண்டார்.

feature_amurtigerமனிதனை பாதிக்காமல் சிறுத்தையை சுட வேண்டும். சிறுத்தைக்கு பல் வலி இருந்ததால் மனிதன் பிழைத்தான். சிறுத்தை பற்களால் கடிக்கமுடியாமல் கால் நகங்களால்  அந்த மனிதனை கீறி உருட்டுவதும் பின் சற்றுத் தூரம் சென்று இருப்பதுமாக, மாறி மாறி செய்தது. அவ்வாறு அது விலகிச் சென்ற  ஒரு தருணத்தில் அதிகாரி சிறுத்தையை சுட்டுக் கொன்றார்.

மனிதர் முதலுதவியின் பின் மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். சுட்டபின் பரிசோதித்த பொழுது தான் சிறுத்தை பல் வலியால் பாதிக்கப்பட்ட சிறுத்தை என்பது தெரிய வந்தது. மனிதனை சிறுத்தை கடிக்காவிட்டாலும், நகங்களால் நரம்புகளைக் கீறியதாலும் இரத்தம் பெருமளவில் வெளியேறியதாலும் குணமாக மூன்று மாதங்களுக்கு மேல் சென்றது.

2365814-Bullock-Carts-2

தொம்மை மாஸ்டர் மிகவும் அமைதியானவர். நிறைய வயல் செய்வார். வயலில் எவ்வளவு உழைத்தாலும் பாடசாலைக் கடமையை ஒழுங்காக செய்வார்.

அத்தனை வேலைகளுக்குள்ளும் பொழுது போக்கு,விளையாட்டு, சுற்றுலா, பொது நிகழ்வுகளில் ஈடுபாடு என்று எல்லாவற்றிலும் பங்கு பற்றுவார்.

வண்டில் மாடு பூட்டி சவாரி செய்வதில் விருப்பம். அவருடனும் அக்காவுடனும்  பிள்ளைளுடனும் நானும் மனைவியும் உயிலங்குளத்திலுள்ள தியேட்டருக்கு வண்டியில் சென்று படம் பார்த்திருக்கிறோம்.

 

 

தொடரும்….

 

 

naban   மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *