கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 8 | மகாலிங்கம் பத்மநாபன்


வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

பாடசாலை வாழ்க்கை மிகவும் இனிமையானது. மாணவராக வாழ்ந்த வாழ்வு மிக மிக இனிமையானது. ஆசிரியராக வாழ்ந்த வாழ்விலும் இனிமைக்குக் குறைவில்லை. எனது வாழ்வில் பாடசாலையில் சேரும் வரையான, நான்கு வருடங்களும், பின்னர் க.பொ.த.(உ.தரம்) முடிந்து ஆசிரியர் பதவி கிடைக்கும் வரையான நான்கு வருடங்களும் ஆக எட்டு வருடங்கள் போக, இளைப்பாறிய ஐம்பத்தேழு வயது வரை, நாற்பத்தொன்பது வருடங்கள் பாடசாலையில் இருந்திருக்கிறேன்.

ஆரம்பக் கல்வியை பெரிய பரந்தன் பாடசாலையில் நல் ஆசான் வைத்தீஸ்வரக் குருக்களிடமும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணத்தில், முதலில் நமசிவாய வித்தியாலயத்திலும், பின்னர் வைத்தீஸ்வராவிலும் கற்ற எனக்கு, மன்னாரில், மிகவும் பின்தங்கிய பகுதியான மணற்குளம், பாலைக்குளி, காத்தான்குளம், இலந்தைமோட்டை பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த அளவு சிறந்த கல்வியை அளிக்க விரும்பினேன். எனக்கு அங்கு கிடைத்த நான்கு அதிபர்களுமே அதே சிந்தனை உடையவர்களாக இருந்தது மிகவும் வாய்ப்பாக போய் விட்டது.

109418-ml-92103

ஏட்டுக் கல்வியுடன் கல்விச் சுற்றுலா மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு மிகவும் உதவி செய்யும். மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற என் கனவு திரு.அலெக்சிஸ் பெர்னாண்டோ என்ற அதிபர் மாற்றலாகி வந்தபோது தான் நிறைவேறிற்று.

மாணவர்களின் நன்மை கருதி ஆசிரியர்கள் கூறுகின்ற ஆலோசனைகளை செவி மடுத்து ஆவன செய்வார். கல்விச் சுற்றுலா பற்றி  நான் கூறிய போது உடனேயே சம்மதித்த அவர், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆசிரியர் கூட்டத்தில், சுற்றுலா பற்றி கலந்தாலோசித்து, திட்டம் இட்டுக் கொண்டோம்.

கல்வி அலுவலகத்தில் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது எங்கள் பாடசாலையில் பெண் ஆசிரியைகள் எவரும் இல்லை. மாணவிகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாயின் பெண் ஆசிரியைகள் கட்டாயமாக வேண்டும். அப்போது நான், கல்வி அலுவலகம் அனுமதிக்குமாயின் எனது மனைவி வரத் தயாராக உள்ளார் என்றேன். திரு.தொம்மை மாஸ்டரும், தனது மனைவியாரும் வருவார்,  எனக் கூறினார்.

பெற்றோராசிரியர் கூட்டத்தைக் கூட்டி, இரண்டு தாய்மாரையும், இரண்டு பழைய மாணவிகளையும் உடன் அழைத்துச் செல்வதாக தீர்மானிக்கப்பட்டது. கல்வி அலுவலகத்திலும் அனுமதி பெறப்பட்டது. நான் கல்விச் சுற்றுலா பற்றிய ஆலோசனைகள் நடைபெறும் போதே, சுற்றுலா பற்றியும், மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும், சுற்றுலா பற்றிய விபரங்களைப் பதிவு செய்ய குறிப்புக் கொப்பியொன்றை வைத்திருக்க வேண்டிய  அவசியம் பற்றியும் மாணவர்களுக்கு விளங்கப்படுத்தியிருந்தேன்.

மாணவர்கள் தாங்கள் ஒரு போதுமே சுற்றுலா சென்றதில்லை என்றும் மன்னாருக்கு ஆஸ்பத்திரிக்கு மட்டும் போயிருப்பதாகவும், மடு மாதாவிற்கு பல தடவைகள் சென்றிருப்பதாகவும், தம் ஊரில் புகையிரத நிலையம் இருந்தாலும், தாம் ஒரு நாளும் ரெயிலில் பயணம் செய்ததில்லை என்றும், மன்னார் கோட்டை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும், கப்பல் எப்படியிருக்கும் என்றே தங்களுக்கு தெரியாது என்றும் கூற, கேட்ட எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.

சுற்றுலா பற்றி அதிபருடன் கதைத்ததை எண்ணியும், எனது மனைவியுடன் அந்த சுற்றுலாவில் இணைந்து செல்வது பற்றியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாங்கள் தனியே ஒரு பஸ்ஸைப் பிடிக்காமல், வழித் தடத்தில் செல்லும் பொது பஸ்சிலும், திரும்பி வரும் பயணம் ரெயினிலும் என்றும் தீர்மானித்துக் கொண்டோம்.

நாநாட்டானுக்கு ஓடும் பஸ் சிறியது. பேசாலைக்கு ஓடும் பஸ்கள் சில நேரம் பெரியதும் சில வேளை சிறியதும் ஆகும். அதிபர் பஸ் டிப்போ சென்று, நாம் சுற்றுலா செல்லும் நாளில் இரண்டு சந்தர்ப்பத்திலும் பெரிய பஸ்ஸை விடும்படி, கேட்டிருந்தார்.

எமது பாடசாலையின் தரம் ஐந்து மாணவர்களும், அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்களும் முழுமையாக பங்குபற்றினார்கள். சில தரம் நான்கு மாணவர்களும் அதிபரிடம் விசேட அனுமதி பெற்று வருகை தந்திருந்தனர். ஆசிரியர்களிடமும், எனது மனைவி, தொம்மை மாஸ்டரின் அக்கா ஆகியோரிடமும் பிள்ளைகள் பகிர்ந்தளிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் மாணவ முதல்வர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டனர்.

காலை ஆறரை மணிக்கு பஸ் பாலைக்குளிக்கு வந்து சேர்ந்தது. மாணவர்கள் வரிசையாக ஏறினர். எனக்கு இப்போது நினைக்கும் தோறும், மகிழ்ச்சியளிக்கின்ற விடயம் இது தான். நான் சேவை செய்த வேறெந்தப் பாடசாலையிலும் இந்த மாணவர்களினளவிற்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கண்டதில்லை. மற்றப் பாடசாலைகளில் பெரும்பாலான பிள்ளைகள் ஒழுங்காக இருந்தாலும், ஓர் சிலர் குழப்படி செய்வார்கள்.

122

ஏழு மணியளவில் மன்னார் நகரில் இறங்கினோம். திட்டமிட்ட படி முதலில் மன்னார் கோட்டைக்கு வரிசையாக நடந்து சென்றோம். அந்த காலை வேளையில் மன்னார் நகரமும், கடலும், பாலமும், கிழக்கே தோன்றிய சூரியனும் மிகவும் ரம்மியமாக காட்சியளித்தன.

நடந்து மன்னார் கோட்டையை அடைந்தோம். எங்கள் அதிபரிடம் காணப்பட்ட சிறப்பியல்பு பற்றி இங்கே குறிப்பிடல் பொருத்தமானது. நாங்கள் போகவிருந்த சகல இடங்களிலும் முந்திய நாட்களிலேயே போய் அனுமதி பெற்றிருந்தார். அதனால் மாணவர்களை அழைத்து சென்ற இடமெல்லாம் எமக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Sri_Lanka_Mannar_Fort

மாணவர்களை சுதந்திரமாக கோட்டை முழுவதும் சுற்றிப் பார்க்க அனுமதித்தோம். பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்கள் கவனமாக இருந்தனர். மாணவர்கள் கோட்டையை முதல்முதலாக பார்ப்பதனால் அங்குமிங்கும் ஓடி ஓடி அவதானித்து, அதனை குறிப்புக்களும் எடுத்துக் கொண்டனர்.

இன்னும் வெயில் ஏறாதபடியால் மாணவர் அதிகம் களைக்கவில்லை. நாம் ஒன்பதரை மணிக்கு மன்னார் நீதிமன்றத்தில் நிற்க வேண்டும்.குறித்த நேரத்திற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் நீதி மன்ற வாசலில் நின்றோம்.

பார்வையாளர் கலரியில் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து கொண்டனர். நீதி மன்றத்தில் அமைதியாக இருக்கவேண்டும் என்பதும், நீதிபதி வரும் போது எழுந்து, அவர் அமர்ந்த பின் தான்,அவர்கள் இருக்கவேண்டும் என்பதை நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம். எனினும் நீதி மன்ற அலுவலர்களாலும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டனர். நாங்கள் சென்ற அன்று, தந்தை செல்வாவின் மகனான திரு.சந்திரஹாசன் வாதாடிய வழக்கை காணும், கேட்கும்  சந்தர்ப்பம் கிடைத்தது.

Mannar-Court-720x480

ஒரு வழக்கு முடிந்து, மறு வழக்கு தொடங்கு முன் இருந்த சிறிய இடை வேளையில் அமைதியாக நீதிமன்றத்தை விட்டு வெளியேறினோம். மன்னார் கடல் அட்டைத் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காக நாங்கள் பதினொரு மணிக்கு அங்கிருக்க வேண்டும்.

ஆறுதலாகவும் வரிசையாகவும் நடந்து கடல் அட்டைத் தொழிற்சாலையை அடைந்தோம். மீனவர்களால் கடல் அட்டைகள் கொண்டு வரப்படுவதைக் கண்டோம். அங்கே கடல் அட்டைத் தொழிற்சாலை நிர்வாகம் எங்களை சுற்றிக் காட்டி, விளக்கம் தர ஒரு அலுவலரை நியமித்திருந்தார்கள். அவர் கடல் அட்டை வந்து சேர்வதிலிருந்து, பதப்படுத்தப்படும் படி முறைமைகளையும், பதப்படுத்தப்பட்ட பின்னர்  பொதி செய்வது வரையும், நேரில் காட்டி விளக்கம் தந்தார். இந்தக் கடல் அட்டைகள் ஏற்றுமதி செய்வதற்கே என்றும், உள்ளூரில் விற்பனை செய்வதற்கல்ல என்றும் அலுவலரால் கூறப்பட்டது.

நாம் திட்டமிட்டபடியே, குறிப்பிட்ட நேரத்தில் முதல் மூன்று நிகழ்வுகளும் இனிதே நிறைவேறின. நாங்கள் மதிய உணவை எடுத்து வந்திருந்தோம். எனவே முன் அனுமதி பெற்றிருந்த படி மன்னார் விளையாட்டுக் கழகத்தின்  மண்டபத்திற்கு சென்றோம்.

அங்கு பைப்பில் கழுவுவதற்கான நீரும், உள்ளே குடிப்பதற்கன நீரும், இருந்து சாப்பிடுவதற்கு மேசை, வாங்குகளும் இருந்தன. இயற்கை தேவைகளை நிறைவேற்ற, அதற்கான கூடங்களும் இருந்தன. கொண்டு சென்ற பொதிகளைப் பிரித்து, மதிய உணவை உட்கொண்டோம்.உண்ட களை தொண்டருக்கும் உண்டல்லவா? பேசாலை செல்லும் பஸ்சிற்கான நேரம் வரை அங்கு ஓய்வு எடுத்துக்கொண்டோம்.

mqdefault

ஓய்வின் பின் வரிசையாக நடந்து, மன்னார் பஸ் நிலையம் சென்றோம். சிறிது நேரத்தின் பின் பேசாலை செல்லும் பஸ் வந்தது. பஸ் நடத்துனர், மாணவர்களை ஏற்றிய பின்னரே வழமையான பயணிகளை ஏற்றினார். மதிய வெயிலில் வீதியின் இருமருங்கும், கட்டடங்களும் வீடுகளும் இல்லாத பகுதி, பாலைவனம் போன்றே காணப்பட்டது. மன்னாரில் பெற்றோலியம் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் ரஷிய ஆய்வாளர்கள் மன்னாரில் ஆய்வு செய்வதை நாம் முன்னரே அறிந்திருந்தோம்.

இடையில் எருக்கலம்பிட்டி செல்லும் பாதையின் பெயர்ப்பலகையைக் கண்டோம். இரண்டரை  மணியளவில் பேசாலை ரின் மீன் தொழிற்சாலை முன் பஸ்சிலிருந்து இறங்கிக் கொண்டோம். முன் அனுமதி பெற்றிருந்தபடியால் காவலர் எங்களை இன்முகத்துடன் வரவேற்று உள்ளே செல்ல அனுமதித்தார். தொழிற்சலையின் செயற்பாட்டை எங்களுக்கு சுற்றிக் காட்ட இங்கும் ஒரு அலுவலர் காத்திருந்தார். அவசரமற்று, நிதானமாக அந்த அலுவலரின் வழி காட்டலில் தொழிற்சாலையைப் சுற்றிப் பார்தோம். அங்கு நிறைய இளம் பெண்கள் வேலை செய்வதைக் கண்டோம்.

Track-at-Talai-Mannar-pier-end

எமது அடுத்த திட்டம் தலைமன்னார் சென்று, துறைமுகத்தைச் சுற்றிப் பார்த்து, பின்னர் இந்தியாவிலிருந்து தலைமன்னார் வரும் கப்பலில், ஏறி அதனைச் சுற்றிப் பார்ப்பதேயாகும். எனவே பேசாலையிலிருந்து பஸ் ஏறி, தலைமன்னார் பியர் வரை சென்றோம்.

இலங்கையின் முதல் பெண் பிரதமரான திருமதி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கும் இந்தியாவின் அப்போதைய பிரதமரான திரு லால் பகதூர் சாஸ்திரிக்குமிடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி, இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒரு தொகையானவர்களில், ஒரு சில வசதியானவர்கள் விமானத்தில் செல்ல ஏனையவர்கள் தலைமன்னார்-இந்தியா கப்பலின் மூலமே இந்தியா சென்றனர்.

கப்பலில் செல்லும் போது தமது உடைமைகளையும் கொண்டு செல்ல வசதியாக இருந்தது. கப்பலில் வரும் பயணிகள் இறங்கியபின்னர், இந்தியா செல்லும் பயணிகள் ஏற முன்னர் உள்ள இடைவேளையில், நாங்கள் கப்பலில் ஏறி சுற்றிப்பார்க்க அனுமதி பெற்றிருந்தோம். கப்பல் வருவதற்கு நேரம் இருந்தபடியால் நாங்கள் தலைமன்னார் பியர் றோ.க.த.க.பாடசாலையில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டோம்.

DSC_3255

கப்பலும் வந்தது. பிரயாணிகள் இறங்கும் நேரம் வரை காத்திருந்த நாங்கள் துறைமுகம் நோக்கி விரைவாகவும் வரிசையாகவும் நடந்து சென்றோம். மாணவர்கள் கப்பலில் வரிசையாக ஏறினார்கள். எங்களை கப்பல் சிப்பந்தி ஒருவர் கப்பலின் மேற்றளம், பிரயாணிகள் அமரும் பகுதி, கீழே பொதிகளை வைப்பதற்கும் ஊழியர்கள் தங்குவதற்குமான பகுதி, என்ஜின் அறை, கப்பல் கப்டனின் அறை, உணவு உண்ணும் பகுதி எல்லாம் சுற்றிக் காட்டினார்.

கப்பல் இப்போதுள்ள பிரமாண்டமான கப்பல்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது. ஆனலும் ஒரு போதும் கப்பலில் ஏறாத எமக்கும் மாணவர்களுக்கும் அது பெரிதாகவே தோற்றமளித்தது. உணவகத்தில் ஒரு கன்ரீன் காணப்பட்டது. அதில் இலங்கைக் காசில் உணவும் பொருட்களை வாங்கலாம் என்று கூறினார்கள்.

மாணவர்கள் குழு குழுவாக காசு  சேர்த்து தமக்கு விருப்பமான தின் பண்டங்களை வாங்கி பகிர்ந்து உண்டனர். எங்கள் குழுவின் சார்பாக நான் ஒரு அப்பிள் பழத்தை வாங்கினேன். பழம் இப்போது கிடைப்பதை விட மிகவும் பெரியது. எனது மனைவி அதனை பன்னிரண்டு சம துண்டுகளாக்கி, எங்கள் குழுவிற்கு வழங்கினார். எள் என்றாலும் எட்டாய் பிரித்து உண்பது தமிழர் பண்பாடு அல்லவா? அந்த சிறு அப்பிள் துண்டு பாகாய் இனித்தது. நாம் கப்பலில் இருந்து இறங்கி ஒரு ஓரமாக நின்று, அதில் பயணிகள் ஏற்றவகையில் அவதானித்தோம்.

ரெயின் புறப்படும் நேரம் வந்தது. புகையிரத நிலைய அதிபர் எம்மை இரண்டு அடுத்தடுத்த பெட்டிகளில் ஏற்றிவிட்டார். பிந்தி வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில், கொழும்புக்கு செல்பவர்களை எமது பெட்டியில் ஏற்றி, நாங்கள் நான்காவது நிலையத்தில் இறங்கி விடுவோம் என்றும், அதன்பின்னர் அவர்கள் வசதியாக இருந்து பயணம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

214

அந்த பயணிகளுக்கு எமது பிள்ளைகளின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகவும் பிடித்துப்போனது. அதனால் அவர்களை பாடும் படியும் ஆடும் படியும் கேட்டனர். நான் மொழி பெயர்ப்பாளனாக மாறினேன். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை அல்லவா? எமது பிள்ளைகள் உடனேயே பாடியும் ஆடியும் காட்டினர். சுற்றுலாப் பயணிகளும் பிள்ளைகளுடன் சேர்ந்து பாடி, ஆடினர். இடையில் பேசாலை, மன்னார், திருக்கேதீஸ்வரம் நிலையங்கள் போனது தெரியவில்லை.

நாங்கள் இறங்க வேண்டிய மணற்குளம் புகையிரதநிலையம் வந்துவிட்டது. சுற்றுலப் பயணிகளிடம் விடைபெற்றுக் கொண்டோம். அவர்களும் மகிழ்வுடன் கை காட்டி வழியனுப்பி வைத்தனர். நாங்கள் மணற்குளம்  நிலையத்தில் இறங்கியது மறு நாள் கலை ஏழரை மணிக்கு.

புகையிரத நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர் முழுப் பேரும் வந்து காத்திருந்தனர். கோட்டை பார்த்தது, நீதிமன்றம் பார்த்தது, தொழிற்சாலைகள் பார்த்தது, கப்பல் ஏறியது பிள்ளைகளைப் போல எங்களுக்கும் முதல் முறை தான். பிள்ளைகள் ரெயினிலும் முதல் முறையாக ஏறியிருந்தனர்.

பெற்றோர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. ஓடி வந்து எங்கள் கைகளைப் பற்றி நன்றி தெரிவித்தனர். ஆசிரியைகள் இல்லாத போது, அந்தப் பொறுப்பை அக்காவும், எனது மனைவியும் ஏற்றது அவர்களின் மனதைத் தொட்டு விட்டது. தொடர்ந்து வந்த மூன்று மாதங்களுக்கு ஊர் முழுக்க இதே கதை தான். பாடசாலையில் நான் மாணவர்களின் குறிப்புக் கொப்பிகளைப் பார்த்தேன். மிக தெளிவாக எல்லா விபரமும் எழுதியிருந்தார்கள். அதிபருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் காட்டும்படி கூறினேன். பார்த்து மகிழ்ந்தார்கள்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/One thought on “கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 8 | மகாலிங்கம் பத்மநாபன்

  1. ஆசிரியருக்கு.
    ஒவ்வொரு நினைவுகளையும் இலகுநடையில் சரளமாகக் கொண்டு செல்கிறீர்கள். விபரமான உங்கள் எழுத்து மூலம் நாமும் பிள்ளைகளுடன் சென்று பார்த்த உணர்வை எமக்குள் ஏற்படுத்துகிறீர்கள். வியாழன் தோறும் எதிர்பார்த்து காத்திருந்து வாசிக்கும் ஆவலை தூண்டியிருக்கிறது உங்கள் கட்டுரை. நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *