அலெப்போ நகரில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் 36 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நிராகரிப்பு


சிரியாவில் போராளிகள்வசம் சிக்கியுள்ள அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களை மீட்பதற்காக ரஷிய விமானப்படையின் உதவியுடன் அரசுப் படைகள் சமீபகாலமாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலின் எதிரொலியாக போராளிகள் பின்வாங்க தொடங்கியுள்ளதால் அரசுப் படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டுகளைவீசி ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்களே அதிகம் கொல்லப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனால், அலெப்போ நகரவாசிகளில் பலர் உயிர்பயத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 40 ஆயிரம் மக்கள் இவ்வாறு வெளியேறியுள்ள நிலையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் தங்களது வீடுகளில் இருந்து மாற்றிடங்களை நோக்கி சென்றதாக அங்குள்ள போர் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அலெப்போவில் இருந்து வெளியேறிய சுமார் 60 ஆயிரம் பேர் சுற்றுப்பட்டு பகுதிகளில் உள்ள செம்பிறை அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சிரியாவில்.., குறிப்பாக, அலெப்போ நகரில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும். போரால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் நிவாரண உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் கனடா நாட்டின் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஐ.நா.சபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 122 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

சீனா, ரஷியா, ஈரான், சிரியா உள்பட 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட 36 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நிராகரித்தன.

சிரியாவில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கும் அவருக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் நடவடிக்கைக்கும் இந்த தீர்மானம் எச்சரிக்கையாக அமையும் என ஐ.நா.சபைக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா கொண்டுவந்த இந்த தீர்மானம் சிரியாவில் உள்ள மனிதநேயம் சார்ந்த பிரச்சனைகளுடன் அரசியலையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. மனிதநேயம் சார்ந்த பிரச்சனைகளுடன் அரசியலையும் கலப்பது இந்தியாவின் கொள்கைக்கு ஏற்புடைது அல்ல.

எனவே, இந்த வாக்கெடுப்பில் நாங்கள் பங்கேற்கவில்லை என ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *