கண்ணீர் சிந்திய ஒபாமா


நீங்கள் என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் ஆக்கி விட்டீர்கள் என அமெரிக்க அதிபராக ஒபாமா ஆற்றிய இறுதி உரையில் தெரிவித்துள்ளார். ஒபாமா தனது உரையின் போது கண்ணீர் சிந்தியது பலரையும் கலங்க வைத்தது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் ஜனவரி 20 ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் சிகாகோவில் நடந்த வழியனுப்பு விழா நிகழ்வில் அமெரிக்க அதிபராக தனது இறுதி உரையை ஒபாமா இன்று நிகழ்த்தினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்களிடையே அவர் பேசுகையில், நீங்கள் என்னை சிறந்த மனிதனமாகவும், சிறந்த அதிபராகவும் மாற்றி உள்ளீர்கள். நீங்கள் நாள்தோறும் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரமிது. கடந்த சில வாரங்களாக நானும் எனது மனைவியும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறோம். இப்போதைய நிலையில் அமெரிக்கா பலமான இடத்தில் உள்ளது. வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்பை அமெரிக்கா உருவாக்கி உள்ளது.
உங்களால் தான் அமெரிக்கா பலமான நிலையை அடைந்துள்ளது. நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக உள்ளது. இந்த வளர்ச்சி போதாது. இன்னும் நாம் வளர வேண்டும். ஜனநாயகத்தின் மூலமே நமது வளர்ச்சியை அடைய முடியும். பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை திறமையானவர்களாக வளர்க்க வேண்டும். மக்கள் ஒருங்கிணைத்தால் மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் சாத்தியமாகும். 8 ஆண்டுகளாக உங்களின் அதிபராக இருந்ததில் இதனை நான் நம்புகிறேன். இது எனது நம்பிக்கை மட்டுமல்ல நமது அமெரிக்காவின் கொள்கையும் இது தான். ஒன்றாகவே வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம். அடுத்த 10 நாட்களில் அமைதியான முறையில் தலைமை மாற்றம் இருக்கும். அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அமெரிக்க வளர்ச்சியில் குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது. கடந்த 8 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை. சட்டங்கள் மட்டும் போதாது. மனங்கள் மாற வேண்டும். பயங்கரவாதம் அமெரிக்காவில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஒபாமா உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்கள் பலர், அவர் மேலும் 4 ஆண்டுகள் அதிபராக நீட்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது பேசிய ஒபாமா, ஆதரவாளர்களின் கோரிக்கைப்படி அடுத்த 4 ஆண்டுகள் அதிபராக இருக்க முடியாது. எனது நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நேரம் இது. அவர்களை என்றும் நான் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *