இலங்கையில் ஐ.நா. குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம்


பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த ஐ.நா. தீர்மானம், இலங்கையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மேற்பார்வையிட, ஐ.நா. குழு ஒன்று அந்த நாட்டில் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தக் குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. அதிகாரிகள் கொழும்பில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஐ.நா.வின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் தலைமை இயக்குநர்கள் (சி.டி.ஈ.டி.) இலங்கையில் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாள்வது குறித்து அவர்கள் தங்களது சுற்றுப் பயணத்தின் போது விவாதிப்பார்கள் என்றனர் அவர்கள்.

ராணுவ, காவல்துறை நடவடிக்கைகள் மூலம் மட்டுமின்றி, பேச்சுவார்த்தையின் மூலமும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதை இந்தக் குழு வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்தக் குழுவின் பயணத்துக்கு இலங்கை வரவேற்பு தெரிவித்திருந்த போதிலும், விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைக் குழு விசாரணை மேற்கொள்வதற்கு அந்த நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *