இராணுவத்தைப் பயன்படுத்தி ஆட்சியை தொடர மகிந்த திட்டம்.


இலங்கை புலனாய்வு அமைப்புகள் செய்த கருத்தக் கணிப்பின்படி மகிந்த ராஜபக்சயின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தல் பிரசாரத்துக்காக இராணுவத்தைக் களமிறக்கி – தேர்தல் முடிவின் பின்னர் அவர்களைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றார் என்று குற்றஞ்சாட்டியுள்ளது ஜே.வி.பி. எனினும், அவ்வாறானதொரு நிலைமை உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்றும், மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பைப் பாதுகாப்பதற்கு ஜே.வி.பி. இறுதி வரை போராடும் என்றும், இராணுவத்திலுள்ள பெரும்பாலானோர் ராஜபக்‌ஷாக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர் என்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்த அவர், வாக்களிப்பு முதல் இறுதி முடிவு வெளியாகும் வரை அதனைக் கண்காணிப்பதற்கு விசேட பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் – ஜனாதிபதி மஹிந்த ராஜக்‌ஷவுக்கு புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதன் காரணமாகவே எதிரணி மீது சேறு பூசுவதை மாத்திரம் இலக்காகக்கொண்டு அவரது பிரசாரம் அமைந்துள்ளது. இதன்பிரகாரம்தான், மைத்திரி – ரணில் உடன்படிக்கை என்ற போலி கதையை அரசதரப்பு கட்டவிழ்த்துவிட்டது. அரசாலேயே அந்த உடன்படிக்கை தயாரிக்கப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அரசிலிருந்து வெளியேறியவர்கள், அரசில் இருக்கும்போது தெரிவித்த கருத்துகளை விளம்பரப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை அரசு கொண்டுசெல்கின்றது. அதேவேளை, முன்னெப்போதும் இல்லாத வகையில், ராஜபக்‌ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு இராணுவம் இறக்கப்பட்டுள்ளது. இவர்களைப் பயன்படுத்திப் பரப்புரை இடம்பெறுகிறது. போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கு தங்கியிருந்து பல கோணங்களில் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இராணுவத்தின் உயர்மட்ட புள்ளி முதல் கீழ்மட்டம்வரை அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளனர். ஆட்சியைத் தக்கவைப்பதுதான் ராஜபக்‌ஷவின் ஒரே இலக்கு. அதிகாரம் இல்லாமல் அவர்களால் இருக்கமுடியாது. இதனால் எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். எனினும், இம்முறை தோல்வியிலிருந்து விடுபட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, 2010இல் மஹிந்தவுடன் இருந்த நிறையப் பேர் இம்முறை அவரைக் கைவிட்டு பறந்து சென்றுள்ளனர். எனவே, 8ஆம் திகதி ராஜபக்‌ஷவின் தோல்வி உறுதியாகியுள்ளது. மக்களின் வெற்றி தமக்குக் கிடைக்காது என்பது ராஜபக்‌ஷவுக்குத் தெரியும். இதனால், ‘எப்படியாவது வெற்றிபெறுவோம்’ என அறிவித்தல் செய்து, மக்களைக் குழப்பும் செயற்பாட்டால் அச்சத்தைத் தோற்றுவிக்கும் செயலில் இறங்கியுள்ளார். அத்துடன், தோற்றாலும் இன்னும் இரண்டு வருடங்கள் அவர் பதவியில் இருப்பார் என அரச தரப்பிலிருந்து கூறப்படுகின்றது. இராணுவத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலை உருவாவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அரசின் சலுகைகளை அனுபவிக்கும் ஒருசில இராணுவ அதிகாரிகளைத் தவிர, ஏனையோர் இன்று ராஜபக்‌ஷாக’களுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். முகாமிலுள்ள இராணுவத்தினர் எமக்குத் தகவல்களை வழங்குகின்றனர். எனவே, ஆட்சியைத் தக்கவைக்க இராணுவத்தை மஹிந்தவால் பயன்படுத்த முடியாது. இதற்கு மக்களும் இடமளிக்க மாட்டார்கள். எனவே, வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று அச்சமின்றி உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள். ராஜபக்‌ஷ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதைப் பயன்படுத்துங்கள்’ – என்றார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *