இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு கோர்ட்உத்தரவு


இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.

இவர்களில் பலர் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் சீர்திருத்த முகாம்களில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறி வருகிறது.

இவர்களை தவிர மேலும் சில ஆயிரம் பேர் மாயமானதாக குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன.

இலங்கையில் ’உச்சக்கட்ட போர்’ என்ற பெயரில் அப்பாவி தமிழ் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து சர்வதேச போர் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட ராஜபக்சே அரசு, முள்ளிவாய்க்கால் முகாம் என்ற அடையாளத்துடன் ஆயிரக்கணக்கான தமிழர் குடும்பங்களை ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல் குறுகிய முள்வேலிகளுக்கு இடையில் அடைத்து வைத்து மனித உரிமைகளை மீறிய வகையில் அவர்களை சொல்லொண்ணா துன்பத்துக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியது.

இங்கு தங்கியிருந்த கன்னிப்பெண்களின் கற்பினை சூறையாடிய சிங்கள ராணுவ வீரர்கள், இவர்களில் திடகாத்திரமான இருந்த தமிழ் இளைஞர்களையும் முகாமில் இருந்து வெளியேற்றி, வெள்ளை நிற ‘மர்ம வேன்க’ளில் ஏற்றிச் சென்றனர்.

ராணுவத்தின் ரகசிய விசாரணை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் சரிபாதி பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாயமாகி விட்டதாகவும் சில இலங்கை ஊடகங்களே கூட குற்றம் சாட்டுகின்றன. ’தங்களின் குலக்கொழுந்துகளை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என வயது முதிர்ந்த தமிழ்த் தாய்மார்கள் எழுப்பிய கூக்குரலுக்கும், வடித்த சோகக் கண்ணீருக்கும் ராஜபக்சே தலைமையிலான இலங்கை மசியவில்லை.

அந்த ஏழை தாய்மார்கள் வடித்த துயரக் கண்ணீரும், எழுப்பிய துயரக் கதறலையும் அன்றைய தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த உலகத் தமிழர்களில் பலர் தங்களின் பசி, தூக்கத்தை தொலைத்தனர்.

இதனையடுத்து, பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் “காணாமல் போக்கடிக்கப்பட்ட” தங்களது உறவுகளை ஆண்டுக்கணக்கில் தேடிக்கொண்டும், அவர்களின் வருகைக்காக காத்திருந்தும் சோகத்தில் உழல்கின்றனர்.

இந்நிலையில், உச்சகட்ட போரின்போது சரணடைந்து காணாமல் போனவர்களின் நிலை என்னவானது? அவர்களை உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின்மீது இரண்டாவது முறையாக நேற்று விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் எம்.எஸ்.எம். சம்சுதீன், உச்சகட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியலை வரும் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தாக்கல் செய்ய இலங்கை ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இம்மனு மீதான முந்தைய விசாரணையின்போது, சரணடைந்த விடுதலைப் புலிகள் என்றொரு பெயர் பட்டியலை இலங்கை ராணுவம் அளித்திருந்தது. அந்தப் பட்டியலில் சீர்திருத்த முகாம்களில் பயிற்சி பெற்ற தமிழர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

காணாமல் போனதாக குடும்பத்தினரால் தேடப்படும் நபர்களின் பெயர் விபரங்கள் அந்தப் பட்டியலில் இல்லாமல் போனதால், ஒட்டுமொத்தமாக இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தவர்களின் பட்டியலை கோர்ட் கேட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *