தமிழக மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகளை விடுவிக்க முடியாது- இலங்கை பிரதமர் ரணில்


இலங்கை பார்லி.,யில் நேற்று தமிழக மீனவர் பிரச்னை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது அந்நாட்டின் எதிர்க்கட்சிக் கொறடா அனுரா குமார திசநாயகே, இலங்கை கடல் பகுதியில் வாரத்தில் சில நாள்களுக்கு அல்லது இலங்கை கடற்பரப்பில் குறிப்பிட்ட எல்லை வரை தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலனை நடைபெறுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இந்தியா உடனான மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இலங்கை கடல் பகுதியில் சுமார் 1,000 தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இது மீன் வளத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சுருக்குமடி வலைக்குத் தடை விதிப்பதுதான் பிரதான நோக்கம். நமது மீன்வளம் கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

தற்போது தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 130 முதல் 140 படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகளை விடுவிக்க முடியாது. இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து வடக்கு மாகாண மீனவர்களின் கருத்தினை கேட்க வேண்டும். அவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *