கனவுகள் உறங்காது | மாவீரர் நாள் சிறப்புக் கவிதை


தியாகத்தின் சிகரங்கள்..!
வீர யாகத்தின் அகரங்கள்…!!
காற்றோடு கலந்தவர்கள்…!
வீர காவியம் ஆனவர்கள்…!!

நெருப்பாற்றில் குளித்தவர்கள்…!
வரலாற்றில் நிலைத்தவர்கள்…!!
மரணத்தை வென்ற மாவீரர்…!
தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்…!!

மாவீரச் செல்வங்களே…!!!
உங்களின் கல்லறைகள் கூட
பகைவனைப் பயமுறுத்தும்!
அதனால்தானே… அனைத்தையும் அழிக்கிறான்…!?
உங்களின் நினைவுநாள் கூட
எதிரிக்கு உறுத்தும்!
அதனால்தானே… அனைத்தையும் தடுக்கிறான்…!?

உங்களின் தியாகத் தீயில்தான்…
இன்னும் நாம் குளிர்காய்கிறோம்!
இவ்வளவு இழந்த பின்னும்…
இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!!

இனியும் நீங்கள் எங்களுக்காய்
உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீர்கள்!
நிம்மதியாய் உறங்குங்கள்…!
உங்கள் கனவுகள் உறங்காது!!!

போராடினால்தான் வாழ்வென்ற
பொழுதொன்று விடியும்!
விடுதலை வேண்டுமென்ற
விலங்கன்று உடையும்!!

சிதைக்கப்பட்ட கல்லறைகள்
சித்திரமாய்ச் சிறப்பெடுக்கும்!
விதைக்கப்பட்ட கருவறைகள்
புத்துயிராய்ப் பிறப்பெடுக்கும்!
புதைக்கப்பட்ட உணர்வலைகள்
அணைதாண்டிப் பெருக்கெடுக்கும்!

தமிழனாய் மீண்டும் தலை நிமிர்வோம்!
தன்மானத்தோடு மீண்டும் உயிர்பெறுவோம்!!
எவன் எதிர்த்தாலும்
எமனே மறித்தாலும்
அஞ்சாமல் அணிதிரள்வோம்
அஞ்சலி செலுத்த…!

மகா யாகங்கள் கூட வீண்போகலாம் – ஆனால்
உண்மைத் தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை!
புனிதமான உங்கள் தியாகங்கள் மீது ஆணை…!
இடித்துப் புழுதியாக்கப்பட்ட உங்கள் கல்லறைகள் மீது ஆணை!!

தமிழ்க் கருவறைகள் மீண்டும்
உங்களைச் சுமக்கும்!
ஈழத் தமிழ் மண் பார்த்து
உலகமே வியக்கும்!!
வானுயரப் பாயும்
புலிக்கொடி பறக்கும்!!!

நீங்கள் நிம்மதியாய் உறங்குங்கள்…!
உங்கள் கனவுகள் உறங்காது!!!

 

நன்றி : ஒருவன் கவிதை | எழுத்து இணையம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *