இலங்கை வீரர்களுக்கு மஹேல ஜயவர்தன அறிவுரை.


அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி 335 என்ற வெற்றியிலக்கினை எட்டுவதற்காக சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் கவனக்குறைவான துடுப்பாட்டத்தால் இலங்கைக்கு தோல்வியடைய நேரிட்டது.

இந்த தோல்வியின் காரணமாக இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு போராட்டத்துக்குள்ளாகியுள்ள போதும், அடுத்த போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெறுவதன்மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

இலங்கை அணியின் மத்தியவரிசை வீரர்கள் அணியின் பழைய துடுப்பாட்ட உத்திகளை கையாண்டிருக்க வேண்டும் என அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்திருந்த சவாலான வெற்றியிலக்கை நோக்கிய இலங்கை அணிக்கு, திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இவர்கள் 6.5 என்ற ஓட்ட வேகத்துடன், 100 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். இதில், முக்கியமாக அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோருக்கும் நெருக்கடி கொடுத்தனர்.

சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், பகுதிநேர பந்துவீச்சாளரான கிளேன் மெக்ஸ்வெல்லின் பந்துவீச்சுக்கு இலங்கை அணி சற்று நிதானமாக துடுப்பெடுத்தாடியது.

ஆனால், மெக்ஸ்வெல்லின் பந்து ஓவருக்கு இலங்கை அணி வீரர்கள் பழமையான துடுப்பாட்ட உத்தியை கையாண்டு, அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

“மத்திய வரிசையில் இரண்டு சிறந்த இணைப்பாட்டங்கள் இருந்திருந்தால், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். நாம் கடந்த போட்டிகளில் விட்ட தவறினை மத்தியவரிசை வீரர்கள் இந்த போட்டியிலும் செய்திருந்தனர்.

கிளேன் மெக்ஸ்வெல் அவுஸ்திரேலிய அணியின் 5வது பந்துவீச்சாளர். அவரது ஓவருக்கு எமது இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவிக்க தவறினர். அதேநேரம், அவருக்கு அழுத்தத்தை கொடுக்கவும் தவறியிருந்தனர்.

எமது துடுப்பாட்ட வீரர்களால் மெக்ஸ்வெல்லின் ஓவருக்கு வேகமாக ஓட்டங்களை குவித்திருக்கவும், அழுத்தத்தையும் கொடுக்க முடிந்திருந்தால், அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

அதன் மூலம் ஏனைய பந்து வீச்சாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்திருக்க முடியும். எமது மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு தொடர்ந்தும் சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாதது கவலைக்குறிய விடயமாகும்.

மத்தியவரிசை வீரர்கள் அனுபவம் மிக்க வீரர்கள். அவர்கள் ஓட்டங்களை பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், என்னை பொருத்த வரையில் எமது முன்னைய துடுப்பாட்ட முறையை கையாண்டால் அவர்களால் மீண்டுவர முடியும் என நினைக்கிறேன்” என்றார்.

இலங்கை அணி தங்களுடைய 5 போட்டிகளில் 1 போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. தற்போது மீதமுள்ள 4 போட்டிகளில் 2 போட்டிகளாவது கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.

அதுவும், அடுத்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து, மேற்கிந்தியதீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா போன்ற அணிகளை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி-thinakaran

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *