மரண பயம் இல்லாத ஒரு நாட்டை ஸ்தாபிப்போம்- மஹிந்த


மரண பயம் இல்லாத ஒரு நாட்டை நாம் நிச்சயம் ஸ்தாபிப்போமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “92 ஆம் ஆண்டுகளில் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஒட்சிசன், பிரேமதாஸவினால் இல்லாது செய்யப்பட்டது. இதனை சிலர் மறந்து விட்டார்கள்.

நாம் விவசாயிகளுக்கு உரத்தை 350 ரூபாய்க்கு வழங்குவோம் என அன்று கூறியபோது, அது அலாவுதீனின் அற்புத விளக்கினால் மட்டுமே முடியும் என்று கூறினார்கள்.

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை துடைத்தெறிவோம் என்று கூறியபோது, எந்த துடைப்பத்தால் துடைத்தெறியப்போகிறோம் என எம்மை கிண்டலடித்தார்கள். ஆனால், இந்த நாட்டில் முடியாது என நினைத்த பல விடயங்களை நாம் செய்துக்காட்டினோம்.

இதற்கு மக்கள் எம்முடன் இருந்தமைதான் பிரதான காரணமாக கருதப்படுகிறது.  இன்று மக்கள் மீண்டும் எம்மை எதிர்ப்பார்க்கிறார்கள்.

நாம் யதார்த்தமாக சிந்திப்பவர்கள். மக்களுக்கு ஒரு உறுதியை வழங்கினால் நிச்சயமாக அதனை மேற்கொள்வோம். எம்மிடம் என்றும் இரகசிய ஒப்பந்தங்கள் கிடையாது.

எந்தவொரு இனத்தையும் ஏமாற்ற நாம் தயாரில்லை. எமது கொள்கைப் பிரகடனத்தில் எந்தவொரு தரப்பினரின் ஒப்பந்தங்களும் கிடையாது.

அடுத்த சிங்கள- தமிழ் புத்தாண்டுகளுக்குள் இந்த நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் ஏற்படுத்துவோம்.

நாம் அன்று அரசாங்கத்தை இந்த தரப்பினருக்கு ஒப்படைத்துச் சென்றபோது, மக்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இவர்களுக்கு வழங்கிவிட்டுத்தான் சென்றேன்.

ஆனால், இவர்களால் மக்களுக்கான முழுப்பாதுகாப்பை வழங்க முடியாது போய்விட்டது.  ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் வந்த சிறுவர்களின் இரத்தம் சிதறடிக்கப்பட்டது.

மரண பயத்திற்கு சிறுவர்கள் முகம் கொடுத்தார்கள். பாடசாலைக்குச் செல்லவும் அஞ்சினார்கள். இதுதான் நிலைமையாகும்.

இதனால், எமக்கு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  மரண பயம் இல்லாத ஒரு நாட்டை நாம் நிச்சயமாக ஸ்தாபிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *