சிங்கள மக்கள் மத்தியில் பிரபாகரனை ஹீரோவாக்கியுள்ளார் மைத்திரி: தீபச்செல்வன்


போதைப் பொருள் வியாபாரம் கடத்தியே தலைவர் பிரபாகரன் போராட்டம் நடாத்தியதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன சொல்லியிருப்பது, ஈழத் தமிழ் மக்களை மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் சினம் ஏற்றியுள்ளது. ஈழத் தமிழர்களின், ஈழ விடுதலைப் புலிகளின் உண்மையான எதிரிகூட இதனைச் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் மிகுந்த கட்டமைப்பு இலங்கை அரசுக்கும் இராணுவத்திற்கும் தெரியும். 

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர் ஆகிக் கொண்டிருக்கிறார். மைத்திரிபால சிறிசேன ஒரு சர்வாதிகாரி என்றும் உலகின் மிகச் சிறந்த நடிகர் என்று கடந்த வார பத்தியில் எழுதியிருந்தேன். ஆனால், அவர் நகைச்சுவை துறையில்தான் சிறப்பாக நடித்து வருகின்றார் என்று புலப்படுகின்றது. வடிவேலு இல்லாத குறையை மைத்திரிபால சிறிசேன தான் நிவர்த்தி செய்கிறார். பாவம். சிங்களவர்களும் தமிழர்களுக்கும் நன்றாகச் சிரிப்பூட்டுகிறார்.

மைத்திரிபால சிறிசேன அவர்கள் போதை பொருள் ஒழிப்பு விருதைப் பெற கடுமையாக நடித்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவரது அரசியல் அமைச்சர்களாகவும் அவருக்கு ஆதரவாளர்களாகவும் இருப்பவர்கள் பலரும் போதைப் பொருள் முதலாளிகள்தான். அவர் போதை ஒழிப்பை தொடங்க வேண்டிய இடமே அதுதான். அவரைச் சுற்றித் தான் போதைப் பொருள் வியாபாரம் நடக்கின்றது.

அப்படிப் பார்த்தால், சிறிசேனவின் ஆட்சி போதைப் பொருளில்தான் இயங்குகின்றது. பாடசாலைகளுக்கு இராணுவத்தினர் வருகின்றனர். அவர்கள் போதைப் பொருளை ஒழிப்பது பற்றிய சிறிசேனவின் கவலையை மாணவர்களுக்கு எடுத்து சொல்லுகிறார்கள். பிறகு அதே இராணுவம்தான் சிறுவர்களை போதைப் பொருள் சுமக்க வைக்கிறார்கள். கிளிநொச்சியைப் பொறுத்தவரையில், இராணுவத்திற்கு போதைப் பொருள் சுமக்க சிறுவர்களே தொழிலாளிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த விடயங்க் பலவும் கடந்த காலத்தில் ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுவர்களின் தனிப்பட்ட வாழ்வு கருதி பல விடயங்கள் ஊடக வெளியில் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிறிசேனவுக்கு நாம் ஒன்றை கூறலாம். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் காலத்தில், வடக்கு கிழக்கில் இப்படி நிலமை இல்லை. பிரபாகரன் காலத்தில், போதைப் பொருளும் இல்லை. இப்படியான நடிப்பு பிரசாரங்களும் இல்லை. அன்று, நீதியான ஒழுக்கமான மண்ணாக இருந்தது வடக்கு கிழக்கு.

2009 தமிழீழ வி’டுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னரே, வடக்கு கிழக்கின் நிலமை இந்தளவுக்கு மாறியுள்ளது. உண்மையில் வடக்கு கிழக்கில் போதைப் பொருள் வாயிலாகவும் இன அழிப்பு நடைபெறுகின்றது. குறிப்பாக சிறுவர்களும் இளம்பராயத்தினரும் இதில் இலக்கு வைக்கப்பட்டுள்னர். அப்படி என்றால், யார் போதைப் பொருளை வைத்து ஆட்சி செய்கின்றனர்?

மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து தமிழ் தலைவர்களும் சிங்கள தலைவர்களும்கூட கண்டனம் வெளியிட்டுள்ளனர். பொன்சேகா, ஈழத் தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட ஒரு இனப்படுகொலையாளி. அவர் கூட மைத்திரியின் கருத்தை கடுமையாக கண்டித்துள்ளார் என்றால் இக் கருத்து எந்தளவுக்கு பொய்யின் கோரத்தை கொண்டுள்ளது என்பதை உணரலாம். வடக்கு அவைத்தலைவர், சி.வீ.கே சிவஞானம், எஸ். சிறீதரன் எம்பி. போன்றவர்களும் இதனைக் கண்டித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசுதான் ஆயுதங்களை வழங்கியதாக சிறீதரன் எம்பி. கூறியுள்ளார். சண்டைகளின்போது, கொண்டு வரும் ஆயுதங்களை விடுதலைப் புலிகளிடம் பத்திரமாக ஒப்படைத்து விட்டு, திரும்ப அந்த ஆயுதங்களினாலேயே அடி வாங்குவதையே இலங்கை இராணுவம் தனது வரலாற்று சாதனையாக கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம்மீதும் ஈழத் தமிழர்கள்மீதும் மிகப் பெரிய இனப்படுகொலை போரை நடாத்திய, மகிந்த ராஜபக்சகூட இத்தகைய பொய்யை ஒருபோதும் கூறவில்லை. எதிரிகள்கூட விடுதலைப் புலிகளைப் பார்த்து இப்படிச் சொல்ல மாட்டார்கள். மைத்திரி போன்ற, ஈழத் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இன்று பகைமையை மூட்டுபவர்கள். பிரபாகரனை சிங்கள மக்களை நெருங்க தடுப்பவர். இதனால்தான் மைத்திரியால் இப்படி கோரமாக விகாரமாக சொல்ல முடிந்திருக்கிறது.

ஆனால் மைத்திரி இவ்வாறு சொல்லி பிரபாகரனை சிங்கள மக்களின் ஹீரோ ஆக்கியுள்ளார். பிரபாகரனை கொச்சைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள், தமிழர்களின் நியாயமான உரிமைக்காக போராடியவர்கள் என்றும் சரத் பொன்சேகா சொல்லியிருப்பது, சிங்கள மக்கள் மத்தியில் பிரபாகரனை ஹீரோ ஆக்கியுள்ளது. மைத்திரிக்கு செருப்படி கிடைத்துள்ளது.

வணக்கம் லண்டனுக்காக தீபச்செல்வன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *