மரணதண்டனைப் பட்டியலில் தமிழருக்கு முன்னுரிமை கொடுத்த மைத்திரி: தீபச்செல்வன்


 

மைத்திரிபால சிறிசேன போன்ற நல்லவர் உலகத்தில் இல்லை என்று சொல்லித்தான் ஜனாதிபதி பொதுவேட்பாளராக அறிமுகம் செய்தார்கள். அதிலும் மகிந்த ராஜபக்ச என்ற கொடுங்கோலனின் ஆட்சியை முடிவு செய்வதற்காக இந்த மைத்திரியை காந்தியாகவும் நெல்சன் மண்டேலாவாகவும் சொன்னார்கள். ஆனால் மைத்திரியின் முகம், கிட்லரினுடைய முகமாகிவிட்டது.

குறிப்பாக, ஈழத் தமிழ் மக்களின் விடயங்களில் மைத்திரிபாலவின் அணுகுமுறைகள், மகிந்தவை மிஞ்சுகின்ற அளவில் மாத்திரமல்ல, மகிந்தவை காப்பாற்றுகின்ற அளவிலும் மாறியது. மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பதற்காகவே மைத்திரிக்கு ஈழ மக்கள் வாக்களித்தனர். ஆனால், அதே மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம், மைத்திரி தனது கிட்லர் முகத்தை காட்டினார்.

ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல மைத்திரிபால சிறிசேன காட்டிக் கொண்டார். வடக்கில் உள்ள முகாங்களிற்கு சென்று அங்கு சிறப்பான புகைப்படங்களை எடுத்துக் கொண்ட மைத்திரி, தன்னை மிகுந்த இரக்கம் கொண்டவராகவும் காட்டிக் கொண்டார். மைத்திரி ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், சர்வதேச அரசியலை சமாளிப்பதற்காக சில நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

எனினும், இன்றளவும் தமிழர்களின் பல நிலங்கள் தொடர்ந்து இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிங்களவர்களாலும், பௌத்த சிங்களப் பிக்குகளினாலும் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. திருமலையின் கன்னியாய் பகுதியிலும் முல்லைத்தீவு செம்மலை நீராவியடியிலும் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு அடாவடிகள் தொடர்கின்றன.

புதிய அரசியலமைப்பை உருவாக்கி, தமிழர்களுக்கு தீர்வு வழங்குவேன் என்று சொன்னார் மைத்திரி. இன்றைக்கு அந்த முயற்சிகளை கைவிட்டு, பதினெட்டாவது அரசியல் திருத்தத்தையும் பத்தொன்பதாவது திருத்தத்தையும் இரத்து செய்ய முயன்று வருகிறார். தனக்கான ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்த முயல்வதன் மூலம் மைத்திரி ஒரு சர்வாதிகாரியின் முழுமையை அடைய முயல்கிறார்.

இந்த தீவில் அறுபதாண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினை தொடர்கின்றது. இனச்சிக்கல் பாரிய முரண்பாடாக மாறி முப்பதாண்டு போர் நடைபெற்றது. இப்போதும், ஆக்கிரமிப்பையும் அடக்குமுறையையும் ஆயுதமாக கையாள்கிறார் மைத்திரி. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை உள்ளடக்காமல், தொடர்ந்தும் தனக்கான அதிகாரத்தை குவிப்பதில் கண்ணாயிருக்கிறார் மைத்திரி.

மிகவும் எளிமையான ஜனாதிபதி என்று சிங்கள ஊடகங்கள் மைத்திரியை புகழந்தன. சிரட்டையில் தேனீர் குடிக்கிறார். நடந்து நடைபயிற்சி செய்கிறார், தெருவில் காணும் குழந்தையை மகிழுந்தை விட்டிறங்கி, உரையாடுகிறார் என்று புகழ்கின்றன. ஆனால் ஈழத் தமிழ் மக்களுடன் மைத்திரி என்ற எளிமையான ஜனாதிபதி அவ்வாறு நடந்து கொள்ளவில்லையே. ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுடன் மைத்திரி அவ்வாறு பேசவில்லையே.

உலகின் சிறந்த சர்வாதிகாரிகள், நல்ல நடிகர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே தெளிவாகின்றது. இந்தியாவில் மோடி. இலங்கையில் மைத்திரி. தமிழ் மக்களின்  வாக்குகளில் ஆட்சிப் பொறுப்பேற்ற மைத்திரி, அண்மையில் வெளியான மரண தண்டனை பட்டியலில் ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும்பான்மை இடத்தை கொடுத்ததுதான், முன்னுரிமை கொடுத்ததுதான் அவரது சாதனை. அதாவது சிறுபான்மை தமிழ் மக்கள்தான் சிங்கள அரசின் மரண தண்டனைப் பட்டியலில் பெரும்பான்மை .

வணக்கம் லண்டனுக்காக தீபச்செல்வன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *