உலக வரலாற்றில் பணக்கார மனிதர் யார் தெரியுமா?..


உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா என நம்பப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள போர்ப்ஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 85.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார மனிதராக அறியப்படுகிறார். இந்தசூழலில் செலிபிரெட்டி நெட்வொர்த் எனும் அமெரிக்க வர்த்தக நிறுவனம் உலக வரலாற்றில் பணக்கார மனிதர் யார் என்ற ஆய்வினை நடத்தியது.

அந்த ஆய்வில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள பணக்கார மனிதர்களின் சொத்து மதிப்புகளை இன்றைய பணவீக்கத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. அதன்படி வரலாற்றில் அதிக மதிப்புடைய சொத்துகளுடன் பணக்கார மனிதராக ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா கருதப்படுகிறார். அவரது சொத்துகள் இன்றைய மதிப்பில் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மன்சா மூசா, இன்றைய கானா, திம்புக்து மற்றும் மாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த மாலி பேரரசினை கி.பி 1312 முதல் கி.பி. 1337ம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அன்றைய சூழலில் உலகின் தேவையில் பாதியளவு தங்கம் மற்றும் உப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்ததன் மூலம் சொத்துகள் குவிந்ததாகத் தெரிகிறது.

அவர் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலையும் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவரது ஆட்சியின் போது மாலி பேரரசில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் தவித்துள்ளனர். இதனைத் தீர்க்க நினைத்த மூசா, தனது சொத்துகளின் ஒருபகுதியை பொதுமக்கள் அனைவருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளார். இன்றைய எகிப்திலுள்ள கெய்ரோ மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள மதீனா நகரவாசிகளுக்கு அவர் அள்ளிக் கொடுத்த தங்கத்தால் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார நெருக்கடி பெரும் பிரச்னையானதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஸ்லாம் மதத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்த மூசா, தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான மசூதிகளைக் கட்டினார். மேலும், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விநிலையங்களையும் மூசா கட்டியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்லாமிய பெருமக்களின் புனித நகராகக் கருதப்படும் மெக்காவுக்கு இவர் பயணம் மேற்கொண்டபோது அவருடன் பயணித்த 60,000 பேர் தங்களால் சுமக்க முடிந்த அளவு தங்கத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சுமார் 25 ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்த மூசாவின் மரணம் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகிறது.

 

 

நன்றி : அனிதா | இன்று ஒரு தகவல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *