திமுகதான் ஈழ இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத்தரும்! மனுஷ்ய புத்திரனுடன் சில நிமிடங்கள்


மனுஷ்ய புத்திரன் கவிதைகள், என் படுக்கையறையில் யாரோ ஒளித்திருக்கிறார்கள் முதலிய கவிதை தொகுப்புக்களில் தொடங்கி  கடல் பார்த்த வீட்டில் கடைசிநாள், மாநகர பயங்கரவாதி, எழுந்துவா தலைவா! முதலியவை வரையில் 36 வருடங்களுக்கு மேலால் கவிதையில் இயங்கி வருபவர் மனுஷ்ய புத்திரன். தனிமை, உலகமயமாக்கல் சூழல், துயரம் மிகுந்த வாழ்வு என்று வாழ்வியிலின் அத்தனை பக்கங்களையும் பற்றியும் பேசுபவை இவருடைய கவிதைகள். உயிர்மை இதழின் ஆசிரியராகவும் உயிர்மை பதிப்பக நிறுவனராகவும் இயங்கிய வரும் மனுஷ்ய புத்திரன் ஒரு முழுநேர எழுத்தாளன். இந்திய சூழலின் மத அடிப்படைவாத்திற்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றி வரும் இவர், பல்வேறு தரப்பின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களின் மத்தியில் தொடர்ந்தும் இயங்கி வருகிறார். தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயற்பட்டு வரும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் வணக்கம் லண்டனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

தி.மு.கவின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி எதன் வெளிப்பாடு? தமிழகத்தின் வரும் காலஆட்சி எப்படி இருக்கும்?

இந்திய அரசியலில் தமிழகம் இன்று ஒரு தனித்த நிலமாக இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் காவி நிறமாகிவிட்ட நிலையில் இந்திய வரைபடத்தில் தமிழகம் மட்டுமே திராவிடத்தின் கறுப்பு-சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்து இந்தி இந்தியா என்ற ஒரு பாசிச தேசிய கட்டமைப்பிற்கு வெளியே நாங்கள் இருக்கிறோம் என்பதை தமிழகம் முழுமையாக முன்மொழிந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல பெரும்பாலான இந்தி பேசாத மாநிலங்களுக்கும் தார்மீகரீதியான ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. இன்று அவர்கள் இந்தி தங்களுடைய தாய் மொழியை எப்படியெல்லாம் அழித்திருக்கிறது என்பதை சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கெதிரான போராட்டங்கள் இந்தியா முழுக்க நடந்துகொண்டிருக்கின்றன. அதேபோல இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கெதிரான மாநிலங்களை அடிமைப்படுத்துவதும் தென்மாநிலங்களைச் சுரண்டி வடமாநிலங்களை வாழ வைப்பதுமான மத்திய அரசின் கொள்கைகளை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டுமென்பதை திமுகவின் இந்த வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது. பாஜகவின் இந்த வெற்றி இந்தியாவில் இந்துத்துவா பெரும்பான்மைவாதமும் வலதுசாரி பொருளாதார கொள்கைகளும் மேலும் வலிமையடைந்திருப்பதைக் காட்டுகிறது. இதை எங்காவது தடுத்து நிறுத்தாவிட்டால் பேரழிவு நிச்சயம். மோடியினுடைய இந்த இரண்டாம் வெற்றி என்பது ஒன்றுபட்ட இந்தியாவை வலிமைப்படுத்தாது. மாறாக, அது பிரிவினைவாதத்திற்கே மேலும் இட்டுச்செல்லப் போகிறது. இந்த நிலையில் இந்தத் தேர்தல் வெற்றியின்மூலமாக நாடாளுமன்றத்தில் நாங்களும் எங்களது கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் தமிழகத்தின் உரிமைகளுக்காக மட்டுமல்ல, இந்தியா முழுக்க மறுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைக்காகவும் வலதுசாரி பொருளாதார தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற சமூகநீதியை எங்கள் ஆட்சி வருகிறபோது கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் நிலைநாட்டுவோம்.

விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பில் தி.மு.க சார்ந்த சிலர் அவதூறு செய்கின்றனரே? இது தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு என்ன?

இதற்கு நாங்கள் பலமுறை விளக்கம் அளித்துவிட்டோம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்புவது எங்கள் வேலை அல்ல. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 1970களிலிருந்து கலைஞர் ஈழத்தமிழர் நலனுக்காக எத்தகைய ஈடுபாட்டுடன் உழைத்திருக்கிறார் என்பதை வரலாறு அறியும். இந்திய அமைதிப் படை இலங்கையில் மேற்கொண்ட செயல்களைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் என்ற பொறுப்பிலிருந்தும்கூட அமைதிப்படை திரும்பி வந்தசந்தர்ப்பத்தில் அதை வரவேற்பதற்குச் செல்ல மறுத்தவர் கலைஞர். அதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகளுக்கு எண்பதுகளில் தமிழ் நாட்டில் பெரும் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தினரே. ஈழத்தில் இயக்கங்களுக்கிடையே நடந்த சகோதரச் சண்டை கலைஞரைப் புண்படுத்தியது. ஆயினும் அவர் ஒருபோதும் தமிழ் விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு எதிராக எந்த நிலைப்பாட்டையும் எடுத்ததில்லை. ராஜீவ்காந்தி படுகொலையின்போது அதன் பழி அநீதியான முறையில் திமுக மேல் சுமத்தப்பட்டது. திமுகவினர் தமிழகம் முழுக்க சொல்லொணாத துயரத்தை அனுபவித்தனர். முக்கிய தலைவர்கள் சிறையில் இருந்தனர். அந்த சமயம் நடந்த தேர்தலில் இந்தச் சூழலால் ஜெயலலிதாவிடம் ஆட்சியதிகாரத்தையும் திமுக இழந்தது. அது திமுகவின் மிகமிகக் கடுமையான ஒரு காலகட்டமாக இருந்தது. 2009 இறுதி யுத்தம் என்பது திமுக போன்ற ஒரு மாநிலக் கட்சியின் எல்லா சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தபோதும் கலைஞர் போர் நிறுத்தத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். மத்திய அரசையும் இடையறாது வலியுறுத்தினார். ஆனால் இறுதி யுத்தத்தில் நடந்த இனப்படுகொலை என்பது இனவாத அரசுடன் சேர்ந்துகொண்டு பல சர்வேதச சக்திகள் நடத்திய கூட்டு படுகொலை என்பதை இந்தப் போராட்டம் தொடர்பான பல முக்கிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றனர். அந்த யுத்தத்தை நிறுத்தக்கூடிய எந்த அதிகாரமும் ஒரு மாநிலக் கட்சி முதல்வருக்கு இல்லை. அப்போதைய இந்திய அரசில் திமுக பங்கு வகித்தது என்பதற்காகவே இந்த இனப்படுகொலையை திமுக செய்தது என்ற பொய்யை ஜெயலலிதாவின் கூலிப்படையாக இங்குச் செயல்பட்ட சீமான் போன்றவர்கள் பரப்பினார்கள். இந்தப் பொய்யை புலம்பெயர்ந்த சில ஈழத் தமிழர்களும் நம்பி சீமான் உள்ளிட்ட பல போலி தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிதி நல்கைகளை வழங்கியதுடன் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் ஏற்பாடு செய்துகொடுத்தார்கள். ஈழத் தமிழர்களின் புண்பட்ட உணர்வை தமிழ்நாட்டிலிருந்த ஈழ வியாபாரிகள் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. திமுக டெஸோ போன்ற அமைப்புகள் மூலமாகவும் தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் ஈழத் தமிழர் பிரச்சினையை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொடர்ந்து கவனப்படுத்தியே வந்திருக்கிறது. எதிர்காலத்தில் நிச்சயம் நாங்கள் இனப்படுகொலைக்கு சர்வதேச அரங்கில் நீதி பெற்றுத் தருவோம். எங்களால் மட்டுமே அது முடியும். போலி தமிழ்த் தேசிய ஈழ வியாபாரிகளால் அல்ல.

மனுஷ்ய புத்திரன் கவிஞரா? திமுகவின் பேச்சாளரா?

ஏன் அதோடு நிறுத்திவிட்டீர்கள்? நீங்கள் ஒரு ஆணா பெண்ணா? மதநம்பிக்கையாளரா இல்லையா? கிரிக்கெட் ரசிகரா, புட்பால் ரசிகரா? சைவ உணவுக்காரரா, அசைவ உணவுக்காரரா? குடிப்பழகம் உள்ளவரா இல்லாதவரா? இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். கவிஞனாக இருக்கக்கூடிய ஒருவன் ஒரு கட்சியின் அரசியல் செய்தித் தொடர்பாளராக இருந்தால் இரண்டையும் ஏன் எதிர்நிலையில் நிறுத்தி ஒரு கேள்வியை உருவாக்குகிறீர்கள்? இலக்கியம் என்பது மிக புனிதமானது என்பதுபோன்றும் அரசியல் அதற்குக் கீழானது என்பது போன்றும் ஒரு தொனி உங்கள் கேள்வியில் இருப்பதாக உணர்கிறேன். தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் பெரும்பாலானவை திராவிட இயக்கத்தால் வென்றெடுக்கப்பட்டவை. மாநில உரிமைகளும் அப்படித்தான். அந்தவகையில் அனைவருக்குமான ஒரு வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து இயங்கி வரும் ஒரு இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு நான் கவிஞன் என்பதற்கு நிகரான பெருமை உண்டு. அரசியல் இல்லாமல் அரசியல் அதிகாரம் அல்லாமல் சமூக மாற்றத்திற்கான ஒரு புல்லைக்கூட யாரும் அசைக்க முடியாது. மேலும் என்னுடைய பல்வேறு சமூகப் பண்பாட்டு அடையாளங்களில் பிரதானமான அடையாளம் அரசியல் சார்ந்தது. என்னுடைய முகநூல் அறிமுகக் குறிப்பில் writer/politician என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் அரசியல் செயல்பாடுகள் அதுசார்ந்த வாசிப்பு, உரையாடல் நான் கவிதைகள் எழுதுவதற்கான பெரும் உத்வேகத்தை அளித்திருக்கின்றன. நான் அரசியல் களத்திற்கு வந்த பிறகுதான் மிக அதிகமாக எழுதியிருக்கிறேன்.

நேர்காணல் – வணக்கம் லண்டனுக்காக தீபன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *