மழலை வரம் அருள்வாள் ஜனகை மாரியம்மன்.


மதுரைக்கு அழகு சேர்க்கும் வைகையாற்றின் கீழ்கரையில் அமைந்துள்ள சதுர்வேதிபுரம்.

அனந்தசாகரம் ஜெனகையம்பதி என்றெல்லாம் புராணங்களில் போற்றப்படும் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயில் உள்ளது. பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம் இது.

இந்த மாரியம்மனை ஜனகமகாராஜா வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த மாரியம்மன் ‘ஜனகை மாரி’ என அழைக்கப்பட்டு, ‘ஜெனகை மாரி’யாக உருமாறினாள். இங்கு ஆண்டு தோறும் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இதேபோல் இந்தாண்டும் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வரும் 10ம் தேதி(திங்கள்) ஜெனகை மாரியம்மனின் உற்சவம் ஆரம்பம் ஆகிறது. அக்னிசட்டி எடுத்தும் பூக்குழி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

மாரியம்மன் கோயில் திருவிழா சோழவந்தான் மிகப்பெரிய புண்ணியதலம். பூஜை மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை இல்லாமல் இருக்காது. ராமனின் வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், சீதாபிராட்டி, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து, பாராட்டினாள் என்ற செவி வழி செய்தியுண்டு.

அத்தகைய சிறப்புமிக்க வெற்றிலை, அதிகமாக விளையும் சோழவந்தானில் கோயில் கொண்டுள்ளாள் ஜெனகை மாரியம்மன். நோய் தீர்க்கும் அம்மன் எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது.

அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் கொண்டது.

மேலும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும். மூலவர் அம்மனுக்கு பின்புறம் ஆக்ரோஷ நிலையில் காட்சி தருகிறாள், ரேணுகாதேவி. இவளை, ‘சந்தனமாரி’ என்கின்றனர். இக்கோயிலில், வைகாசி திருவிழா, 17 நாட்கள் நடக்கும். 16ஆம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வருவார்.

அங்கு கிராம வழக்கப்படி வெள்ளை வீசுபவர்கள், கிராம காவலர்கள், தேருக்கு கட்டை போடும் ஆசாரிகள் ஆகியோரை மேளதாளத்துடன் அழைத்து வருவர். இதைத்தொடர்ந்து தேரோட்டம் தொடங்கும். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். தேர் புறப்பட்டு வரும்போது வழிநெடுக பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பானக்கம், நீர்மோர், கூழ் வழங்குவார்கள்.

மேலும் சாக்லெட், மாம்பழம், வாழைப்பழம், விசிறி, காசுகள் ஆகியவற்றை சூறைவிடுவர். இத்தலத்தில் பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி பூஜை செய்கின்றனர். 17ஆம் நாள் இரவு 7 மணி முதல் விடிய விடிய வைகை ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி திருவிழா நடைபெறுகிறது.

நன்றி – லட்சுமிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *