‘மேத்யூ’ புயல் அமெரிக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தம் என எதிர்பார்ப்பு | 20 லட்சம் பேர் வெளியேற்றம்


அமெரிக்காவை தாக்குவதற்கு ‘மேத்யூ’ புயல் விரைகிறது. இதன் காரணமாக 20 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். இந்தப் புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதி நாட்டை முதலில் ‘மேத்யூ’ புயல் 2 தினங்களுக்கு முன் தாக்கியது. தொடர்ந்து அந்தப் புயல், ஹைதியின் அண்டை நாடான டொமினிக்கன் குடியரசிலும் பெரும்சேதத்தை விளைவித்தது. அதைத் தொடர்ந்து கியூபாவிலும் அது தன் ஆதிக்கத்தை தொடர்ந்தது. இந்த நாடுகளில் பெரும்பொருள் சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ‘மேத்யூ’ புயல் ஏற்படுத்தியது.

இந்த நாடுகளில் 15 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. ‘மேத்யூ’ புயல் ருத்ர தாண்டவம் ஆடியதால் ஹைதி நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடக்கவிருந்த அதிபர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘மேத்யூ’ புயல் நேற்று அட்லாண்டிக் பெருங்கடல் தீவு நாடான பஹாமஸ் நாட்டில் (இது அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அருகே அமைந்துள்ளது) தாக்குதலை தொடுத்தது. அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

அடுத்து இந்தப் புயல், புளோரிடா மாகாணத்தை நோக்கி விரையும். அங்கு மணிக்கு 115 மைல் வேகத்தில் சூறாவளி வீசும் என தகவல்கள் கூறுகின்றன.

புளோரிடா மாகாணத்தில் ‘மேத்யூ’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் புயல் வரும் பாதையில் உள்ள பகுதிவாழ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியேறும்படி பிறப்பிக்கப்படுகிற உத்தரவை முக்கியமாக கவனத்தில் எடுத்து அதன்படி செயல்பட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியேறத் தொடங்கி விட்டனர்.

புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட், 24 மணி நேரத்திற்குள் 15 லட்சம் மக்கள் வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.

1992–ம் ஆண்டு மியாமியில் பேரழிவை ஏற்படுத்திய ஆன்ட்ரூ புயலுக்குப் பின் இந்த ‘மேத்யூ’ புயல் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

புயல் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதற்கு 1,500 தேசிய பாதுகாவல் படையினரை அவர் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் 26 நகரங்களில் நேற்றும், இன்றும் (வியாழன், வெள்ளி) இரு நாட்கள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாம் பீச் பகுதி மக்கள், தங்களுக்கு தேவையான பலசரக்கு பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டில் இருப்பு வைத்து விட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தெற்கு கரோலினா மாகாணம், சார்லஸ்டன், பியூபோர்ட் பகுதிகளில் ‘மேத்யூ’ புயல் தாக்குதல் அபாயம் காரணமாக 2½ லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

புளோரிடாவை தொடர்ந்து தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா மாகாணங்களையும் ‘மேத்யூ’ புயல் தாக்கும் என்ற எதிர்பார்ப்பில் அங்கெல்லாம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் ஏற்கனவே அவசர கால நிலை அறிவித்து, அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *