பிரித்தானியாவில் எச்.ஐ.வி. குறித்த புதிய ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்


பிரித்தானியாவில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் ஐந்து பேரில் ஒருவருக்கு தாம் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறியாமல் இருப்பதாக அண்மைய ஆய்வொன்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பொதுச் சுகாதார நிறுவனம் இது தொடர்பில் நடத்திய ஆய்வின்போது எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகிய 98400 பேர் பங்கேற்றனர். இவர்களில் 21900 பேருக்கு இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியாது.
அதேபோன்று பொதுவாக நடத்தப்பட்ட வாய்மூல கேள்வி பதிலின்போது எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டோர், அது குறித்த தெளிவினை பெற்றுக்கொண்டிருக்கவில்லை. எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியாததால் ஏனையோருக்கும் இது பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றமையே அபாய நிலை என ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையானது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்கச் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எயிட்ஸ் நோய் குறித்து சிறு வயது முதலே அறிந்து வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பிரித்தானிய சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் இரத்தப் பரிமாற்றம் காரணமாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறிப்பிட்டளவு குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *