மலாலாவின் புத்தகத்திற்கு பாகிஸ்தானில் உள்ள தனியார் பாடசாலைகள் தடை


பாகிஸ்தானில் உள்ள தனியார் பாடசாலைகள் சில மலாலா யூசாப்சாயின் புத்தகத்துக்கு தடைவிதித்துள்ள சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கான கல்வி மற்றும் உரிமை போன்றவற்றுக்கு குரல்கொடுத்தமையால் மலாலா யூசாப்சாய் தலிபான்களால் கடந்த வருடம் சுடப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பிரித்தானியாவுக்குச் வந்திருந்தார் பின்னர் இங்கே தஞ்சமடைந்தார்.

இந்நிலையில் அவர் தன்னைப் பற்றிய புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டார்.

‘I Am Malala’ என்று பெயரிடப்பட்ட மேற்படி புத்தகத்தை பிரித்தானிய ஊடகவியலாளரான கிறிஸ்டினா லாம்புடன் சேர்ந்து எழுதியிருந்தார்.

இந்நிலையில் அவரது புத்தகத்துக்கு பாகிஸ்தான் தனியார் பாடசாலைகள் சில தடை விதித்துள்ளன.

மலாலா யூசாப்சாய் மேற்குலகையே பிரதிநிதித்துவம் செய்வதாகவும் பாகிஸ்தானை அல்லவெனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அனைத்து பாகிஸ்தான் தனியார்  பாடசாலைகள் முகாமைத்துவ சங்கத் தலைவர் அதீப் ஜவேதானி தமது அமைப்பின் கீழ் உள்ள 40,000 பாடசாலைகளிலும் இப்புத்தகத்துக்கு தடைவிதிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது அமைப்பும் தமக்கு கீழ் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் மலாலாவின் புத்தகத்தை தடைசெய்துள்ளதாக அனைத்து பாகிஸ்தான் தனியார் பாடசாலைகள் ஒன்றியத்தின் தலைவர் காசிப் மிர்ஷா தெரிவித்துள்ளார்.

மலாலா சிறுவர்களுக்கான முன் உதாரணமாக திகழ்கின்றபோதிலும் அவரது புத்தகம் அவரை சர்ச்சைக்குரியவராக மாற்றியுள்ளதாகவும் , இப்புத்தக்கத்தின் ஊடாக அவர் மேற்குலக சக்திகளின் கைகளில் கருவியாக மாறியுள்ளதாக காசிப் மிர்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் மலாலாவின் புத்தகம் பள்ளிகளின் நூலகங்களில் தடைசெய்யப்பட்டுள்ளமையானது பாகிஸ்தானில் பல பகுதிகளில் இன்றளவும் நிலவும் தலிபான் ஆதரவுப் போக்கினை காட்டி நிற்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் பெரும்பாலான குழந்தைகள் தனியார் பாடசாலைகளிலேயே கல்விகற்கின்றனர்.

அங்கு அரச பாடசாலைகளின் குறைந்த தரத்திலான கல்விச் செயற்பாடே இதற்கான காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *