புதிய மோடி அரசுடனான உறவை வலுப்படுத்த இலங்கை அரசு உடனடி முயற்சி, தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் | மனோ


இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுங்கள், தமிழ் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற போர்வையில் சீன-பாகிஸ்தானிய ஊடுருவல்களுக்கு இடம் கொடாதீர்கள், இந்த மூன்று நிலைப்பாடுகளுக்கும் இலங்கை அரசை உடன்பட செய்யுங்கள் என்று, புதிய பாரத பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி, இலங்கையில் இருந்து ஒரே குரலில், தமிழ் தலைமைகள் சொல்ல வேண்டும். இதற்கு புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள் இடையூறு  விளைவிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

முன்னணியின் வாரந்தர அரசியல் ஆய்வு கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சியை அமைக்கின்றது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா அபார வெற்றியடைந்துள்ளார். எனினும் உடனடியாக அதிமுகவின்  ஆதரவு மோடி அரசுக்கு தேவைபடாது. தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள பாமகவின் அன்புமணி, பாஜகவின் இராதாகிருஷ்ணன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்பது ஒரு ஆறுதலாக இருக்கலாம்.

புதிய மோடி அரசுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சிகளை, இலங்கை அரசு  உடனடியாக தொடங்கிவிட்டது. உண்மையில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னரே  இம்முயற்சிகள் ஆரம்பமாகின.  இது வரவேற்க கூடியதுதான். அண்டை நாடுகள் இரண்டும் நல்லுறவு கொள்வது இரு நாட்டு மக்களுக்கும் நன்மை தரக்ககூடியதாகும். ஆனால், இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய அரசுடன் ஏற்படுத்திக்கொண்ட கடப்பாடுகளை தவிர்த்துவிட்டு,  தனது இனவாத அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்ளும் முகமாக மாத்திரம் இந்திய உறவை பயன்படுத்த இலங்கை அரசு முயற்சிக்கிறது. இதை  இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *