ஒன்றுபட்ட இலங்கையில் தமிழருக்கு உரிய அங்கீகாரம் வழங்குக! மோடி


ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிய மரியாதையை அந்நாட்டு அரசாங்கம் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 5 நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்நியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில், இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு நாடுகளின் பாதுகாப்பு, நட்புறவு, வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளனர்.

அதன்பின்னர், பிரதமர் மோடி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “இலங்கையின் அரசாங்கத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய நலன்களின் மீது இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நலன்களையும் இந்தியா கருத்தில் கொண்டுள்ளது.

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்புறவு நாடாக இலங்கை இருந்து வருகிறது. இலங்கையின் அமைதிக்கும், மேம்பாட்டுக்கும் தொடர்ந்து இந்தியா துணை செய்யும்.

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிய மரியாதையை, நீதியை, சமத்துவத்தை, அமைதியை இலங்கை அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என நம்புகிறேன்.

இதேவேளை, இருதரப்பு மீனவர்கள் விவகாரத்தைப் பொறுத்தவரை மனிதநேயத்துடன் இந்த விடயத்தை நாம் அணுக வேண்டும்.

தீவிரவாதத்தை ஒழிக்கும் விடயத்தில் இரு நாடுகளும் கூட்டாக இருந்து செயற்பட முடிவு செய்துள்ளோம். தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக இரு நாடுகளுக்கும் இருக்கிறது. இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டு தீவிரவாதத்துக்குப் பதிலடி கொடுப்போம். தீவிரவாதத்தைத் தடுக்கும் முயற்சியில் இருநாடுகளும் இன்னும் கூட்டுறவோடு செயற்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *