ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி?


என் உடல் மிகவும் ஒல்லியாக உள்ளது. நன்றாகதான் சாப்பிடுகிறேன். வயிறு சம்மந்தமான எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும் உடல் எடை அதிகரிக்கவில்லை. எல்லாரும் என் ஒல்லியான தேகத்தை பார்த்து கிண்டல் செய்கிறார்கள். இதனால் மனவேதனையாக உள்ளது. உடல் எடையை அதிகரிக்க ஏதாவது வழி சொல்லுங்கள். இந்த பிரச்னைக்கு தீர்வுண்டா ?

“ஒருவரின் உடல்வாகு ெபாதுவாக அவர்கள் குடும்ப பரம்பரையை பொறுத்து அமையும். அப்படியில்லாமல் நீங்கள் ஒல்லியாக இருக்கும் பட்சத்தில், உங்கள் வயிற்றில் பூச்சி பிரச்னை இருக்க வாய்ப்பிருக்கிறது. என்னதான் சாப்பிட்டாலும் உங்களின் உடல் எடை கூடாது. அதற்கு முதலில் டாக்டரின் ஆலோசனை பெற்று பூச்சி மருந்தை சாப்பிட வேண்டும். வயிற்றில் உள்ள பூச்சியை அகற்றிய பிறகு ஆரோக்கியமான உணவினை சாப்பிடலாம்” என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.

ஒருவரின் உயரம் மற்றும் வயதிற்கு ஏற்பதான் அவர்களின் எடை இருக்க வேண்டும். அதாவது சராசரி ஒருவர் 165 செ.மீ உயரம் இருந்தால் அவர்களின் எடையான 60 முதல் 70 கிலோவுக்குள் இருக்க வேண்டும். முதலில் உங்களின் உயரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என்று பாருங்கள். உங்களின் உயரத்திற்கு ஏற்ற எடை இருந்தால் நீங்கள் சரிவிகித எடையில் தான் இருக்கிறீர்கள். குறிப்பிட்ட அளவில் இருந்து குறைவாக இருந்தால், நீங்கள் அதற்கான உணவினை சாப்பிட வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்கும் ஆரோக்கியமான அதே சமயம் கலோரி அதிகம் கொண்ட உணவினை சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு முட்டை, வாழைப்பழம் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவினை தவிர்க்கவும். காரணம் எண்ணெயில் பொரித்த உணவினை சாப்பிடும் போது அது பசியினை தூண்டாது. பசி இல்லாத போது நீங்கள் சரியான நேரத்தில் சரியான உணவினை சாப்பிட முடியாது. அதனால் உங்களின் உணவுப் பழக்கம் பாதிப்பு ஏற்படும்.

பொதுவாக நாம் மூன்று வேளை உணவினை சாப்பிட்டு பழகியவர்கள். அப்படி இல்லாமல் ஐந்து வேளையாக உணவினை பிரித்து சாப்பிடுங்கள். காரணம் ஒல்லியாக இருப்பவர்களின் வயிறு சுறுங்கி இருக்கும். அவர்களால் அதிக உணவினை சாப்பிட முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் உணவினை ஐந்து வேளையாக பிரித்து சாப்பிடலாம். அதாவது காலை எட்டு மணிக்கு காலை சிற்றுண்டி, பகல் 11 மணிக்கு சுண்டல் அல்லது மில்க் ஷேக் அல்லது பால் சாப்பிடலாம். மதியம் 1 மணிக்கு மதிய உணவு. சாதம் பருப்பு, கூட்டு, பொரியல், ரசம் என சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் போது உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடலாம்.

அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால், இறைச்சி, மீன், முட்டை என சாப்பிடலாம். சைவம் சாப்பிடுபவர்கள் உணவில் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு வெண்ணெய் அல்லது சீஸ் கொண்ட சாண்ட்விச், வேர்க்கடலை… என சாப்பிடலாம். அதன் பிறகு இரவு எட்டு மணிக்கு இரவு நேர உணவு, சிற்றுண்டி போல் தோசை, சப்பாத்தி, இட்லி என எடுத்துக் கொள்ளலாம்.

காபி, டீயை தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் பால் சாப்பிடலாம். உணவில் புரத சத்துள்ள உணவினை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். பாதாம், பிஸ்தா, முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். அதை வாங்க முடியாதவர்கள் வேர்க்கடலை பர்பி சாப்பிடலாம். சாத்துக்குடி சாறு, எலுமிச்சைச் சாறு சாப்பிடலாம். இதில் உள்ள விட்டமின் சி சத்து, நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை நம் உடலில் சேர்க்கும் தன்மை கொண்டவை. உடல் எடையும் அதிகரிக்கும். மதிய உணவு சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டாலும் உடல் எடை கூடும் வாய்ப்புள்ளது. அதிக புரதம் எடுக்கும் போது உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இது தசை வளர்ச்சியை சீராக்கும் மேலும் நீங்கள் பார்க்கும் போது உடல் எடை அதிகரித்தாலும் அது அளவோடு இருக்க முடியும்.

சிலர் அதிகமாக சாக்லெட் சாப்பிடுவார்கள். சாக்லெட் சாப்பிடுவதால் பசியின்மை ஏற்படும். அதனால் சாக்லெட்டுக்கு பதில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். பழச்சாறு, பழசாலட், மில்க் ஷேக், மில்க் ஸ்வீட், இனிப்பு வகைகள் சாப்பிடலாம். பொதுவாக ஆண்களுக்கு பெண்களை விட அதிக வளர்சிதை மாற்று விகிதம் (metabolic rate) அதிகமாக இருக்கும். அதில் ஒரு சில ஆண்களுக்கு வளர்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருந்தால் அவர்கள் என்ன சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காது. சிலருக்கு 40 வயதிற்கு மேல் தான் உடல் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அளவுக்கு அதிகமாக  எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட எடை அதிகரித்த பிறகு இவர்கள் அதை முறையாக பராமரிக்க வேண்டும். அதாவது உரிய எடை வந்த பிறகு முறையான உடற்பயிற்சி மற்றும் உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம். தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி கூடம் சென்று பயிற்சியாளர்களிடம் ஆலோசனை பெறலாம். அவர்கள் உடலுக்கு ஏற்ப பயிற்சி அளிப்பார்கள். இதன் மூலம் எடை அதிகரிக்காமல் ஒரே நிலையில் இருக்கும். இந்த சமயத்தில் மறுபடியும் அதிக கலோரி உணவினை சாப்பிடக்கூடாது. கலோரியின் அளவைக் குறைத்து ஆரோக்கியமான உணவினை சாப்பிட வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்க நல்லா சாப்பிட்டு மன உளைச்சலோடு இருந்தால் அதில் எந்த பலனும் இருக்காது. எதை சாப்பிட்டாலும், மன உளைச்சல் காரணமாக இருக்கும் போது அது ஒருவரின் உடலை மட்டும் அல்ல மனதையும் பாதிக்கும். சிலருக்கு அதிக மனஅழுத்தம் ஏற்பட்டால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல், இருப்பது அவசியம். கவலை யாருக்கு தான் இல்லை. பள்ளி படிக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை உள்ளது. எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வுண்டு. அதை நோக்கி பயணம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். எல்லாவற்றையும் விட ஒருவர் கண்டிப்பாக ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்” என்கிறார் அம்பிகா சேகர்.

 

நன்றி : தினகரன்

 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =