பெண்களால் இயக்கப்பட்டு உலகை வலம் வந்த முதல் விமானம் – கின்னஸ் சாதனை?


சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விமானிகள், விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம், கடந்த வெள்ளிக்கிழமை உலகைச்சுற்றி விட்டு தலைநகர் புதுடெல்லி வந்து சேர்ந்தது. இதையடுத்து, தற்போது கின்னஸ் சாதனைக்கு ஏர் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 777 ரக விமானம் கடந்த திங்கட்கிழமை புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு, பசிபிக் கடல் வழியாக அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரை அடைந்தது. பின்னர் அட்லாண்டிக் கடல் வழியாகத் திரும்பி கடந்த வெள்ளிக்கிழமை இந்த விமானம் புது டெல்லியை அடைந்தது.

இந்த விமானத்தின் விமானிகள் மற்றும் விமானத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் மட்டுமில்லாது, பயணிகளை அனுமதித்தவர்கள், சோதனை செய்தவர்கள், விமானத்தின் பாகங்களைச் பரிசோதனை செய்தவர்கள், வான்வழி போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியவர்கள் ஆகியோர் அனைவரும் பெண் ஊழியர்கள் மட்டுமே என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. முழுக்க பெண்களால் மட்டுமே இயக்கப்பட்டு உலகை வலம் வந்த முதல் விமானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதால் கின்னஸ் சாதனைக்கு ஏர் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் ஊழியர்கள் மட்டும் இடம்பெறும் விமானங்களை இயக்கவிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

நன்றி : ஆனந்த விகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *