இனி எளிதாகக் கண்டுபிடிக்கலாம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்… அமெரிக்க-இந்தியப் பெண் சாதனை!

9 views

மருத்துவச் சாதனை மகுடத்தில் மேலும் ஒரு தங்கச் சிறகு! அந்தச் சாதனையை எட்டிப் பிடித்திருப்பவர் அமெரிக்க வாழ் இந்தியரான பேராசிரியர் நிம்மி ராமானுஜம் என்பது நமக்குக் கூடுதல் பெருமை. நிம்மி ராமனுஜமும் அவர் குழுவினரும் சேர்ந்து ஒரு கையடக்கக் கருவியைக் உருவாக்கியிருக்கிறார்கள். `பாக்கெட் கோல்போஸ்கோப்’ (Pocket Colposcope) என்பது அதன் பெயர். சரி… இந்தக் கையடக்க பாக்கெட் கோல்போஸ்கோப் என்ன செய்யும்? பெண்களின் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடித்து `அலெர்ட்’ கொடுக்கும்!

புற்றுநோய்

பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்… இந்தக் கருவியை லேப்டாப்பிலோ, மொபைல்போனிலோ இணைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, தங்கள் உடலில் இந்தக் கருவியைப் பொருத்தி, அவர்களே தங்கள் உடலைச் சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். சோதனை முடிவுகளை வெகு எளிதாக அதற்கான திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.நிம்மி ராமானுஜம்

அமெரிக்காவின், வடக்கு கரோலினாவிலுள்ள டியூக் யுனிவர்சிட்டியின் பேராசிரியர் நிம்மி ராமானுஜமும் அவரின் ஆராய்ச்சிக் குழுவினரும் இணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். பாக்கெட் கோல்போஸ்கோப்பின் சிறப்பு என்ன..? வலியில்லாமல் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம்; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாங்கிப் பயன்படுத்தலாம்… விலை அத்தனை மலிவு.

பார்ப்பதற்கு டாம்போன் (Tampon) மாதிரி இருக்கும் இந்தக் கருவியை `ஆல் இன் ஒன் டிவைஸ்’ என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார் நிம்மி ராமானுஜம். இந்தக் கருவியை சந்தைக்குவிடுவதற்கு முன்னர் சோதனையும் செய்து பார்த்திருக்கிறார்கள். அதற்காகப் பதினைந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களிடம் பாக்கெட் கோல்போஸ்கோப் கொடுக்கப்பட்டது. கருவியைக்கொண்டு சுயபரிசோதனை செய்துகொண்ட பெண்களில், 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் `இது மிகவும் உபயோகமான கருவி, இதன் திரையில் தெளிவாக காட்சியைப் பார்க்க முடிகிறது’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.

புற்றுநோய்

“உண்மையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டுபிடிக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், முழுவதுமாகக் குணப்படுத்தவும் சிறந்த கருவிகளும் வழிமுறைகளும் போதுமான அளவில் நம்மிடம் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் நிகழும் மரணத்தின் சதவிகிதம் பூஜ்யமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அது அப்படி இல்லை. காரணம், இந்தப் புற்றுநோயைக் கண்டறியும் அடிப்படைக் கருவி நம்மிடம் இல்லை. அதாவது, பெண்கள் தாங்களாகவே கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கும் கருவி இல்லை. அதனாலேயே பலராலும் இந்தப் புற்றுநோயைக் குணப்படுத்தும் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் போகிறது. இதுதான் இந்த நோய்க்கான பெரிய முட்டுக்கட்டை. அதற்காகத்தான் இந்தக் கருவி. இதைக்கொண்டு, கர்ப்பப்பை வாயில் புற்றுநோய்க்கான தொற்று இருக்கிறதா என்பதை பெண்கள் அவர்களாகவே எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் இந்தப் புற்றுநோயால் நிகழும் மரணங்களையும் கணிசமாகக் குறைக்க முடியும்’’ என்று சொல்லியிருக்கிறார் நிம்மி ராமானுஜம்.

இப்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டுபிடிக்க கருவிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான கருவியை பெண்களின் கர்ப்பப்பை வாய் வரை செலுத்தி, கேமராவின் மூலம் கண்டறியும் முறை ஒன்று உண்டு. அதையும் தேர்ந்த மருத்துவ நிபுணர்கள்தான் கையாள முடியும். அந்த வகையில், நிம்மியும் அவர் குழுவினரும் உருவாக்கியிருக்கும் இந்தக் கருவி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. இதை உருவாக்குவதற்கான நிதி உதவியை அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் அமைப்பு வழங்கியிருக்கிறது.

 

நன்றி : ஆனந்தவிகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 10 =