வன்னி மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றைத் தந்த முல்லைமணி | சுப்ரம் சுரேஷ்


பல்துறை ஆற்றல் கொண்ட முழு மனிதர் முல்லைமணி அவர்கள். வேலுப்பிள்ளை சுப்ரமணியம் என வாழ்ந்து முல்லைமணியாக வரலாறாகிப் போனது இவரது வாழ்க்கை.

ஒரு மனிதர் எப்படியும் வாழலாம் என்பதற்கும் மேலாக எவ்வாறு வாழ்கின்றார் என்பதை பொறுத்தே சமூகத்தில் அவருக்கான இடம் ஒதுக்கப்படுகின்றது. இந்தவகையில் முல்லைமணி அவர்கள் கலை, இலக்கியம், வரலாறு, கல்வி, சமூக சேவை என பல தளங்களில் தன்னுடைய ஆளுமையை பதிவு செய்துள்ளார்.

ஒரு ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, கல்விப் பணிப்பாளராக ஒரு புறமும்; கதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகம் என இன்னுமொரு தளமும்; வரலாறு, ஆய்வு என வேறொரு களமுமென இவரது செயற்பாடுகள் எல்லைகளற்றதாகவே இருந்திருக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை என்னும் கலைகள்  செறிந்திருக்கும் கிராமத்தில் 1933ம் ஆண்டு பிறந்து 83 வருடங்கள் மாண்புறு வாழ்வு வாழ்ந்தவர் கலாநிதி முல்லைமணி. உடலில் வலு இருக்கும் வரை ஆக்கப்பணி செய்த வண்ணம் வாழ்ந்தவர். சுமார் 65 வருடங்கள் இலக்கியப் பணி செய்துள்ளார். விருதுகளும், அங்கீகாரங்களும் இவரைத்தேடி வன்னி மண்ணில் கால்பதித்தன. தமிழ்மணி, இலக்கியச்செல்வர், கலைஞர் திலகம், கலைக்கழக விருது, வடக்குக் கிழக்கு மாகாண ஆளுனர் விருது, கலா பூசணம், சாகித்திய மண்டலம், சாகித்திய ரத்னா என அதி உயர் விருதுகளின் சொந்தக்காரர். இவரது நீண்ட இலக்கியப் பணிக்காக யாழ் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி மதிப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

1951ம் ஆண்டு இவரது எழுதுகோல் முதன் முதலில் மையைத் தடவிக்கொண்டது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள், ஆலயங்களுக்கான பதிகங்கள், கவிதைகள் என அந்த பேனா எழுதிக்கொண்டு இருந்தது. 2016ம் ஆண்டு இறுதியில் இவரது கை ஓய்ந்தபோது, வாழ்க்கைக்கும் வெற்றிகளுக்கும் துணையாக நின்ற இவரது மனைவி அந்தப்பேனாவை எடுத்து;

“பேனா உன் தெய்வம்

பேர்விளங்க வைத்ததுவே !

வீணாய்பொழுது போகாமல்

விண் உயர வைத்ததுவே !

கண்ணின் மணி போல

காத்தாய் உன் பேனாவை !

பொற்கைகள் ஓய்ந்ததுவே !

ஓய்வு எடுக்க சென்றதுவே !”

எனத் தன் வலிகள் தோய்ந்த உணர்வை குறித்துக்கொண்டதை அறிந்தேன்.

வன்னி மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றை பண்டாரவன்னியன் என்னும் நாடகம் மூலம் உலகறியச் செய்தவர் மறைந்த முல்லைமணி அவர்கள். தனது 27 வது வயதில் 1960ம் ஆண்டு இந்த வரலாற்று நாடகத்தை இலக்கியச் செழுமையுடன் எழுதியுள்ளார். இலங்கையின் பல பாகங்களில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் இந்த நாடகம் இன்றும் மேடையேற்றப்பட்ட வண்ணம் உள்ளது. இலண்டனில் வழக்கறிஞர் ஸ்ரீகாந்தலிங்கம் என்பவரால் கடந்த ஆண்டுவரை 11 தடவைகள் இவரது பண்டாரவன்னியன் நாடகம் இலண்டன் மேடைகளில் அரங்காடப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த நாடகம் நூல் வடிவம் கொண்டு இதுவரை ஐந்து பதிப்புக்களை கண்டுள்ளதுடன் இந்த 56 ஆண்டுகளில் எண்ணமுடியாத மேடைகளைக் கண்டுள்ளமை வன்னி மண்ணின் வீரத்தின் குறியீடாக அமைந்துள்ளதாக குறிப்பிடலாம்.

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் 1970ம் ஆண்டு இவரது பண்டாரவன்னியன் நாடகம் பற்றி குறிப்பிடும்போது “வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமன்றி நம்பிக்கை குலைந்து தளர்ந்து போயிருக்கும் இலங்கைத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக்குரலும் ஒங்க இந்நாடகம் பயன்படும்” எனத் தெரிவித்தமை இந்த நாடகம் சாகாவரம் பெற்றமைக்கான காரணமாக இருக்கலாம்.

அண்மையில் கனடா வன்னிச் சங்கம் நடாத்திய முல்லைமணியின் அஞ்சலி நிகழ்வில் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் தனது உரையில் வன்னி என்ற விம்பத்தினை மறைந்த முல்லைமணி அவர்களே 1950 களின் மத்திய காலப்பகுதியில் பண்டாரவன்னியன் என்ற சரித்திர நாயகனின் படிமத்தினை வைத்து முன்னெடுத்துச் சென்றார். இதன் பிற்பாடே வன்னி என்ற பெயரும் பண்டாரவன்னியன் என்ற பெயரும் எங்கள் மக்கள் மத்தியில் பரவத்தொடங்கியது. இதனை முல்லைமணி அவர்கள் ஆரம்பிக்காவிட்டால் வன்னியின் சரித்திர சம்பந்தமான விடயங்கள் சிலவேளை வேறுவிதமாகக் கூட அமைந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

90 களின் பிற்பகுதியில் நான் வவுனியா வளாகத்தில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கும்போது வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் இவரது அறிமுகம் கிடைத்தது. இவரது சில நூல்களின் அறிமுக நிகழ்வுகளும் அங்கே இடம்பெற்றது. அக்காலப் பகுதியில்தான் இவரது பண்டாரவன்னியன் நாடக நூல் வாசித்திருந்தேன். ஒரு வீரனின் கதையில் மயங்கி நின்றேனா? அல்லது இவரது எழுத்து நடையில் கட்டுப்பட்டு நின்றேனா தெரியவில்லை ஆனாலும் அக்கதைக் களத்தைப் பற்றிக் துருவித் துருவிக் கேட்கும் ஆவலை தவிர்க்கமுடியவில்லை.

பின் நாட்களில் இவரது பெறாமகளான மிதுனா பாலசிங்கம் அவர்களை நான் திருமணம் செய்ததும் இவரது வீட்டுக்கு சென்று பழகும் சந்தர்ப்பம் இருந்தும் நாட்டு நிலமை எனக்கான சந்தர்ப்பத்தை கட்டுப்படுத்திக் கொண்டது. இவரது நாடக பாத்திரங்களின் பாதிப்பு இன்றும் எனது நாசிக்குள் அடைந்து கிடக்கின்றது. அதனால்தானோ என்னவோ எனது இரு மகள்களையும் பெரிய நாச்சியார் சின்ன நாச்சியார் என நான் எப்போதும் வாஞ்சையுடன் அழைப்பதுண்டு.

சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய ஒரு ஆளுமையின் இழப்பை எவ்வாறு ஈடு செய்யமுடியும்? சிலவேளைகளில் வரலாற்றில் அவை வெற்றிடமாகவே எப்போதும் இருக்கப்போகின்றது.

இவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

 

 

– சுப்ரம் சுரேஷ் | இலண்டன் –One thought on “வன்னி மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றைத் தந்த முல்லைமணி | சுப்ரம் சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *