புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே என் வாழ்க்கையில் முக்கியமான நாள்: முரளிதரன்


Image may contain: 3 people

“சமாதானப் பேச்சுக்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர்கள் அப்பாவிகளைக் கொலை செய்தனர். 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்.” – இவ்வாறு இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வியத்கம அமைப்பின் கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும். கிரிக்கெட் வீரர்களும், ஏனைய துறைசார் வல்லுநர்களும் நாட்டுக்குத் தலைமை தாங்க முடியாது.

இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால், மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள, அரசியல் ரீதியாக முடிவெடுக்கக் கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும். இலங்கையில் சில விடயங்களில் சாதித்த மக்களைப் பாதுகாக்கக் கூடிய ஒருவருக்கே மக்கள் வாக்களிக்கவேண்டும்.

சமாதானப் பேச்சுக்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர்கள் அப்பாவிகளைக் கொலை செய்தனர். 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்.

அச்சம் என்பது பெரும் விடயம். நாங்கள் அச்சத்தின் பிடியில் வாழ்ந்துள்ளோம்.

1977இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் உள்பட அனைத்தும் அழிக்கப்பட்டன. எனது தந்தை தாக்கப்பட்டார். அனைவரும் இந்தியாவுக்குச் சென்றனர். ஆனால், நாங்கள் செல்லவில்லை. நாங்கள் இங்கு வாழவிரும்பினோம். நான் இலங்கையன்.

இரு தரப்பும் தவறிழைத்தன. ஒரு கட்டத்தில் அரசு தவறிழைத்தது. பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர். அவர்கள் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.

நான் பெலவத்தையில் வசித்தவேளை எந்நேரமும் அரசியல்வாதியொருவர் தாக்கப்படலாம் என்ற அச்சத்தால் நாடாளுமன்ற வீதியை பயன்படுத்துவதில்லை. கொழும்பும் அச்சத்துடனேயே வாழ்ந்தது. தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர்.

மக்களுக்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்தத் தேர்தலில் முக்கியம். அவ்வாறான தலைவருக்கே நான் வாக்களிப்பேன்” – என்றார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *