மியான்மரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் | தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி


மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தேர்தலில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கி (70) தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தக் கட்சி சந்தித்த முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளை அந்த நாட்டுத் தேர்தல் ஆணையம் சிறிது சிறிதாக அறிவித்து வரும் நிலையில், தேர்தல் நடைபெற்ற 498 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி தேசிய ஜனநாயக லீக் 348 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது, மியான்மரில் ஆட்சியமைக்கத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு இடங்களை விட அதிகம். எனவே, இன்னும் அனைத்து தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையிலும், அந்த நாட்டில் தேசிய ஜனநாயக லீக் கட்சி அடுத்த ஆட்சியை அமைப்பது உறுதியாகியுள்ளது.
50 ஆண்டு ராணுவ ஆட்சி: மியான்மரில் கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஜனநாயகத்துக்காகப் போராடி அதற்காக நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கி தலைமையிலான கட்சி, அடுத்த ஆட்சியை அமைக்கவிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத் திருப்பம் எனக் கருதப்படுகிறது.
அவரது இந்த வெற்றியின் மூலம், மியான்மர் முழுமையான ஜனநாயகப் பாதைக்குத் திரும்பும் என நம்பப்படுகிறது. எனினும், ராணுவ ஆட்சியின்போது எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படி ஆங் சான் சூ கி-யால் அதிபர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டவரை மணந்தவர் என்ற முறையில், அவர் அதிபராவதை அந்த அரசமைப்புச் சட்டம் தடுக்கிறது. நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. எனவே, அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்தே ஆங் சாங் சூ கி அரசியல் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
“அதிபருக்கும் மேல்’: மியான்மர் அதிபராகப் பதவியேற்க முடியாவிட்டாலும், ஆளும் கட்சித் தலைவர் என்ற முறையில் “அதிபருக்கும் மேலான’ பொறுப்பை ஏற்று நாட்டை வழிநடத்திச் செல்லவிருப்பதாக சூ கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் பாராட்டு: தேர்தலில் சூ கி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதற்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ-மூன், இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *