ரோஹிங்கியா அகதிகளை முறையாக பதிவு செய்ய தொடங்கியுள்ள ஐ.நா


ரோஹிங்கியா அகதிகளை முறையாக பதிவு செய்ய தொடங்கியுள்ள ஐ.நா :  மியான்மருக்கு திரும்ப வாய்ப்புள்ளதா?

வங்கதேசத்தில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளை முறையாக பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இந்நடவடிக்கையினை  ஐ.நா. மற்றும் வங்கதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 2017ம் ஆண்டு மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் உள்ள ராணுவ அரண்கள் மீது முஸ்லீம் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். ரோஹிங்கியா பகுதிகளிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்ற வலியுறுத்தலில் நடத்தப்பட்ட தாக்குதலை காரணம்காட்டி மியான்மர் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது.   இந்த ராணுவ நடவடிக்கை காரணமாக 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கையை இனச்சுத்தகரிப்பு என ஐ.நா. சுட்டிக்காட்டியது.

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள 7 லட்சம் அகதிகளின் விவரங்களை பதியத் திட்டமிட்டுள்ள ஐ.நா. மற்றும் வங்கதேச அரசு அப்பணியினை கூட்டாக தொடங்கியுள்ளது. “வங்கதேசத்தின் முகாம்களில் வாழும் அகதிகள் பற்றிய நம்பகமான தகவலை சேகரிப்பதை நோக்கமாக கொண்டு இப்பணி கூட்டாக தொடங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பிரதிநிதி கரோலின் குலக்.

இந்த தகவல் வரும் நவம்பருக்குள் முழுமையாக தயார் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள வங்கதேச அகதிகள் நல ஆணையர் அபூல் கலாம், “குடும்பம் மற்றும் அகதிகள் பிறப்பு தொடர்பான விவரங்கள் மியான்மருடன் பகிர்ந்து கொள்ளப்படும். அது ரோஹிங்கியா அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லீம்களை மீண்டும் உள்வாங்கிக்கொள்வதற்கான ஒப்பந்தம் மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையே கையெழுத்தாகியிருந்தாலும், அப்பணி மிகவும் தொய்வான நிலையிலேயே இருந்து வருகின்றது.

1982 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மியான்மர் குடியுரிமைச் சட்டத்தின் படி ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் தொடர்ந்து நாடற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதனால் அவர்கள் நாடு திரும்புவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாக உள்ளது என்பதே நிதர்சனம்.

 

Report by,

Migration Correspondent,
AMWW

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *