`யூத்’, `புலி’ படங்களின் ஒளிப்பதிவாளர் நடிகர் நடராஜனுடன் சில நிமிடங்கள்


நடராஜன்

`சதுரங்க வேட்டை’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் ரேர் பீஸ் நட்டியாக வலம் வருபவர், நடிகர் நடராஜன். இவர் தமிழ் மற்றும் இந்தியில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக விஜய் நடிப்பில் தமிழில் உருவான `யூத்’, `புலி’ படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். ஆனந்த விகடனுக்கு நடராஜன் வழங்கிய நேர்காணலின் முதன்மைப் பகுதியை வணக்கம் லண்டன் நன்றியுடன் பிரசுரிக்கின்றது. – ஆசிரியர்

“சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியல. இந்தப் படம் குறித்து பிறகு பேசுறேன்’’ என்று சொல்லிவிட்டு அவர் நடித்த, ஒளிப்பதிவு செய்த படங்கள் குறித்து பேசத் தொடங்கினார் நடராஜன்.

“மணிவண்ணன் சார் இயக்கிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளரா நான் வேலை பார்த்த காலத்திலிருந்தே எனக்கு ராசு மதுரவனைத் தெரியும். என்னோட ஆரம்பகால சினிமா வாழ்க்கையிலிருந்து எந்த மாதிரியான படங்கள் பண்றேன்னு அவர்கிட்ட சொல்லுவேன். `சக்கர வியூகம்’கிற படத்தை நானே தயாரித்து நடித்திருந்தேன். இந்தப் படத்தைப் பார்த்த ராசு மதுரவன், `நல்ல படம்தான் பண்ணியிருக்க. ஆனால், இந்தப் படத்தை நீ இப்படி பண்ணியிருக்கக் கூடாது.

ஒரு நடிகனா நீ வளர்ந்ததுக்குப் பிறகுதான் பண்ணியிருக்கணும். உன் கையிலே காசு இருக்குனு படத்தை தயாரிக்கவும் செஞ்சிட்ட. முதலில் நீ ஒரு நடிகனா வளர்ந்து வா’னு சொல்லி, `முத்துக்கு முத்தாக’ கதையை என்கிட்ட சொன்னார். திருமணத்துக்குப் பிறகு ஒரு ஆணின் வாழ்க்கை எந்தளவுக்கு மாறுதுனு அந்தப் படத்தில் சொல்லியிருப்பார். எனக்கு கதை பிடிச்சிருந்தனால அதில் நடிச்சேன். என் வாழ்க்கையில் ஒரு நல்ல நண்பரா இருந்த ராசு மதுரவனின் இறப்புச் செய்தி என்னை பெரிய அளவில் பாதித்தது. நண்பர்களா அவருடைய இறுதிச் சடங்குல என்ன பண்ண முடியுமோ அதை பண்ணுனோம். அவரை எங்க நண்பர்கள் குழு ரொம்பவே மிஸ் பண்றோம்.”

மணிவண்ணன் படங்களில் வேலை பார்த்த அனுபவம்?

மணிவண்ணன் க்கான பட முடிவு

“அவர் டைரக்‌ஷன் பண்ணுன படங்களில் நான் உதவி ஒளிப்பதிவாளரா வேலை பார்த்திருக்கேன். அப்படிதான் மணிவண்ணன் சார் எனக்குப் பழக்கம். தொடர்ந்து எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவருடைய படங்களில் வேலை பார்த்திருக்கேன். அவர் எல்லா விதமான ஜானரிலும் படங்கள் பண்ணக்கூடிய இயக்குநர். `நூறாவது நாள்’, `அமைதிப்படை’, `இனி ஒரு சுதந்திரம்’ என அவர் பண்ணுன படங்கள் எல்லாமே வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள்தான். அவர் `அமைதிப்படை’ படத்தை டைரக்‌ஷன் பண்றப்போ அவருடைய டீம்லதான் இருந்தேன். படத்தோட கதையைக் கேட்டுட்டு மிரண்டு போயிட்டேன். நாகராஜ சோழன் படத்துக்குள்ளே வர்ற காட்சிகளை சொல்றப்போ எல்லாருமே ஆச்சர்யப்பட்டோம். முக்கியமா இந்தப் படத்துல வசனங்களை ரொம்ப அழகா கையாண்டிருப்பார். அவர்கிட்ட உருவான பல மாணவர்களில் நானும் ஒருத்தன். சுந்தர் சி, செல்வபாரதி, ராசு மாதுரவன், சீமான் நாங்க எல்லாரும் மணிவண்ணன் சார்கிட்டதான் இருந்தோம்.’’

`புலி’ படத்துக்குப் பிறகு தமிழில் உங்களுடைய ஒளிப்பதிவைப் பார்க்க முடியலையே?

விஜய், நட்டி

“நல்ல ஸ்க்ரிப்ட்டுக்காக காத்திட்டு இருக்கேன். கொஞ்சம் பெரிய பட்ஜெட் படமா இருந்தா எல்லாரையும் போய்ச் சேரும். தவிர இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து ஒளிப்பதிவு பண்ணிட்டுதான் இருக்கேன்.’’

கன்னடத்தில் ஹிட் அடித்த `ரிச்சி’ திரைப்படம் தமிழில் தோல்வி அடைந்தது பற்றி?

“`ரிச்சி’ படத்துல `ரிச்சி, செல்வா, ரகு’னு மூணு கேரக்டர்ஸ் இருக்கும். கன்னடத்துல இருந்த கதையைதான் தமிழில் அப்படியே இயக்குநர் எடுத்தார். ஆனா, தயாரிப்பாளர் படத்தை பார்த்துட்டு, `இப்படியே இந்தப் படம் இருக்க வேண்டாம். கொஞ்சம் மாற்றலாம்’னு சொல்லிட்டு வேற மாதிரியான ஸ்டைலில் எடுக்கச் சொன்னாங்க. அது கொஞ்சம் தப்பா போயிருச்சு. சில காட்சிகளை தயாரிப்பாளர் எடிட் பண்ணிட்டாங்க. நான் டப்பிங் பண்ணும்போது இருந்த காட்சிகள் திரையில் பார்க்கும்போது இல்லை. இதை கேட்குற உரிமை எனக்குக் கிடையாது. நடிகனா என்னோட வேலையை முடிச்சி கொடுத்துட்டு வந்துட்டேன்.’’

நேர்காணல்- சனா. நன்றி – ஆனந்த விகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *