நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி!


சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களை கொண்டது வசந்த நவராத்திரி எனப்படுகிறது. சரத்ருது என்பது, புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்கள் ஆகும். இது சாரதா நவராத்திரி எனவும் கூறப்படும்.

உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூஜிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக்கொள்ளுகின்றோம். இதுவே விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி ஆகும்.

அமாவாசைத் தொடர்பின்றி அதிகாலையில் பிரதனம வியாபித்திருக்கும் நாளே நவராத்திரி ஆரம்பதினமாகும். மறுநாட்காலை பிரதமை அற்றுப் போய் விடுமாயின் முதல் நாளில் விரதம் கொள்ளல் வேண்டும். பிரதமை தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.

இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்பது முறையே பார்வதி, லட்சுமி, சரஸ்வதியை குறிக்கும். ஆதலால் முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டி சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு ஒக்ரோபர் [தமிழுக்கு புரட்டாதி 26] மாதம் 13.10.2015 திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.

வீடுகளில் நவராத்திரி பூஜையை ஆனந்தமான கொண்டாட்டமாக கொள்வர். தூய்மையுடனும் அழகுப் பொலிவுடனும் திகழும் கொழுமண்டபத்தை அமைத்து அங்கு பூர்வாங்க பூஜைகளுடனும், சங்கல்ப பூர்வமாகவும் முறைப்படி கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

ஒரு செம்பில் சுண்ணாம்பு தடவி சுற்றிலும் குங்கும பொட்டு வைக்கவேண்டும். செம்பினுள் பச்சரிசியை நிரப்ப வேண்டும். பிறகு மாவிலையையும், மஞ்சள் பூசிய தேங்காயையும் செம்பின் மீது கும்பமாக வைத்து சுற்றிவர மண்பரப்பி அதிலே நவதானியங்களிட்டு முளைக்கவிடுவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நவதானியங்களின் செழிப்பைத் தமது குடும்பவளத்தின் நன்மை தீமைகளை அறியும் சகுனமாகக் கொள்வர்.

வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேடமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக்கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7, 9 என்ற ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது முறைமை.

navarathiri

நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

பத்தாம் நாளான விஜயதசமி நாள் புதிய தொழில் தொடங்க உகந்த நன்னாளாகும். அன்றைய தினம் பாடசாலைகளில் பாலகர்களுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பெறும். இரவு பால் நிவேதனம் செய்து பொம்மைகளைப் படுக்க வைக்க வேண்டும். மறுநாள் பூஜையிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து அடுத்த வருடத்துக்காக அம்பாளை வரவேற்க தயாராக வேண்டும்.

நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாளினுல் வரும்போது எண்ணெய் தேய்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.

 

நன்றி : ஒரு துளி இணையம்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *